கொரோனா 2ம் அலை பாதிப்பை குறைக்க புதுமை தீர்வுகளை அளிக்கும் Mylab!
புனேவைச்சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ், இரண்டாம் அலையை எதிர்கொள்ள தேவையான புதுமையான தீர்வுகளை வழங்கி வருகிறது.
அதிக எண்ணிக்கையிலான மக்களை பாதித்து வரும் மோசமான கொரோனா இரண்டாம் அலை பாதிப்பின் பிடியில் இந்தியா இருக்கிறது. இந்த பின்னணியில், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இரண்டாம் அலை பாதிப்பை எதிர்கொள்வதற்கான புதுமையான தீர்வுகளை உருவாகி வருகின்றன.
இத்தகைய ஸ்டார்ட் அப்களில் ஒன்றான, புனேவைச்சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ், கடந்த ஆண்டு, Mylab PathoDetect kit எனும் மூலக்கூறு சார்ந்த கொரோனா சோதனை சாதனத்தை உருவாக்கித் தந்தது.
தற்போது கொரோனா இரண்டாம் அலை பாதிப்புக்கு மத்தியில், இந்நிறுவனம் கொரோனா சோதனைகளை அதிகமாக்குவதற்கான மொபைல் சோதனை மையங்களை அறிமுகம் செய்துள்ளது.
புதிய தீர்வுகள்
தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை சோதனை செய்வதற்கான வசதியை அளிப்பதற்கான மொபைல் சோதனை மையத்தை உருவாக்க ஆறு மாதங்களை செலவிட்டதாக மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் நிர்வாக இயக்குனர் ஹஸ்முக் ரவால் யுவர்ஸ்டோரி இடம் தெரிவித்தார்.
“கோவிட்-19 சோதனை மையங்களாக செயல்படக்கூடிய 50, ஐசிஎம்.ஆர் மற்றும் என்.ஏ.பி.எல் சான்றிதழ் பெற்ற மொபைல் வேன்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். இந்த வேன்களை எங்கும் நிறுத்தி செயல்படலாம். ஒவ்வொரு வேனிலும் தினசரி 1,000 சோதனைகள் மேற்கொள்ளலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
இது தவிர, மக்கள் தாங்களே சோதனை செய்து கொள்ளக்கூடிய வகையிகான சோதனை வசதியையும் உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
இது போன்ற நான்கு அல்லது ஐந்து புதுமையான தீர்வுகளை உருவாக்குவதில் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். MyLab Patho Detect கோவிட்-19 சாதனத்திற்கு கடந்த ஆண்டு அனுமதி பெற்ற பிறகு, நிறுவனம் இதன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக சீரம் இந்தியா நிறுவனத்துடன் கூட்டு வைத்துக்கொண்டது.
துவக்கத்தில் நாள் ஒன்றுக்கு 10,000 சோதனைகள் என்று இருந்த நிலைக்கு மாறாக தற்போது ஆறு முதல் ஏழு லட்சம் சோதனைகள் வரை உற்பத்தி வசதியை மேம்படுத்தி இருப்பதாக ஹஷ்முக் கூறுகிறார்.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் புதுமையான தீர்வுகளை வழங்குவதில் ஈடுபட்ட முதல் ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக மைலேப் விளங்குகிறது.