விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க ரூ.14,000 கோடியில் மத்திய அரசின் ஏழு புதிய திட்டங்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரூ.13,966 கோடி அளவிலான ஏழு திட்டங்களை விவசாயிகள் வாழ்க்கை, வருமானத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு அனுமதி அளித்துள்ளது, என அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், வேளாண்மை மற்றும் தொடர்புடைய துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.14,000 கோடி மதிப்பிலான ஏழு பெரிய திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரூ.2,817 கோடி டிஜிட்டல் விவசாயம் திட்டம், ரூ.3,979 கோடி மதிப்பிலான பயிர் அறிவியல் திட்டம் உள்ளிட்ட ஏழு பெரிய வேளாண்மை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரூ.13,966 கோடி அளவிலான ஏழு திட்டங்களை விவசாயிகள் வாழ்க்கை, வருமானத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு அனுமதி அளித்துள்ளது,” என அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், விவசாயிகள் வருமானத்தை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டங்கள் அமைவதாக தெரிவித்தார். இந்த திட்டங்கள், ஆய்வு மற்றும் கல்வி, காலநிலை மாற்றம் எதிர்கொள்தல், இயற்கை வளம் மேலாண்மை, விவசாயத் துறை டிஜிட்டல்மயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.
ரூ.3,979 கோடி மதிப்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து தேசிய பாதுகாப்பிற்கான பயிர் அறிவியலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தில், 2047 வாக்கில் விவசாயிகளை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பயிர் அறிவியல், உணவு பாதுகாப்பிற்கு தயார் செய்வதை நோக்கமாக கொண்ட ஆறு தூண்கள் உள்ளன.
இந்த ஆறு தூண்கள் வருமாறு: ஆய்வு- கல்வி, உணவு மற்றும் தீவணத்திற்கான தாவிர மரபணு வள நிர்வாகம், பருப்புகள், எண்ணெய் வித்துகள் மேம்பாடு, பணப்பயிர்கள் மேம்பாடு, பூச்சிகள், நுண்ணுயிர்கள், மகரந்தச்சேர்க்கை இனங்கள்.
விவசாய கல்வி, நிர்வாகம், சமூக அறிவியலை வலுவாக்க ரூ.2,291 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்திய விவசாய ஆய்வு கழகத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.
புதிய கல்வி கொள்கை 2020க்கு ஏற்ப விவசாய கல்வி, ஆய்வை நவீனமாக்குவது இதன் நோக்கம். டிஜிட்டல் டிபிஐ, ஏஐ, பிக்டேட்டா, ஆகியவை முன்னிறுத்தப்படும். இயற்கை வேளாண்மை, காலநிலை மாற்றம் எதிர்கொள்வது ஆகியவை அடங்கும்.
ரூ.2,817 கோடியில் டிஜிட்டல் விவசாய திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அக்ரி ஸ்டாக் மற்றும் கிரிஷி முடிவு ஆதரவு அமைப்பு ஆகிய இரண்டு முக்கிய தூண்கள் இதில் உள்ளன.
நீடித்த நிலையான கால்நடை ஆரோக்கியம், உற்பத்திக்கு ரூ.1,701 கோடி மதிப்பிலான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். கால்நடை வளர்ப்பு மூலம் விவசாயிகள் வருமானத்தை பெருக்குவது இதன் நோக்கம், என்றார்.
இந்த திட்டத்தின் கீழ், கால்நடை ஆரோக்கியம், கால்நடை மருத்துவ கல்வி, பால் உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாடு, விலங்கு மரபணு வள நிர்வாகம், விலங்கு ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படும்.
தோட்டக்கலை நீடித்த வளர்ச்சி தொடர்பான மற்றொரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
“ரூ.860 கோடியில் இந்த திட்டம் தோட்டக்கலை பயிரிகள் மூலம் விவசாயிகள் வருமானத்தை உயர்த்தும் நோக்கம் கொண்டது.”
வெப்ப மண்டல பயிர்கள், கிழங்கு வகைகள், காய்கறிகள், மலர்கள், காளான்கள், மலைப்பயிர்கள், வாசனை பொருட்கள், மருத்துவ மூலிகைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
கிருஷி விஜ்யான் கேந்திரங்களை மேம்படுத்த ரூ.1202 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இயற்கை வள மேலாண்மைக்கு ரூ.1115 கோடி திட்டம் அனுமதி அளிக்கப்பட்டது. நாட்டில் தற்போது 700 கேந்திரங்கள் உள்ளன.
செய்தி- பிடிஐ, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan