ஆதரவற்றோருக்கு தங்குமிடம் வழங்க என்ஜிஓ தொடங்கிய திருநங்கை!
திருநங்கையான நக்ஷத்திரா தொடங்கியுள்ள Nammane Summane என்ஜிஓ ஆதரவற்றோரை மீட்டு உணவு, உடை, கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
நக்ஷத்திரா ஒரு திருநங்கை என்பது அவருக்கு 16 வயதானபோது தெரிய வந்தது. பெற்றோர் வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர். யாருமில்லாமல் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திடீரென்று தனிமரமாக நின்றார் நக்ஷத்திரா. ஆதரவின்றி தவிப்பதன் வலியையும் வேதனையையும் கடந்தே வந்திருக்கிறார்.
2017-ம் ஆண்டு கர்நாடகாவின் குர்பல்கா பகுதியில் இருந்த வீட்டை விட்டு வெளியேறிய நக்ஷத்திரா, வாய்ப்பு தேடி பெங்களூரு சென்றுள்ளார். மூன்று மாதங்கள் வரை எந்த வழியும் புலப்படவில்லை. சாலையில் சுற்றித்திரிந்தார். பிறகு திருநங்கை சமூகத்துடன் இணைந்து கொண்டார்.
அதுவரையிலான வாழ்க்கைப் பாடத்தில் இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொண்டார். ஆதரவின்றி இருப்போரின் வலியும் வேதனையும் புரிந்தது. திருநங்கைகள் போதிய கல்வியறிவு பெறாத காரணத்தால் பிச்சை எடுக்கும் வேலையிலும் பாலியல் தொழிலிலும் ஈடுபடுவதை கவனித்தார்.
நக்ஷத்திரா வேறு வழியின்றி பிச்சை எடுத்துள்ளார். விருப்பமில்லாத வாழ்க்கை. பிடிப்பில்லாமல் நகர்ந்துகொண்டிருந்த வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை சேர்த்தது படிக்கவேண்டும் என்கிற ஆசை. அதற்காக பணத்தை சேமிக்கத் தொடங்கினார்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். பெங்களூருவில் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பொறுப்பேற்றுள்ள 'ப்ருஹத் பெங்களூரு மகாநகரா பாலிகே’ (BBMP) நிர்வாக குழுவில் தன்னார்வலராக சேர்ந்தார்.
சம்பாதிக்கத் தொடங்கி சொந்தக் காலில் நின்ற பிறகு வீடின்றி தவிக்கும் ஆதரவற்றோர்களுக்கு உதவ 2020-ம் ஆண்டு Nammane Summane என்கிற என்ஜிஓ தொடங்கினார். பெங்களூருவைச் சேர்ந்த இந்த என்ஜிஓ LGBTQIA+, தனிநபர்கள், ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்ட தேவையிருப்போர்களுக்கு தங்குமிடம் கொடுத்து உதவுகிறது.
நக்ஷத்திரா, இந்தியாவில் ஆதரவற்றோர்களுக்கும் வீடின்றி தவிக்கும் திருநங்கைகளுக்கும் தங்குமிடம் தொடங்கியுள்ள முதல் திருநங்கை ஆவார்.
அனைவருக்குமான தங்குமிடம்
நக்ஷத்திரா சாலையில் தங்கி அவதிப்பட்ட நாட்களைப் பற்றி விவரிக்கும்போது,
“நான் கிட்டத்தட்ட இரண்டு மாத காலத்தை நடைபாதையில் கழித்தேன். மக்கள் தூக்கியெறியும் உணவை சாப்பிடுவேன். பொது கழிப்பிடத்தில் குளிப்பேன். அட்டைபெட்டிகளின்கீழ் தங்கிக்கொள்வேன். குடும்பமோ வீடோ பாதுகாப்போ கைப்பிடி அரிசியோகூட இல்லாமல் வெறுமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன்,” என்கிறார்.
அவர் மேலும் விவரிக்கும்போது,
”நான் சாலையில் படுத்து தூங்கியபோது யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. உங்கள் குடும்பமே உங்களைக் கைவிடும்போது வாழ்க்கையில் ஒரு பிடிப்போ நம்பிக்கையோ இருக்காது. இதுபோன்ற கையறு நிலையில் யாரும் தவிக்கக்கூடாது என முடிவு செய்தேன். வயது, மதம், பாலினம் என்கிற எந்தவித பேதமும் இன்றி தேவையிருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பான இல்லமாக ' Nammane Summane’ செயல்படுகிறது,” என்கிறார்.
தேவையிருக்கும் நபர்களிடமிருந்து அழைப்பு வந்ததும் நக்ஷத்திராவும் அவரது குழுவினரும் உடனடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவுகின்றனர்.
”சாலையில் தங்கியிருந்து கஷ்டப்படுவோர் மீட்கப்பட்டு படுக்கைகள், மூன்று வேளை உணவு, குழந்தைகளுக்கு கல்வி, தேவையான மருத்துவ உதவி, ஆலோசனை போன்றவற்றை Nammane Summane வழங்குகிறது,” என்கிறார்.
தற்போது இந்த தங்குமிடத்தில் சுமார் 80 பேர் இருக்கின்றனர்.
சவால்களுக்கு எதிரான போராட்டம்
திருநங்களைகள் பற்றிய தவறான கற்பிதங்கள் மக்கள் மனதில் இருப்பதால் நக்ஷத்திரா பல்வேறு சிரமங்களை சந்தித்திருக்கிறார். என்ஜிஓ தொடங்கிய பிறகு கோவிட் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மிகப்பெரிய தடையாக மாறியது.
”நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் ஏழை மக்களும் கோவிட் பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். LGBTQ+ சமூகத்தினரின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறியது. குடும்பத்தினர் பணமும் கொடுக்கவில்லை அருகிலிருந்து ஆதரவும் அளிக்கவில்லை. என் சமூகத்தினர் படும் கஷ்டத்தைப் பார்த்து அவர்களுக்கு உதவத் தீர்மானித்தேன்,” என்கிறார்.
தங்குமில்லம் கட்டுவது மிகவும் சவாலாக இருந்துள்ளது. பலர் இடம் கொடுக்க மறுத்துள்ளனர். பிச்சை எடுப்பவர் என்றும் பாலியல் தொழிலாளி என்றும் கேலி பேசியுள்ளனர். பல மாதங்கள் போராடிய பிறகு பெங்களூருவின் கங்கோந்தனஹல்லி பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இடம் கொடுக்க சம்மதித்துள்ளார்.
இந்த சமயத்தில் நக்ஷத்திரா தனது நகைகளை அடமானம் வைத்துள்ளார். அத்துடன் கையில் இருந்த சேமிப்புத் தொகையையும் கொண்டு என்ஜிஓ நடத்தியிருக்கிறார். அப்போதிருந்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைகளை சார்ந்தே இந்த என்ஜிஓ இயங்கி வருகிறது.
”நாங்கள் அடைக்கலம் கொடுத்த நபர்களுக்கு உணவுகூட கொடுக்கமுடியாத நிலை உருவானது. அரிசி, பருப்பு, எண்ணெய் எதுவும் கிடைக்கவில்லை. என்னுடைய மொத்த சேமிப்பையும் செலவிட்டும்கூட என்னால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. என்னுடைய முயற்சி எக்காரணங்களுக்காகவும் தடைபடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்,” என்கிறார் நக்ஷத்திரா.
நக்ஷத்திரா எத்தனையோ போராட்டங்களைக் கடந்து வந்திருந்தாலும் தன்னைப் போல் சாலையில் ஆதரவின்றி இருப்பவர்களுக்கு உதவவேண்டும் என்கிற விருப்பம் அதிகரித்திருக்கிறதே தவிர சற்றும் குறையவில்லை.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா