இனி தங்க நகைகளை அவ்ளோ ஈசியா விற்க முடியாது- ஏன் தெரியுமா?

தங்க நகைகளை வாங்க மட்டுமல்ல, இனி விற்கவும் ஹால்மார்க் தேவை என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இனி தங்க நகைகளை அவ்ளோ ஈசியா விற்க முடியாது- ஏன் தெரியுமா?

Tuesday May 23, 2023,

2 min Read

தங்க நகைகளை வாங்க மட்டுமல்ல, இனி விற்கவும் ஹால்மார்க் தேவை என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

நகைக்கடைகளில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது ஜூன் 2021 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 1, 2023 முதல், நகைக்கடைக்காரர்களிடம் HUID எண் இல்லை என்றால், தங்க நகைகளை விற்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இருப்பினும், ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்வதற்கான விதிகள் மற்றும் விதிமுறைகளை BIS மாற்றியுள்ளது. அதை பற்றிய முழு விவரம் இதோ...

gold

இனி நகைகளை விற்பது எளிதல்ல:

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் அலங்காரப் பொருளாக மட்டுமின்றி, பாதுகாப்பான சேமிப்பாகவும் கருதப்படுகிறது. எனவே, தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்றவும், அதன் தரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்தவும் மத்திய அரசு தங்க நகைகள் மற்றும் பொருட்களின் விற்பனை விதிமுறைகளை புதுப்பித்துள்ளது. புதிய விதிகளின்படி,

ஏப்ரல் 1, 2023 முதல், அனைத்து தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் ஆன கலைப்பொருட்கள் ஹால்மார்க் தனித்துவ அடையாள (HUID) எண்ணைக் கொண்டிருக்க வேண்டும். இது தவிர சுத்த தங்கம் என்பதை குறிக்கும் BIS (இந்திய தரநிலைகள் பணியகம்) முத்திரையும், தங்கத்தின் தரத்தை குறிக்கக்கூடிய 22K, 18K போன்ற குறீடும் இடம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

HUID எண் என்பது, தங்கத்தினால் ஆன பொருட்களுக்கு தனித்துவமான அடையாளம் மற்றும் சுத்த தங்கம் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய குறியீடாக உள்ளது.

gold

புதிய விதிமுறை:

உங்களிடம் பழைய, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் இருந்தால் அதில் ஹால்மார்க் முத்திரை இடப்படாத வரையில் அதனை விற்கவோ அல்லது புதிய டிசைன்களுக்கு மாற்றவோ முடியாது.

BIS- விதிமுறைகளின் படி, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை தங்கள் வசம் வைத்திருக்கும் நுகர்வோர், அதை விற்பதற்கு முன் அல்லது புதிய டிசைன்களுக்கு மாற்றுவதற்கு முன் கட்டாயமாக அதில் ஹால்மார்க் முத்திரை பெற வேண்டும்.

உங்களுடைய பழைய தங்க நகைகளை விற்க திட்டமிடுகிறீர்கள் என்றால், அவற்றில் கட்டாயம் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும். இல்லையென்றால் பிஐஎஸ் அசேயிங் அண்ட் ஹால்மார்க்கிங் மையத்தில் ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டும். இதற்கு ஒரு நகைக்கு 45 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதேசமயம், தங்க நகைகளில் ஏற்கனவே பழைய ஹால்மார்க் முத்திரை இருந்தாலும், அது ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளாகவே கருதப்படும். ஏற்கனவே பழைய அடையாளங்களுடன் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளை HUID எண்ணுடன் மீண்டும் ஹால்மார்க் செய்ய வேண்டியதில்லை. இத்தகைய ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை எளிதாக விற்கலாம் அல்லது புதிய டிசைன்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

goldgold

ஹால்மார்க்கிங்-இல் விதிவிலக்கு பெற:

ஜூன் 16, 2021 முதல் இந்தியாவில் தங்க ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றாலும், சில விதிவிலக்குகள் உள்ளன:

- ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வருவாய் கொண்ட நகைக்கடைகள்

- 2 கிராமிற்கு குறைவான தங்க நகைகள்

- வெளிநாட்டு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப தயார் செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படும் நகைகள்

- சர்வதேச கண்காட்சிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வர்த்தக நிறுவனங்கள் அல்லது வணிக கண்காட்சிகளில் விற்கப்படும் தங்க நகைகள்

- மருத்துவம், பல், கால்நடை, அறிவியல் அல்லது தொழில்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் தங்கத்தலான பொருட்கள்

- தங்க கடிகாரங்கள், ஃபவுண்டன் பேனாக்கள் மற்றும் குந்தன், போல்கி மற்றும் ஜடாவ் உள்ளிட்ட சிறப்பு வகை நகைகள் ஆகியவற்றிற்கு இந்த ஹால்மார்க்கிங் முறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.