'நானே ஹீரோ, ஹீரோயின்... அட, கதையே நான்தான்...!’ - ஷகிலாவின் ‘அடல்ட்’ சினிமா அனுபவம்
துணிச்சல், தனித்துவம், முகத்தில் அடித்தாற்போல் எதையும் பேசும் குணம் போன்றவை ஷகீலா என்ற பெயருக்கு மறுபெயர்கள் என்றே கூறலாம். அவரது அதிரடி பகிர்வுகள் இவை.
சில்க் ஸ்மிதாவுக்குப் பிறகு ஒரு கவர்ச்சி நடிகை பிரபலமானவர் என்றால் அவர் ஷகீலாதான். 1990-களில் தொடங்கி 2000-ஆம் ஆண்டு வரையிலும் மலையாள சினிமாவில் ஷகீலாவின் ‘கவர்ச்சி’ கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலம். திரையுலகச் சுரண்டல்கள், திருநங்கைகள் மீதான அவரது காதல் மற்றும் கேரள இலக்கிய விழாவில் திரைப்படத் துறையைப் பற்றிய அவரது பார்வை என்று தன் கருத்துகளை மனம் திறந்துள்ளார்.
துணிச்சல், தனித்துவம், முகத்தில் அடித்தாற்போல் எதையும் பேசும் குணம் போன்றவை ஷகீலா என்ற பெயருக்கு மறுபெயர்கள் என்றே கூறலாம். மிக முக்கியமாக, தான் நடித்த படங்கள் பற்றி வேறு முன்னணி நடிகரோ, நடிகையோ இப்படிக் கூற மாட்டார்கள். ஆனால், ஷகீலா அப்படித்தான் கூறுகிறார்... அதுதான் ஷகீலா...
ஆம், அவர் தான் நடித்த படங்கள் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
“நான் தான் ஹீரோ, நான் தான் ஹீரோயின், ஏன் கதையே நான் தான்...” என்று கோழிக்கோட்டில் நடந்த கேரள இலக்கிய விழாவை ஒட்டி திரைக்கதை எழுத்தாளர் தீடி தாமோதரனிடம் பெருமிதத்துடன் கூறியுள்ளார் என்றால், அவரது தைரியம் கண்கூடு.
90-களில் நடிகை ஷகீலா மலையாளப் படங்களில் புயல் போல் நுழைந்தார். தொடர்ச்சியான மென்மையான பாலியல் படங்களில் நடித்தது, அவரை ரசிகர்களின் வழிபாட்டு நிலைக்கு இட்டுச் சென்றன. இன்று ஷகீலாவின் திரை வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, கேரளாவில் அவரது புகழ் அக்கால முன்னணி நட்சத்திரங்களையுமே கடந்து சென்று விட்டார் என்றுதான் கூறுகின்றனர்.
தீடி தாமோதரனுடன் நடந்த உரையாடலில் துணிச்சலான கருத்துகளை ஷகீலா பகிர்ந்து கொண்டார். அதன் விவரம்:
திரையில் காம உணர்ச்சிகளை போலியாக காட்டுவது பற்றிய கேள்விக்கு ஷகீலா பதிலளித்த போது, “எத்தனை பெண்கள் பாலுறவின் போது தாங்கள் உச்சக்கட்டத்தை அடைந்து மகிழ்ந்ததை வெளிப்படையாகச் சொல்வார்கள்? நான் கூறுவதெல்லாம் அதற்காக வெட்கப்பட வேண்டாம் என்பதே” என்று அதிரடியாகக் கூறியபோது அரங்கமே அதிர்ந்தது.
“நான் நடிப்பிலும் சிறந்தவள்தான். திரையில் அழுகைக் காட்சி என்றால் நான் மனோரமா ஆச்சியிடமிருந்து உத்வேகம் பெற்று நடித்தேன். நகைச்சுவைப் பாத்திரம் என்றால் நடிகை ஊர்வசியிடமிருந்து உத்வேகம் பெற்று நடித்தேன். ஆனால், காம உணர்ச்சிகளுக்கு நான் என்னுடைய சொந்த அனுபவத்தைத்தான் நம்பியிருந்தேன். இதில் மற்றவரிடமிருந்து உத்வேகம் பெற முடியாது.”
ஷகீலா இப்படி கூறியதும், இந்த உரையாடலில் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேளுங்கள், எதற்கும் தடையில்லை என்ற குரல் ஷகீலாவின் இந்தப் பதிலில் தொனித்தது.
பயங்கர சுரண்டல்
ஷகீலா திரையுலகில் தனது அனுபவங்கள், திருநங்கைகளுடன் தனக்குள்ள தொடர்பு மற்றும் மலையாளத் திரையுலகம் ஏன் இப்போது தனக்கு எந்த வேடத்தையும் வழங்கவில்லை என்பது பற்றி பேசினார். ஆனால், ‘ஒழுக்கம்’ குறித்த வரையறைகள், அளவுகோல்கள் பற்றி ஷகீலா பேசியபோது தனக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்று தெரியவில்லை என்றார்.
தான் நடித்த காலத்தில் திரைத்துறையில் சுரண்டல் பயங்கரமாக இருந்தது என்பதைப் பற்றியும் பேசினார்.
“சில வேளைகளில் சில இயக்குநர்கள் தன் கதைக்குச் சம்பந்தமில்லாத வகையில் சில காட்சிகளை என்னை வைத்து ஷூட் செய்வார்கள். பிற்பாடுதான் தெரிந்தது இதை வேறு சில படங்களில் கவர்ச்சியாக அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது. அப்போது எனக்கு மொழி பரிச்சயமில்லை, நான் பேசும் வசனங்களின் அர்த்தமும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பின்னர் நான் சென்னையில் ஷூட்டிங் வையுங்கள் என்று வலியுறுத்தினேன்,” என்றார்.
அதேபோல், சில பல கேமரா கோணங்கள் அவரது உடலை விதம் விதமாகக் காட்டுமாறு அமைக்கப்படும். இந்த விவகாரத்தையும் தான் பிற்பாடுதான் புரிந்து கொண்டதாக கூறுகிறார் ஷகீலா. பிறகுதான் ’இப்படி வேண்டாம் அப்படி வேண்டாம்’ என்று ஷகீலா கேமரா மேன்களிடம் கூறத் தொடங்கினார்.
‘கினார தும்பிகள்’ என்ற படத்திற்கு ஷகீலாவுக்கு ரூ.20,000 சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால், படம் பெரிய ஹிட், இதனால் தனக்கு கொடுத்தப் பணம் குறைவுதான் என்று தெரிந்ததாகக் கூறினார்.
“இது விரைவில் மாறியது, மேலும் பல படங்கள் வெற்றி பெற்ற பிறகு, ஒரு கால்ஷீட்டிற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். மேலும், ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு கால்ஷீட்கள் இருந்தன. எனக்கு தரப்பட்ட 70-க்கும் மேற்பட்ட காசோலைகள் பவுன்ஸ் ஆனபோது, நான் இனி ரொக்கமாகத்தான் ஏற்றுக் கொள்வேன், ரொக்கம் இருந்தால் நடிப்பேன் என்று வலியுறுத்தத் தொடங்கினேன்,” என்றார்.
சுரண்டல் என்பது திரைப்படத் துறையின் ஓர் அங்கமாகிவிட்ட நிலையில், உள் புகார்க் குழுவை (ICC) அணுகுவது சரியான நடவடிக்கையாக இருக்குமா? என்ற யோசனையை ஷகீலா ஏற்கவில்லை. மாறாக இப்போது பிராக்டிகலாக இருக்க வேண்டிய தருணம் என்றார். அது குறித்து அவர் கூறியது:
“அவர்களுக்கு எதிராகப் புகார் கொடுத்தால் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? ஒருபோதும் நடக்காது. தவறாக நடந்து கொண்டவர்கள் மீது புகார் எழுந்து எத்தனை பேர் இதுவரை தண்டிக்கப்பட்டுள்ளார்கள்? ஆனால், கடும் தண்டனை உள்ள சட்டங்கள் நம்மிடையே இருக்கின்றன,” என்றார்.
‘போராளி’ ஷகீலா
பெரும் பரபரப்பு புகாராக எழுந்த #MeToo இயக்கம் கூட பெண்களுக்கு எந்த விதமான நியாயத்தையும் வழங்கி விடவில்லையே என்பதுதான் ஷகீலாவின் வாதம்.
“நான் திரைப்படத் துறையினரிடம் சொல்கிறேன்... என்னை ஐசிசியின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். ஒவ்வொரு புகாரையும் தீவிரமாக எடுத்துக் கொள்வதை உறுதி செய்வேன். நான் சுதந்திரமானவள். எனக்கென்று குடும்பம் இல்லை. எனவே, நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை,” என்று கூறும்போது ஷகீலாவின் போராளிக் குரல் வெளிப்பட்டது.
தனக்கு உண்மையான தோழர்கள் என்றால், அது திருநங்கையர்கள்தான் என்று திட்டவட்டமாக, தைரியமாகக் கூறுகிறார் ஷகீலா:
“ஆரம்பத்தில், நான் அவர்களைப் பற்றி ஆர்வமிகுதியாகவே பார்த்தேன். ஆனால் பின்னர், அவர்களின் அனுபவங்களையும் கடினப்பாடுகளையும் நான் புரிந்துகொண்டேன் - நிராகரிப்பு, மாற்றத்தின் வலி மற்றும் சமூகத்தால் ஒதுக்கப்படும் நிலை ஆகியவற்றை வலியுடன் அணுகினேன்.
நான் அவர்களை என் ‘சகோதரி’களாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்தேன். அவர்களும் நம் எல்லோரையும் போல ஒரு வாழ்க்கைக்கு தகுதியான மனிதர்கள்தான்...” என்று ஷகீலா கூறும்போது அவரிடம் ஒரு கலகக்காரர் குரல் தோன்றியது.
“நிஜ வாழ்க்கையில் நான் மனோதிடம் மிகுந்தவள். நான் அச்சமூட்டும் அல்லது சார்ந்த சொரூபியாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். இது என் ரியல் லைஃப் கேரக்டருக்கு சவாலாக இருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக திரைத்துறை என்னைக் கண்டு அஞ்சி எந்த வாய்ப்புகளையும் வழங்காமல் புறக்கணித்து வருகிறது,” என்றார் ஷகீலா.
Edited by Induja Raghunathan