‘Paytm நிறுவனத்தைக் கட்டமைத்த பள்ளி ஆசிரியர் மகன்’ - ஐபிஓ கனவை நினைவாக்கிய ‘விஜய் சேகர் சர்மா’
பங்கு வெளியீட்டின் முதல் நாள் வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவை மீறி, பங்குச்சந்தையை நோக்கிய பேடிஎம் வெற்றிப்பயணம் வியக்க வைப்பதாகவும், ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கிறது.
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவின் வெற்றிக்கதை உற்சாகம் அளிப்பதாகவே இருக்கிறது. சாதாரணப் பின்னணியைச் சேர்ந்த ஒருவர் கோடீஸ்வர தொழிலதிபராக உருவாகி இருக்கிறார் என்பது மட்டும் அல்ல, தொழில்முனைவின் மீதும், இந்திய ஸ்டார்ட் அப் பரப்பின் மீதும் அவருக்கு இருக்கும் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் அடையாளமாகவும் அவரது வெற்றிக்கதை அமைகிறது.
பத்தாண்டு காலத்தில் பேடிஎம் நிறுவனம் பெற்றிருக்கும் பிரம்மாண்டமான வெற்றி வியக்க வைக்கும் நிலையில், விஜய் சேகர் சர்மாவின் தொலைநோக்கும், டிஜிட்டல் உலகம் பற்றிய புரிதலும் நிறுவன வெற்றிக்கு அடித்தளமாக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு வெளியீட்டுடன், பேடிஎம் பங்குச்சந்தையில் நுழைந்து கவனத்தையும் ஈர்த்திருக்கும் நிலையில், அதன் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவின் வெற்றிக்கதையை திரும்பி பார்க்கலாம்.
எளிய துவக்கம்
இந்தியாவின் இளம் கோடீஸ்வர தொழில்முனைவோராக உருவான விஜய் சேகர் சர்மாவின் நிகர் மதிப்பு வியக்க வைப்பதாக இருந்தாலும், அவரது ஆரம்பம் எளிமையாகவே இருக்கிறது. சர்மாவின் சொந்த மாநிலம் உத்தரபிரதேசம். மாநிலத்தின் அலிகாரில், பள்ளி ஆசிரியரின் மகனாக பிறந்து வளர்ந்தவர், தில்லியில் பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.
சிறிய நகரின் பின்னணியில் வளர்ந்தவருக்கு நாட்டின் தலைநகரான தில்லி வாழ்க்கை சவாலாகவே இருந்தது. அதிலும், குறிப்பாக, ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாதது கல்லூரி நாட்களில் அவருக்கு பெரும் தடையாக இருந்தது. எல்லாவற்றையும் இந்தியிலேயே பேசி பழகியவர், ஆங்கிலம் சரியாகத் தெரியாததால், கடைசி பெஞ்சில் தஞ்சம் அடைந்து வகுப்புப் பாடங்களைக் கவனிப்பதையும் விட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
இப்படி மன உளைச்சலுக்கு உள்ளான சூழலிலும், இந்த நிலையில் இருந்து வெளியே வர வேண்டும் எனும் உத்வேகம் அவருக்கு இருந்தது. அதன் பயனாக ஆங்கில அகராதிகள் உதவியோடு ஆங்கில மொழியில் பயிற்சி பெற்றார்.
ஒரு கனவு
ஆங்கிலப் பயிற்சியின் ஒரு பகுதியாக பழைய பத்திரிகைகளை வாங்கி படித்தவர் ஒரு முறை ஃபார்டியூன் பத்திரிகை கட்டுரைகள் மூலம் சிலிக்கான் வேலி மற்றும், இணையம் பற்றி தெரிந்து கொண்டு, தான் இருக்க வேண்டிய இடம் இது தான் என நினைத்தார்.
ஆனால், அவரது சிலிக்கான் வேலி கனவுக்கு பெரும் தடை இருந்தது. 1990-களில் ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ பட்டம் பெற வேண்டும் என்றால் 2 லட்சத்திற்கும் மேல் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
இந்த அளவுத் தொகை தனக்கு சாத்தியமில்லை என நினைத்தவர், இத்தகைய பட்டதாரிகளை பணிக்கு நியமிக்கும் அளவுக்கு ஒரு நாள் செல்வம் ஈட்டுவேன் என தனக்குள் சொல்லிக்கொண்டார்.
கல்லூரியில் இருந்த போதே அவர் தேடியந்திரம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். அந்த நிறுவனத்தை விற்றுவிட்டு One97 Communications நிறுவனத்தைத் துவக்கினார். மொபைல் நிறுவனங்களுக்கான உள்ளடக்கச் சேவையை நிறுவனம் வழங்கியது.
இந்நிலையில், 2010ல் அவர் One97 Communications-ன் அங்கமாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ’பேடிஎம்’ சேவையை துவக்கினார்.
டிஜிட்டல் வாலெட் மூலம் பரிவர்த்தனை சேவையை வழங்கிய பேடிஎம் மெல்ல வளர்ச்சி அடைந்த நிலையில், உபெர் நிறுவனம் அதை பரிவர்த்தனை வசதியாகத் தேர்வு செய்தது மற்றும் 2016ம் ஆண்டின் பணமதிப்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கு பின் வேகமான வளர்ச்சி கண்டது.
இதனிடையே, ரத்தன் டாடா மற்றும் அலிபாபாவின் ஜாக் மா, சாப்ட்பேங்கின் மாயசோஷி சன் ஆகியோரின் முதலீட்டை பெற்ற பேடிஎம் டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டும் அல்லாமல் இ-காமர்ஸ் மேடையாகவும் உருவாகி இன்று பொதுப் பங்குகளை வெளியிட்டுள்ளது.
ஆரம்பச் சம்பளம்
2017ம் ஆண்டு இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக பட்டியலிடப்பட்ட விஜய் சேகர் சர்மாவின் ஆரம்ப கால சம்பளம் பத்தாயிரம் ரூபாயாக மட்டுமே இருந்ததால், திருமணத்திற்காக அவருக்கு பெண் தேடுவது பெரும் சிக்கலாக இருந்தது. அவரது சம்பளத்தைத் தெரிந்து கொண்ட பின் பெண் வீட்டார் அதன் பின் திரும்பி அழைப்பதை தவிர்த்து விடும் நிலை இருந்தது.
திருமண வரன் தேடுவதில் ஏற்பட்ட இந்த சிக்கல் காரணமாக, நிறுவனத்தை மூடிவிட்டு, வேறு வேலையை தேடிக்கொள், 30 ஆயிரம் கிடைத்தாலும் போதும் என அவர் தந்தை கூறியதாக விஜய் சேகர் சர்மா கூறியிருக்கிறார்.
தகுதியில்லாத பிரம்மச்சாரியாக இருந்த நிலையில் இருந்து இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக அவர் உருவானதன் பின்னே,
“தொழில்முனைவுத் திறனும், தன்னம்பிக்கையும் கலந்திருக்கிறது. நீங்கள் சிறிய நகரில் இருந்து அல்லது பெரிய நகரில் இருந்து வந்தவர் என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல ஈடுபாடு தான் முக்கியம்,” என்று அவர் கூறியிருக்கிறார்.
நிறுவனத்தை மூடிவிடுமாறு தந்தை கூறிய நிலை மாறி, சீனாவின் ஆன்ட் குழுமம் பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்த போது, அதன் சந்தை மதிப்பு உயர்ந்து,
விஜய் சேகர் சர்மாவின் நிகர மதிப்பு தொடர்பாக இந்தி பத்திரிகையில் செய்தி வெளியானதை பார்த்து, ’உன்னிடம் நிஜமாகவே இவ்வளவு பணம் இருக்கிறதா?’ என அவர் அம்மா வியந்து கேட்கும் நிலையும் உருவானது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை அவரது மதிப்பு 2.4 பில்லியன் டாலர் என மதிப்பிட்டுள்ளது.
பெரும் பாய்ச்சல்
தொழில்முனைவிலும், இந்திய ஸ்டார்ட் அப் பரப்பிலும் விஜய் சேகர் சர்மா கொண்டிருந்த நம்பிக்கையே இந்த அளவு வளர்ச்சியை சாத்தியமாக்கியுள்ளது.
"நாங்கள் நிறுவனத்தை துவங்கிய பிறகு ஸ்டார்ட் அப் மனநிலையில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது. அப்போது முதலீட்டாளர்களே இல்லை. ஆனால் இன்று இந்தியாவில் எதையும் உருவாக்கலாம். இந்திய தொழில் முனைவோராக இருந்தால் உலகின் எந்த முதலீட்டாளரையும் உங்களால் சந்திக்க முடியும்,” என இது பற்றி அவர் கடந்த ஆண்டு யுவர்ஸ்டோரி டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் பேசும் போது குறிப்பிட்டிருக்கிறார்.
ஃபிளிப்கார்ட்டின் சச்சின் பன்சல் மற்றும் ஒலாவின் பவிஷ் அகர்வால் போன்றோரே தனக்கான ஊக்கம் என்றும் அவர் கூறினார்.
“இதை பலமுறை கூறியிருக்கிறேன். இந்திய இணைய பரப்பில் நிகழ்ந்துள்ளவைகளுக்கு பன்சல்களும், பாவிஷுமே காரணம். இந்த முன்னோடிகள் நிழலில் தான் எனது பயணம் அமைந்திருக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேடிஎம் பாதை பற்றியும் அவருக்குத் தெளிவான திட்டமும், தொலைநோக்கும் இருந்துள்ளது. நான் நிதிநுட்ப துறையை பின் தொடர்வதில்லை, வாடிக்கையாளர் பயணத்தை பின் தொடர்கிறேன் என அவர் கூறியிருக்கிறார்.
”மேடிஎம் லாப விகிதம் இல்லாத வர்த்தகத்தில் இருக்கிறது. உள்ளடக்கம், வர்த்தகம், விளம்பரம் மூலம் தான் வருவாய் கிடைக்கும். இவற்றின் மீது நிதிச்சேவைகளை உருவாக்குவோம்,” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
பங்கு வெளியீடு
பேடிஎம் பயணத்தில் எப்போதுமே பொது பங்கு வெளியீட்டை அவர் முக்கிய இலக்காகக் கொண்டிருந்தார். பரிவர்த்தனையில் இருந்து, இ-காமர்சுக்கும், பின் நிதிச்சேவைகளுக்கும் நிறுவனம் வளர்ந்திருக்கிறது.
பேடிஎம் வளர்ச்சி வியக்க வைப்பதாக இருந்தாலும் அதன் லாபம் ஈட்டும் தன்மை பற்றிய கேள்விகளும் இல்லாமல் இல்லை. லாபம் ஈட்டுவதை விட ரொக்க வரத்தே முக்கியம் என்று விஜய் சேகர் சர்மா கூறியிருக்கிறார்.
இந்திய சந்தை தவிர வெளிநாடுகளிலும் நிறுவனம் விரிவாக்கம் செய்து வருகிறது. சர்வதேச விரிவாக்கத்தில் கவனம் செலுத்தினாலும் இந்திய சந்தை முக்கியமானது என அவர் கருதுகிறார்.
எப்போதுமே பிரதானமாக இந்திய வருவாய் நிறுவனமாக இருப்போம், சர்வதேச லாபத்தை இந்தியாவில் முதலீடு செய்வோம் என்றும் அவர் யுவர்ஸ்டோரி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
இந்த வெற்றி பயணத்தின் மற்றொரு மைல்கல்லாக பேடிஎம் பங்குச்சந்தையில் நுழைந்து பொது பங்குகளை வெளியிட்டுள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தையில் நிறுவன பங்குகள் வர்த்தகமாகத் துவங்கிய போது விஜய் சேகர் சர்மா உணர்ச்சி வசப்பட்டு கண்ணிரமயமாக காணப்பட்டார்.
வெற்றிபயணத்தை நெகிழ்ச்சியை அவரிடம் பார்க்க முடிந்தாலும், முதல் நாள் வர்த்தகத்தில் நிறுவன பங்குகள் விலை சரிந்தது சற்று ஏமாற்றமாக அமைந்தது. பேடிஎம் நிறுவனத்தின் வர்த்தக மாதிரியின் தன்மை குறித்த முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் கேள்விகளே இந்த சரிவிற்குக் காரணம் என கூறப்படுகிறது.
ஆனால், விஜய் சேகர் சர்மா இந்த சரிவால் கவலைப்படவில்லை என அவர் கூறியிருக்கிறார்.
“எங்கள் எதிர்காலம் என்ன என்பதை ஒரு நாள் தீர்மானித்துவிடாது. இது புதிய வர்த்தக மாதிரி. இதைப் புரிந்து கொள்ள ஒருவருக்கு அவகாசம் தேவை,” என்று அவர் நம்பிக்கையோடு கூறியிருக்கிறார்.