YS தமிழ் Explainer - 'டிஜிட்டல் கோல்ட்' என்றால் என்ன? சாதக-பாதகங்கள் இதோ!
அனைவரும் தங்கத்தை நகைகளாகவும், காசுகளாகவும் வாங்கி வரும் நிலையில் இந்தியாவில் ‘டிஜிட்டல் கோல்ட்’ அறிமுகமாகி உள்ளது. டிஜிட்டல் கோல்ட் குறித்த முழு விளக்கம்.
Digital Gold - உலக அளவில் தங்கத்தை நுகர்வு செய்து வரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா. ஆபரணம் தொடங்கி முதலீடு வரையில் தங்கத்தின் நுகர்வு நபருக்கு நபர் மாறுபடுகிறது. அனைவரும் தங்கத்தை நகைகளாகவும், காசுகளாகவும் வாங்கி வரும் நிலையில் இந்தியாவில் ‘டிஜிட்டல் கோல்ட்’ அறிமுகமாகி உள்ளது. டிஜிட்டல் கோல்ட் குறித்த முழு விளக்கம் இங்கே..
டிஜிட்டல் கோல்ட் என்றால் என்ன?
இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது. அதில் ஒன்றுதான் டிஜிட்டல் கோல்ட். இந்த முறையில் தங்கத்தை தன்னிடம் உள்ள நிதியை கொடுத்து வாங்கும் நபரின் வசம் தங்கம் இருக்காது. அது விற்பனையாளர் வசமே வாங்கியவரின் சார்பில் பத்திரமாக வைத்து பாதுகாக்கப்படும்.
ஹால்மார்க் 24 கேரட் தங்கத்தை டிஜிட்டல் கோல்டாக முதலீட்டாளர்கள் பெறலாம். குறைந்தபட்சம் ரூ.1 முதல் டிஜிட்டல் கோல்ட்களை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இது அதனை விற்பனை செய்யும் தளங்களை பொறுத்து உள்ளது.
அதுவே வழக்கமான முறையில் தங்கம் வாங்க வேண்டுமென்றால் சில ஆயிரம் ரூபாயாவது தேவைப்படும். கிட்டத்தட்ட இதுவும் வழக்கமான முறையில் தங்க முதலீட்டை போன்றது தான். 24 x 7 என எந்த நேரத்திலும் இதன் மூலம் தங்கம் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
டிஜிட்டல் கோல்ட் வாங்குவது எப்படி?
டிஜிட்டல் கோல்ட்களை வாங்க மற்றும் விற்க என பிரத்யேக வலைதளங்கள் ஆன்லைன் முறையில் இயங்கி வருகின்றன. அதன் மூலம் இதனை எளிய வழியில் வாங்க முடியும். இந்தியாவில் டிஜிட்டல் கோல்ட்களை மூன்று நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. MMTC-PAMP இந்தியா, Augmont கோல்ட் லிமிடெட் மற்றும் டிஜிட்டல் கோல்ட் இந்தியா போன்ற நிறுவனங்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றன.
அது தவிர, யுபிஐ செயலிகளான போன்பே மற்றும் பேடிஎம் மூலமாகவும் டிஜிட்டல் கோல்ட் வாங்க முடியும் எனத் தெரிகிறது. இதனை விரல் நுனிகளில் மிகவும் எளிதாக வாங்குவதை போல விற்பனை செய்வதும் சுலபம் எனத் தெரிகிறது.
இதனை வாங்கவும், விற்கவும் முக்கியமாக முதலீட்டாளர்களுக்கு கணக்குகள் அவசியம் எனத் தெரிகிறது. அந்த பரிவர்த்தனை சார்ந்த விவரங்கள் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கப்பெறும்.
டிஜிட்டல் கோல்ட் முதலீடு குறித்த சாதகங்கள் என்ன?
- இதில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
- தங்க முதலீட்டில் ஆர்வம் கொண்ட நபர்களுக்கு எளிய முறையில் டிஜிட்டல் கோல்ட் உதவுகிறது.
- பாதுகாப்பு சார்ந்த சிக்கல்கள் இதில் இல்லை எனச் சொல்லப்படுகிறது.
- டிஜிட்டல் கோல்டை விற்பனை செய்வதும் எளிது.
- முதலீட்டாளர்கள் தங்களுக்குத் தேவை எனில் அதனை பிசிக்கலாக டெலிவரியும் பெற முடியுமாம். அதுவும் இல்லம் தேடி வந்து அந்த தங்கம் டெலிவரி செய்யப்படுமாம். இருந்தாலும் அதற்கு டெலிவரி சார்ஜ் வசூலிக்கப்டும் எனத் தெரிகிறது.
- சுத்தமான 24 கேரட் தங்கம் இதில் விற்பனை செய்யப்படுகிறது.
- பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்படும் இந்த தங்கம் 100 சதவீதம் காப்பீடு செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தங்க நகை, தங்க காசுகளை கொடுத்தும் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம் என தெரிகிறது.
அலர்ட்: இந்திய ரிசர்வ் வங்கி போன்ற எந்தவொரு ஒழுங்குமுறை சார்ந்து இதன் இயக்கம் இல்லை. அதனால் முதலீட்டாளர்கள் அலர்ட்டாக இருப்பது அவசியம்.
Explainer - டிஜிட்டல் வங்கி யூனிட் என்றால் என்ன? பயனர்கள் எப்படி பெறலாம்?
Edited by Induja Raghunathan