புதிய வேலையில் சேரும் முன்பு நீங்கள் கேட்க வேண்டிய 7 கேள்விகளும் கைடன்ஸும்!
பணியில் திருப்தி, வெற்றி வாய்ப்புகள், எதிர்கால வளர்ச்சி உள்ளிட்ட பலவற்றையும் ‘கவர்ச்சிகரமான சம்பளம்’ கண்களை மறைக்கும் என்பதை கவனத்தில் கொள்க.
உங்கள் பணி வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டுமெனில், உங்களுக்கு பணி நியமன உத்தரவு, அதாவது வேலைக்குச் சேருமாறு உங்களுக்கு அழைப்புக் கடிதம் வரும்போது நீங்கள் உங்களுடைய போக்குவரத்து வசதிகள், நிறுவனத்தில் நிலவும் கலாச்சாரம் உள்ளிட்டவை பற்றி அறிந்து கொண்டு பணி நியமன உத்தரவுக்கு செவி சாய்ப்பது நல்லது.
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணி நியமன கடிதத்தைப் பெறும் சூழ்நிலையில், கொஞ்சம் யோசித்து இறங்குங்கள். பணி நியமன உத்தரவு, உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது என்பது உறுதியான மகிழ்ச்சியில் பணி நியமன ஆணையில் ஒப்புதல் கையெழுத்து இடப் போகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்!
ஏனெனில், நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், உங்களின் அந்த உற்சாகம் விரைவில் வருத்தமாக மாறலாம். நம்பி வேலைக்குச் சேர்ந்த நீங்கள், பல்வேறு சிக்கல்களால் அலுவலகச் சூழ்நிலைகள் பிடிக்காமல் சில வாரங்களுக்குப் பிறகு வேலையை விட்டுவிடுவதுதான் நீங்கள் விரும்புவதா? நிச்சயமாக இருக்காது.
ஆகவேதான், சில பணி நியமன ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஒப்புதல் தெரிவிக்கும் முன்னர் சில விஷயங்களை கவனமாகப் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஒரு பணி நியமன உத்தரவில் கையெழுத்திட்டு உடனடியாக பணியில் சேருவதுதான் உங்கள் லட்சியமாகவே இருக்கலாம். ஆனால், சரியான வேலையில்தான் சேருகிறோமா, சரியான பணிதானா என்பதை முடிவு செய்வதும் சம முக்கியத்துவம் வாய்ந்ததே. சம்பளம் முக்கியமான காரணி என்றாலும் அதுவே மற்ற காரணிகளை மறைக்கடிக்கும் காரணியாக இருந்து விடக்கூடாது.
எனவே, ஒரு புதிய வேலை வாய்ப்பை ஏற்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும்போது, உங்களிடம் சரிபார்ப்புப் பட்டியல் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன், அதைப் பற்றி வெட்கப்படாமல் முக்கியமான கேள்விகளைக் கேட்பதை உறுதி செய்து கொள்வதும் உங்கள் பொறுப்புதான்.
என்னென்ன விஷயங்களைப் பார்ப்பது, என்னென்ன கேள்விகளை கேட்பது என்பது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதோ உங்களுக்கு அதற்கான வழிகாட்டி ரெடி:
1. அலுவலகம் போய் வரும் கால நேரம் நமக்கு ஒத்து வருமா?
முதல் கேள்வி... அலுவலகம் எங்கு உள்ளது, நம் இருப்பிடத்திலிருந்து போய் வர எத்தனை நேரம் பிடிக்கும் போக்குவரத்து முறை என்ன, டூவீலர் என்றால் எத்தனை கி.மீ தூரம் உள்ளது, மாதம் எரிபொருள் செலவு எவ்வளவு, உடல் களைப்பு, வண்டியின் தேய்மானம் உள்ளிட்டவற்றை மதிப்பிட வேண்டும். பொதுப் போக்குவரத்து என்றால் அலுவலக நேரம் ஒத்து வருமா? திரும்பி வரும்போது அந்த நேரத்துக்கு பொதுப் போக்குவரத்து இருக்குமா? அல்லது நிறுவன வாகனம் அழைத்துக் கொண்டு விடுமா போன்றவற்றை கவனிக்க வேண்டும்.
நீண்ட தூரம் பயணித்து அலுவலகம் சென்று வருவது முதலில் கொஞ்ச காலத்துக்கு வேலை கிடைத்த குஷியில் தெரியாது. பிறகு போகப் போக களைப்பை ஏற்படுத்தி அலுவலகப் பணியில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அல்லது, அலுவலகப் பணியில் மூழ்கி குடும்பம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை கவனிக்க முடியாமல் போகலாம். இது வெறுப்பை உருவாக்கி உங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக முளைக்கலாம்.
இப்படியிருந்தும் இந்த வேலையை விட மனதில்லையா? வீட்டிலிருந்து பணியை செய்யும் வாய்ப்பு இருக்கிறதா என்பதைப் பார்க்கவும். அப்படிப்பட்ட வாய்ப்பில்லை எனில், உங்கள் குடியிருப்பை நிறுவனத்துக்கு அருகில் மாற்றிக் கொள்ளப் பார்க்க வேண்டும்.
2. நிறுவனத்தின் செல்வாக்கு எப்படி?
நிறுவனத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் கடைசி விஷயம், நீங்கள் இணைந்த அடுத்த சில மாதங்களில் நிறுவனம் இழுத்து மூடிவிடக் கூடாது என்பதுதான். இப்படியானால், மீண்டும் நீங்கள் பூஜ்ஜியத்துகு திரும்பி விடுவீர்கள். நீங்கள் இந்த வேலைக்காக செய்த முயற்சி, கால நேரம் அத்தனையும் வீண்.
எனவே, உங்களுக்கு நீங்கள்தான் உதவியாளர். நிறுவனத்தின் தரத்தைத் தெரிந்துகொள்ள Glassdoor, Google, Better Business Bureau மற்றும் பிற இடங்களில் உள்ள நிறுவனத்தைப் பற்றிய மதிப்புரைகளைப் படித்து, மற்றவர்கள் நிறுவனத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கவும். மதிப்புரைகள் எப்பொழுதும் 100 விழுக்காடு துல்லியமாக இல்லாவிட்டாலும், அவை நிறுவனத்தின் தற்போதைய நிலை அல்லது மக்கள் அதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு பரந்துபட்ட பார்வையை உங்களுக்கு வழங்குகலாம்.
3. எனது தினசரி வேலைப் பொறுப்புகள் என்ன?
உங்களைப் பணிக்கு அமர்த்தும் நிர்வாகத்தினர் உங்கள் பொறுப்புகளை அடுக்கி உங்களைப் பயமுறுத்த விரும்பாதவர்களாக இருப்பார்கள். அது அவர்கள் நியாயம். ஆனால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமெனில், அலுவலகப் பணியில் உங்கள் பொறுப்புகள் என்னென்ன என்பதை நீங்களே கேட்டு தெரிந்துகொள்வதுதான்.
உங்கள் எதிர்பார்ப்புகள், அவர்களின் எதிர்பார்ப்புகளை விவாதிப்பது உங்கள் பொறுப்பே. எனவே, தவறான பணியை நமக்குக் கொடுத்து விட்டார்கள் என்று நீங்கள் பிற்பாடு பணி திருப்தி இல்லாமல் போவதை தடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
4. உங்கள் வேலையில் வெற்றியை அளவிடுவது எப்படி?
ஆரம்ப கட்டங்களில் இந்தக் கேள்வியைக் கேட்பது எதிர்காலத்துக்கான ஒரு வரைபடத்தை உங்களுக்கு வழங்கும். வெவ்வேறு நிறுவனங்கள் செயல்திறனை அளவிட வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளன, எடுத்துக்காட்டாக, நிறுவனங்கள் ஊழியர்கள் திறனை, வேலையை மதிப்பிட ‘அனலடிக்ஸ்’ மற்றும் ‘மெட்ரிக்ஸ்’ போன்ற அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றன.
5. நிறுவன பணிச்சூழல், கலாச்சாரம் எப்படி?
இந்தக் கேள்வி முக்கியமானது. இதை நீங்கள் சரிபார்ப்பது அவசியம். இது உங்கள் ஒட்டுமொத்த பணி அனுபவத்தை பாதிக்கும்.
ஒரு நிறுவனத்தின் கலாச்சாரத்தில் பணிச்சூழல், தலைமைத்துவ பாணிகள், பார்வை, மதிப்பீடுகள் அல்லது விழுமியங்கள் பன்முகத்தன்மைக்கான திறந்த தன்மை மற்றும் பணியாளர் ஈடுபாடு முயற்சிகள் போன்ற காரணிகள் அடங்கும்.
இது குறித்த சந்தேகங்களை எழுப்பி உண்மை நிலை அறிவது நமக்கு வசதியான, நேர்மறையான பணிச்சூழலை உறுதி செய்யும்.
6. தொழில்ரீதியான வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என்னென்ன?
வேலை திருப்தி என்பது பணக் காரணியால் மட்டும் வரையறுக்கப்படவில்லை. எனவே, நீண்ட காலத்துக்கு நிறுவனத்தில் உங்கள் பங்களிப்பின் வளர்ச்சி வாய்ப்புகளை மதிப்பிடுவது மிகவும் முக்கியமானது. பயிற்சி திட்டங்கள், வழிகாட்டல் வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான வழிகள் பற்றி விசாரிக்கவும். தொடர்ச்சியான கற்றலை வளர்க்கும் ஒரு வேலை, நீண்டகால பணி வாழ்க்கைத் திருப்தியை ஏற்படுத்திக் கொள்ள கணிசமாக பங்களிக்கிறது.
7. என் பதவி எனக்கு உற்சாகத்தை தருகிறதா?
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்ட பிறகு, நிறுவனத்தின் கண்ணோட்டம் மற்றும் வாய்ப்புகள் உங்களை உற்சாகப்படுத்தினால், உங்களை மீண்டும் கேட்டுக் கொள்ளுங்கள்:
நான் நீண்ட காலத்துக்கு இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பேனா, பார்க்க முடியுமா?
இந்தக் கேள்விக்கான விடை ‘ஆம்’ என்று உங்கள் மனம் கூறினால், உங்களுக்கு வாழ்த்துகள். ஆனால், இதில் சிறு சந்தேகமோ இடையூறோ, மனம் ஒப்பாமல் இருந்தாலோ வேண்டா வெறுப்பாக அந்த வேலையை எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது.
ஏனெனில், அப்படி எடுத்துக் கொண்டால், முட்டுச்சந்தில் போய் முட்டிக் கொள்ளும் நிலையமையாக அமைந்து விடும். ஆகவே, உங்களுக்கு மேற்கூறிய வகைகளில் உற்சாகத்தை ஒரு வேலை கொடுக்காது என்று நீங்கள் நினைத்தால், அந்த வேலையை வேண்டாம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
சரி... இறுதியாக என்ன?
கவர்ச்சிகரமான சம்பளம் என்பது மற்ற விஷயங்களை நீங்கள் பார்ப்பதிலிருந்து உங்களைத் தடுக்கும். பணியில் நமது திருப்தி, நிர்வாகிகளின் திருப்தி, மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் நிதிக் கவர்ச்சையை விடவும் நன்றாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய முக்கியமான கேள்விகளை எந்த ஒரு பணி நியமன ஒப்பந்தத்தில் ஏற்புடை கையெழுத்து இடும் முன்பு பரிசீலித்தால் உங்கள் மதிப்புகள், இலக்குகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றுடன் ஒத்துப்போகும் நல்ல தகவல் அறிந்த முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஆக, மேற்கூறிய காரணிகளை அலசிய பிறகு வேலையை ஏற்றுக் கொள்வது என்பது நிறுவனத்தைப் பற்றிய விரிவான புரிதலையும் நீண்ட காலத்துக்கு மிகவும் நிறைவான மற்றும் பலனளிக்கும் வாழ்க்கைக்கு பங்களிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
Edited by Induja Raghunathan