50 நெசவாளர்களுடன் இணைந்து 5.5. கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் புடவைகள் பிராண்டை உருவாக்கியுள்ள சகோதரிகள்!
புடவை என்றதும் சிகப்பு, பச்சை, நீலம் என வண்ணமயமான காட்சியே நம் கண்முன் விரியும். சிலர் புடவை அணிந்துகொள்வதை விசேஷ தருணங்களுடன் பொருத்திப் பார்ப்பார்கள். ஆனால் சிலருக்கோ அது உணர்வுகளுடன் இணைக்கபட்டதாக தோன்றும். சிறு வயது ஞாபகங்களுடன் ஒன்றியிருக்கும். புடவைகளை அம்மா அழகாக அடுக்கிவைத்திருந்த அலமாரியோ அல்லது பாட்டியின் மிருதுவான உணர்வு தரும் புடவையோ நினைவிற்கு வரும்.
சுஜாதா, தானியா பிஸ்வாஸ் இரு சகோதரிகளும் கரக்பூர் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வளர்ந்தவர்கள். தொழில்முனைவர்களான இவ்விருவருக்கும் புடவைகள் ஒரு நெருக்கமான உணர்வையே அளித்துள்ளது.
இவ்விருவரும் தங்களது கார்ப்பரேட் பணியைத் துறந்து கைத்தறி புடவைகள் பிராண்டை உருவாக்க புடவைகள் தொடர்பான அவர்களது சிறுவயது நினைவுகளே உந்துதலளித்துள்ளது. இவர்களது கைத்தறிப் புடவைகள் இந்திய கிராமப்புறங்களில் இருந்து பெறப்படுகிறது.
Suta – பெயர்க்காரணம்
சகோதரிகள் இருவரும் 2016-ம் ஆண்டு Suta முயற்சியைத் துவங்கியிருந்தாலும் இவர்களுக்குப் புடவைகள் மீதான ஆர்வம் குழந்தைப்பருவதிலேயே துவங்கியது. அவர்கள் நினைவுகூறுகையில்,
“நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எங்களது தோட்டத்தில் கண்ணாமூச்சி விளையாடுவோம். அப்போது கொடியில் இருக்கும் எங்கள் பாட்டியின் புடவையின் பின்னால்தான் ஒளிந்துகொள்வோம். அதைச் சுற்றி ஓடுவோம். அந்தப் புடவையின் மிருதுத்தன்மை எங்களது முகத்தையும் சருமத்தையும் வருடிச் செல்லும்,” என்றனர்.
இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி கார்ப்பரேட் பணியில் சேர்ந்த பிறகும்கூட இவர்கள் மனதில் புடவைகளின் நினைவுகள் நீங்காமல் இடம் பிடித்திருந்தது.
சுஜாதா சிஈடி புவனேஷ்வரில் பொறியியல் படிப்பும் ஐஐஎஃப்டி டெல்லியில் எம்பிஏ-வும் முடித்துள்ளார். எஸ்ஸார் குழுமம், ஜிண்டால் குழுமம், ஐஐடி மும்பை போன்றவற்றில் சுமார் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தானியாவும் பொறியாளர். ஐஐஎம் லக்னோ பட்டதாரி. சுமார் மூன்றாண்டுகள் டாடா குழுமத்திலும் ஐபிஎம் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். இவ்விரு சகோதரிகளும் இணைந்து செயல்பட விரும்பி புடவை பிராண்டை உருவாக்கினர்.
”ஜவுளி மீதும் கலை வடிவம் மீதும் எங்களுக்கு இருந்த ஆர்வமும் திறமையான, தகுதிவாய்ந்த கைவினைஞர்களின் நிலையை மேம்படுத்தவேண்டும் என்கிற தீவிர விருப்பமுமே எங்களது பணியை விட்டு விலகி எங்களது கனவை நோக்கி நகரச் செய்தது. நூல் எங்களை ஒரு காந்தம் போல இழுத்தது,” என்றனர்.
Suta என்றால் நூல் என்று பொருள். அது மட்டுமல்ல ஆங்கிலத்தில் சுஜாதா என்கிற பெயரின் முதல் இரண்டெழுத்து Su. அதேபோல் தான்யாவின் பெயரின் முதல் இரண்டெழுத்து Ta. இவை இரண்டும் இணைந்தே Suta என்கிற பெயர் வைக்கப்பட்டது.
கைத்தறி மீதான ஆர்வம்
இருவருக்கும் இந்தத் துறையின் மீதிருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக Suta துவங்கப்பட்டிருந்தாலும் இந்த பிராண்டின் பயணம் பல தடைகளைக் கடந்து வந்துள்ளது. அதிக சௌகரியம் நிறைந்த கார்ப்பரேட் பணிகளைத் துறந்த பிறகு சகோதரிகள் இருவரும் பல முயற்சிகளில் ஈடுபட்டனர். தயாரிப்புகளை போட்டோஷூட் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். அதன் பிறகு இவர்களது உண்மையான ஈடுபாடு புகைப்படங்களில் இல்லை என்பதையும் தயாரிப்புகளில் இருப்பதையும் உணர்ந்தனர்.
”நாங்கள் சில ஆடைகளை வடிவமைத்து அவற்றை பதிவிட்டோம். ஆனால் தயாரிப்புகளை ஷூட் செய்வதற்கு மக்கள் எங்களை அணுகவில்லை. மாறாக தயாரிப்பு குறித்த விசாரணைகளே அதிகம் வரத்துவங்கியது,” என்றார் சுஜாதா.
அதன் பிறகு இவர்களது பயணம் உடனடியாக திசை மாறத் துவங்கியது. இந்திய கிராமங்களின் மூலை முடுக்குகளில் எல்லாம் சரியான துணியையும் திறமையான நெசவாளர்களையும் தேடத் துவங்கினார்கள். இந்தத் தேடலைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசம், மேகாலயா, பனாரஸ் புடவைகளின் தாயகமான வாரனாசி, ஒடிசாவின் மனியாபன்தா, குஜராத்தின் கட்ச், மேற்குவங்கம் ஆகிய பகுதிகளைச் சென்றடைந்தனர். சாந்திபூர், தனியாகாளி ஆகிய இரு பகுதிகளிலும் இவர்களது அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இரு பெண்கள் துவங்கிய Suta முயற்சி மும்பையில் 20 பேர் அடங்கிய குழுவுடனும் நாடு முழுவதும் 50 நெசவாளர்களுடனும் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. அதன் அழகிய கைத்தறிப் புடவைகள் ஜாம்தானி, மல்மல், மல்கேஷ், பனாரசி, முழுமையாக கைகளால் நெய்யப்பட்ட புடவைகள் என பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. சிறியளவில் துவங்கப்பட்டிருப்பினும் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதுடன் சர்வதேச சந்தைகளுக்கும் அனுப்பப்படுகிறது.
”கோபிதா என நாங்கள் அன்புடன் அழைக்கும் நெசவாளருடனும் அவரது மருமகளுடனும் முதலில் பணிபுரியத் துவங்கினோம். எங்களது முதல் புடவைத் தொகுப்பு மல்மல் புடவைகள். அந்த சமயத்தில் கோபிதாவிடமிருந்து 3-4 நாட்களுக்கு ஒருமுறை ஒரு புடவையை பெறுவோம். புடவையில் இணைக்கப்படும் நூல் உருண்டை போன்ற அமைப்பை (pom-pom) அவரது மருமகள் எங்களுக்கு செய்து கொடுப்பார்,” என்றார்.
விரைவிலேயே சுஜாதா, தானியா இருவரும் சுற்றுவட்டாரத்தில் இருந்த நெசவாளர்களை வணிகத்தில் இணைத்துக்கொண்டனர். இது சாந்திபூர், தனியாகாளி கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக மேம்பட வாய்ப்பாக அமைந்தது.
”நெசவாளர்கள் தாங்கள் ஈடுபடும் பணியை நினைத்து பெருமைப்படுகின்றனர். தற்போது நிரந்தர வருவாய் ஈட்டுகின்றனர். முந்தைய தலைமுறையினரின் கைவினைக் கலை அழிந்துவிடாமல் பாதுகாக்க அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் இந்த வணிகத்தில் ஈடுபடுத்த விரும்புகின்றனர்.”
Suta ராணிகள்
’ஒவ்வொரு புடவைக்கும் அதற்கே உரிய கதை உள்ளது’ – இதை சுஜாதா, தானியா இருவரும் திடமாக நம்புகின்றனர்.
Suta புடவைகளின் தனித்துவம் வாய்ந்தது. இவர்கள் தற்போதைய சந்தையை இலக்காகக் கொண்டு செயல்படுவதால் புடவைகளுக்கு அதற்கேற்றவாறான பெயர்களை வைத்துள்ளனர். Suta வாடிக்கையாளர்கள் ’Suta ராணிகள்’ என அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
”எங்களது புடவைகளை மூன்று முதல் நூறு வயதுள்ளவர்கள் வரை அணியலாம்,” என்கிறார்கள் இந்தச் சகோதரிகள்.
இவர்கள் வழக்கமான மின்வணிக முறையில் செயல்படுவதில்லை. சமூக ஊடகங்கள் வாயிலாக வண்ணமயமான கதைகளுடன் Suta ராணிகளின் புகைப்படங்களைப் பதிவிடுகின்றனர். சில சமயம் புடவை அதிக கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருக்கும். மற்றுமொறு சந்தர்ப்பத்தில் Suta ராணிகள் கவனத்தை ஈர்ப்பார்கள்.
”எங்களைப் பற்றி எங்களது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிந்துகொள்ளலாம். புடவையைப் பற்றிய கதை, சில நிகழ்வுகள், புடவைகள் குறித்து அதிகம் பகிர்ந்துகொள்ளப்படாத தகவல்கள் போன்றவற்றை நாங்கள் ஒவ்வொரு பதிவிலும் விவாதிப்போம்,” என்று இருவரும் குறிப்பிட்டனர்.
மெதுவான அதேசமயம் நிலையான வளர்ச்சி
சுஜாதா, தானியா இருவரும் தங்கள் வணிகத்தை படிப்படியாகவே வளர்ச்சியடையச் செய்தனர். வணிகம் நிலையாக உருவான பிறகே பெரியளவில் செயல்பட்டனர்.
சகோதரிகள் இருவர் மட்டுமே வணிக செயல்பாடுகளில் ஈடுபட்ட காலகட்டத்தில் முடிந்தவரை சிக்கனமாகவே செலவிட்டனர்.
”அலுவலகத்தை சுத்தப்படுத்துவது, புடவைகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்காக பேக் செய்வது என அனைத்தையும் நாங்களே செய்தோம். விற்பனையாளர்கள் சந்திப்பிற்கு செல்லும்போது காரில் செல்வதைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்வோம்,” என்று நினைவுகூர்ந்தனர்.
2017-ம் ஆண்டு மும்பையில் நடந்த கண்காட்சி ஒன்றில் இவர்களது ஸ்டால் தீப்பிடித்த சம்பத்தை வேதனையுடன் நினைவுகூர்ந்தார் சுஜாதா. அப்போது அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். அதிக சிரத்தையுடன் ஒன்றுதிரட்டி வைத்திருந்த புடவைகள் அனைத்தும் அவர்கள் கண் முன்னே தீக்கு இரையானதைக் கண்டு மனம் கலங்கிப் போயினர்.
”மண்ணும் நெருப்பும் படர்ந்திருந்த புடவைகளை கையில் வைத்திருந்தபோது காயம்பட்ட நம் குழந்தையை கையில் ஏந்தியிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது,” என்றார்.
இது போன்ற தருணங்களிலும் இவர்கள் மனமுடைந்து போய்விடவில்லை.
நெருக்கடியான சூழல் ஏற்படும்போதும் சுஜாதாவும் தானியாவும் குடும்பத்தின் ஆதரவை நாடினர். முக்கியமாக ஒருவர் மற்றவருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். சகோதரிகள் இருவருக்குமிடையே ஒன்றரை வயது வித்தியாசம் மட்டுமே. இருவரும் தங்களது தனித்துவமான திறனைக் கொண்டு தங்களது பிராண்டை நிலையாக வளர்ச்சியடையச் செய்துள்ளனர்.
“இந்த ஆண்டு 5.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறோம். ஒவ்வொரு மாதமும் சுமார் 10 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறோம்,” என்றனர்.
அடுத்த ஆண்டு வருவாயை இருமடங்காக உயர்த்தவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில் இந்தச் சகோதரிகளுக்கு வணிகம் என்பதையும் தாண்டி Suta அவர்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது.
”எங்களைப் பொறுத்தவரை Suta நாங்கள் ஈடுபடும் பணி மட்டுமல்ல. எங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி. எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் முழுமையாக ஒன்றிணைந்துவிட்டது,” என்கிறார் தானியா.
ஆங்கில கட்டுரையாளர் : சுத்ரிஷ்னா கோஷ் | தமிழில் : ஸ்ரீவித்யா