வீட்டிலேயே 2 நிமிட டெஸ்ட்; 15 நிடங்களில் ரிசல்ட்: கொரோனா பரிசோதனைக் கருவிக்கு அனுமதி!
வழிமுறைகளையும் வெளியிட்ட ஐசிஎம்ஆர்!
வீட்டில் இருந்தபடியே, கொரோனா சோதனையை நடத்தும் ஆன்டிஜென் டெஸ்ட் கருவிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்த கருவி பெரிய அளவில் கைகொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.
'CoviSelfTM' எனப்படும் இந்தியாவின் முதல் சுயப்பரிசோதனை ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட் (RAT) கிட், இரண்டு நிமிடங்களில் கொரோனா தொற்று டெஸ்ட் எடுத்து 15 நிமிடத்தில் ரிசல்ட் வரும்படி, புனே Mylab Discovery Solutions நிறுவனம் தயாரித்துள்ளது, என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
“2 நிமிடங்களில் டெஸ்ட் எடுத்து 15 நிமிடங்களில் ரிசல்ட் வரும் வகையில் அமைந்துள்ள இந்த வீட்டுப் பரிசோதனை டெஸ்ட் கிட், அடுத்த வாரம் முதல் பார்மசிகளிலும், ஆன்லைன் தளங்களிலும் விற்பனைக்கு வரும். இந்தியா முழுவதும் சுமார் 7லட்சம் கிட்கள் விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ.250 இருக்கும்,” என்று மைலாப் நிறுவன இயக்குனர் சுஜித் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் வீட்டிலேயே நாம் எடுத்துக்கொள்ளமுடியும். இதில் பாசிட்டிவ் என்று வந்தால் மீண்டும் RT-PCR டெஸ்ட் எடுக்கத்தேவையில்லை.
இதையடுத்து, நோடல் அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இதை யார் பயன்படுத்தலாம், எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது. அதன்படி,
அறிகுறி உள்ள நபர்கள் மட்டுமே இந்த வீட்டுச் சோதனை கருவியைப் பயன்படுத்த வேண்டும். மேலும் இதில் நெகட்டிவ் என வந்தால் அவர்கள் RT-PCR டெஸ்ட் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஐசிஎம்ஆர் தெளிவுப்படுத்தியுள்ளது. அதேநேரம் கண்மூடித்தனமான சோதனைக்கு அறிவுறுத்தப்படவில்லை என்று ஐசிஎம்ஆர் கண்டிப்புடன் கூறியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள ஐசிஎம்ஆர்,
“வீட்டுப் பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்த அனைத்து நபர்களும் உண்மையாகவே பாசிட்டிவாக கருதப்படலாம். அவர்களுக்கு மீண்டும் சோதனை எதுவும் தேவையில்லை," என்று ஐசிஎம்ஆர் கூறியது.
இதற்கிடையே, CoviSelfTM என்ற இந்தக் கருவியைக் கொண்டு அதன் மொபைல் ஆப்-பில் விவரிக்கப்பட்டுள்ள செயல்முறைக்கு ஏற்ப வீட்டுச் சோதனை நடத்தப்பட வேண்டும். இந்த மொபைல் ஆப்- கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விவரித்துள்ள ஐசிஎம்ஆர்,
“மொபைல் பயன்பாடு சோதனை நடைமுறையின் விரிவான வழிகாட்டியாகும். மேலும் இது நோயாளிக்கு பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என சோதனை முடிவை வழங்கும். அனைத்து மொபைல் பயனர்களும் ஒரே தொலைபேசியுடன் சோதனை முறையை முடித்த பின்னர் சோதனைத் துண்டின் படத்தைக் கிளிக் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.”
தொலைபேசியிலிருந்து தரவுகள் ஐ.சி.எம்.ஆர் கொரோனா சோதனை போர்ட்டலுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பான சேவையகத்துக்குச் சென்றுவிடும். அங்கு எல்லா தரவும் இறுதியில் சேமிக்கப்படும். இதன்மூலம் நோயாளியின் இரகசியத்தன்மை முழுமையாக பராமரிக்கப்படும்" என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.