ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை கொண்ட மாற்றுத் திறனாளி மாமனிதர்!
சக்தி வடக்கப்பட் (Shakthi Vadakkepat) பலருக்கு பலவிதமாக காட்சி அளிப்பவர். மனைவிக்கு அவர் ஆருயிர் துணைவன், குடும்பத்திற்கு அவர் வருமானம் ஈட்டுபவர், மகனுக்கு அவர் ஆதர்ஷ நாயகன், பெற்ற தாய்க்கு அவர் கண்ணின் மணி, இவரை ட்விட்டரில் லட்சக்கணக்கானோர் ஃபாலோ செய்கின்றனர். டிவிட்டர் உலகிற்கோ அவர் பார்க்கவும், பேசவும், உணரவும் கூடிய பிரபலம். வாசகர்களுக்கு அவர் டெக் நிஞ்சா. அவர் வழிகாட்டும் ஸ்டார்ட் அப்களுக்கோ அவர் சொல்வது தான் வேதவாக்கு. எனக்கு அவர், இயற்கையின் ஆற்றல், சமூக ஊடகத்தில் தயக்கம் இல்லாமல் பின் தொடரப்படக்கூடியவர் மற்றும் தினமும் எனக்கான ஊக்கத்தை அளிப்பவர்.
சமூகத்திற்கு அவர் மாற்றுத்திறனாளி
குழந்தை பருவத்தில் அவர் மற்ற குழந்தைகள் போல தான் இருந்தார். ஆனால் சிறுவயதில் அவருக்கு காய்ச்சல் வந்து சில நாட்கள் ஆகியும் குணமாகாமல் இருந்தது. டாக்டர் அவருக்கு ஓவ்வாமை உள்ள மருந்தை இன்ஜெக்ஷன் மூலம் செலுத்தியதால காய்ச்சல் குறைவதற்கு பதில் அதிகமானது. இதனால் அவரது வலது கால் வீங்கியது.
"மருத்துவ பார்வையில் நான் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டேன். மற்றொரு டாக்டர் என்னை ஆஸ்ரமத்தில் சேர்த்துவிட்டு வேறு குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு என் பெற்றோரிடம் கூறினார். அவரை பெற்றுச்செல்லுவதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் நான் உயிருடன் இருப்பதை கவனித்தனர் என் அம்மா. மற்ற குழந்தைகள் போலவே என்னை வளர்ப்பேன் என உறுதியாக இருந்தார் அவர். அப்போது என் வலது பக்கம் கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டது”.
குழந்தை பருவம் முழுவதும் சக்தி எழுந்து நிற்க முடியாமல் தவழ்ந்த நிலையில் தான் இருந்தார். ஆனால் அது அவர் படிப்பதற்கோ, சாப்ட்வேர் இஞ்சினியராக உருவாகவோ, மோசமான உலகில் அன்பை தேடிக்கொள்ளவோ இடையூறாக இல்லை.
”நான் பொறியியல் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, கம்ப்யூட்டர் வகுப்பில் சுவாரஸ்யமான பெண்ணை சந்தித்தேன்” என்கிறார் சக்தி. "கம்ப்யூட்டர் வகுப்பில் நாங்கள் நல்ல நண்பர்களானோம். மற்றொரு வகுப்பில் நான் அவரை விரும்புவதாக கூறினேன். எங்களுக்கு திருமணமாகி இப்போது 18 ஆண்டுகள் ஆகிறது.”
ஐ.டி துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றியவர் அதில் அதிருப்தி அடைந்து, தானே தனக்கு முதலாளியாக விரும்பினார்.
"டேட்டா செண்டர் ஒன்றில் ரூ.1000 மாதசம்பளத்தில் சிஸ்டம் அட்மினாக எனது முதல் வேலை அமைந்தது. என்னை அலுவலகத்திற்கு அழைத்து வந்துச்செல்ல அப்பா அதற்கு மேல் செலவு செய்து கொண்டிருந்தார். எனக்கு தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதில் தீவிர ஆர்வம் இருந்ததால் இது பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை .நான் திங்கள் அன்று வேலைக்குச்சென்று வியாழன் அன்று திரும்பி வந்த தருணங்கள் கூட உண்டு.”
அப்போது சக்தி இளமை மற்றும் உற்சாகத்துடன், எதையாவது சாதிக்க வேண்டும் எனும் துடிப்பு கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் நெட்வொர்கிங் நிறுவனத்தில் சேர்ந்து அமெரிக்கா சென்றார். அங்கு தான் அவர் வலைப்பதிவு மற்றும் பின்னர் குறும்பதிவு செய்ய ( டிவிட்டர்) கற்றுக்கொண்டார்.
”டிவிட்டரில் அறிமுகமானதும் அந்த ஊடகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனது தொழில்நுட்ப பின்னணி மற்றவர்களுக்கு உதவ உதவியது.
டிரால்களின் தொல்லை
ஆனால் டிவிட்டரில் செயல்படுபவர்கள், டிரால்களின் தொல்லையில் இருந்து தப்புவது கடினம் அல்லவா? சக்தியும் ஆன்லைன் விஷத்தை சந்திக்க வேண்டியிருந்தது. "ஒரு கட்டத்தில் குழுவாக சிலர் எனது இணைய இருப்பு மீது தாக்குதல் தொடுத்தனர். நிலைமை மிகவும் கடினமாக மாறிய போது நண்பர்கள் எனது டிவிட்டர் முகவரியை நான் விற்பனை செய்யாமல் தடுத்ததுடன், வலைப்பதிவு செய்யவும் வலியுறுத்தினர்”.
டிஜிட்டல் உலகில் எப்போதுமே ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு ஹேக் செய்யக்கூடிய பாஸ்வேர்டுடன் தோன்றும். "அந்த கட்டத்தில் தொடர்ச்சியாக என்னை வெளிப்படுத்தக்கூடிய வகையில் சொந்தமாக ஒரு இணைய மேடை இருந்தால் நன்றாக இருக்கும் எனத்தோன்றியது. அதனால் தான் "தி குவில்" (The Quill. )துவக்கினேன்.
அலெக்சா வரிசையில் அதை முன்னணியில் கொண்டு வர வேண்டும் என்றோ அல்லது அந்த பிரிவில் முன்னணிக்கு வர வேண்டும் என்றோ அல்லது ஒரு பதிவுக்கு 2,000 டாலர் சம்பாதிக்க வேண்டும் என்றோ நினைக்கவில்லை. இப்போதும் அப்படி நினைக்கவில்லை. நான் தொடர்பு கொள்வதற்காக எழுதுகிறேன். அது பலன் தருகிறது.
நான் வழிகாட்டியாக இருக்கும் ஸ்டார்ட் அப்களுடன் தொடர்பு கொள்வதற்கான மேடையாக தி குவில் இருக்கிறது” என்கிறார் சக்தி. தி குவில் மூலம் ஹியூகோ பாரா, மனு குமார் ஜெயின் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் அவருக்கு நண்பர்களாகியுள்ளனர்.
ஆம் உண்மையான நண்பர்கள்; அவர்களுக்கு என்னையும் என் குடும்பத்தினரையும் நன்றாகத்தெரியும். மற்ற எல்லாவற்றையும் விட மனித தொடர்பை நான் முக்கியமாகக் கருதுகிறேன். இதில், தி குவில் மந்திர கோலாக இருக்கிறது, என்கிறார் அவர்.
"இப்போது கூட நான் வதந்திகள் மற்றும் கசிவுகளை வெளியிடுவதில்லை. இதுவே நான் சொல்வதை எனது வாசகர்கள் முக்கியமாக கருத ஒரு காரணமாக இருக்கிறது. எதிர்காலத்தில் தி குவில் தகவலுக்கான முழுமையான தளமாக இருக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளை பணிக்கு அமர்த்திக்கொள்ளும் டிஜிட்டல் ஏஜென்சியாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்” என்கிறார் அவர்.
டிவிட்டர் நட்சத்திரம்
இணைய உலகில் இவருக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது- அவரது டிஜிட்டல் செயல்பாடுகளில் எது அவரது முழுநேர பணி என்று கண்டறிவது கடினமாக இருக்கும். ஆனால் ஒருவரால் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருப்பது சாத்தியம் என்றால் அது சக்கர நாற்காலியில் இருக்கும் இந்த துடிப்பான மனிதரால் தான் முடியும். குவில் சேவையில் அவர் கவனம் செலுத்தினாலும் தனக்கு வரும் குறும்பதிவு எதற்கும் அவர் பதில் சொல்லாமல் இருப்பதில்லை.”
"பகல் பொழுதில் என் கவனத்திற்காக டிவிட்டருடன் என் மனைவி போட்டி போட வேண்டும்! இப்படி நகைச்சுவையாக சொன்னாலும், டிவிட்டர் ஒரு ஒலிபெருக்கி , தொலைநோக்கி, நுண்நோக்கி எல்லாம் ஒன்றாக கலந்தது. நீங்கள் சொல்வதை எல்லோரும் கேட்கலாம். எங்கு நடப்பதையும் நீங்கள் பார்க்கலாம். நீங்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட ஆய்வுக்குட்படுத்தப்படும்”.
”தினமும் குறும்பதிவிட்டது மற்றும் எனக்கு வந்த எல்லா குறும்பதிவுகளுக்கும் பதில் அளித்தது சரியான பலனை அளித்தது,” என்கிறார் அவர்.
அவர் எளிதில் அணுக கூடியவராக இருப்பது அவரது நட்சத்திர அந்தஸ்துடன் முரணாக இருந்தாலும் அவர் இதை தன் வழியில் மானுடமயமாக்கினார்.” ஆரம்பத்தில் என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. எனது எல்லா இணைய கணக்குகளையும் மூடிவிடலாமா என்று கூட ஒரு கட்டத்தில் நினைத்தேன்.
அப்போது தான் ஆன்லைனில் பயனுள்ள விஷயங்களை அளிக்காவிட்டால் யாரும் என் மீது நம்பிக்கை கொண்டு என்னுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என புரிந்து கொண்டேன். இதனிடிப்படையில் செயல்பட்டேன். ஆனால் இந்த இடத்திற்கு வர நான்கு ஆண்டுகள் ஆனது.”
"அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் எம்பி ரஹ்மான் மாலிக் என்னை பின் தொடர்வதை அறிந்ததும் வியந்தேன். ஆனால் ஒரு போதும் காலையில் கண் விழித்ததும் இன்று ஃபாலோயர்களுக்கு என்ன சொல்வது என்று கவலைப்பட்டதில்லை. நான் இன்னமும் ஜஸ்டின் பெயபர் ஆகிவிடவில்லையே”.
டிஜிட்டல் ஆன்மாவுக்கு மருந்து
டிஜிட்டல் ஆன்மாவுக்கான மருந்து பற்றி அவரிடம் கேட்காமல் இருக்க முடியாது. "நீங்கள் சாதாரண வாழ்க்கையில் செய்யாத எதையும் ஆன்லைனிலும் செய்ய வேண்டாம். ஆன்லைனில் ரகசியங்கள் எதுவும் இல்லை. எல்லாமே சிறிது நேரத்தில் கண்டறியப்பட்டு விடும். ஆன்லைனில் அந்தரங்கம் கிடையாது. தனிப்பட்ட விஷயங்களை ஆன்லைனுக்கு கொண்டு செல்ல வேண்டாம். தேவைப்படும் போது உதவுங்கள்.
தேவை எனில் உதவி கேளுங்கள். ஃபாலோயர் எண்ணிக்கை மற்றும் கிளவுட் மதிப்பை விட உரையாடல் மிகவும் முக்கியம். டிரால்களிடம் பரிவு காட்டுங்கள்; அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. எல்லா கோரிக்கைகளுக்கும் பதில் அளிக்கவும்”. டிவிட்டரில் கோலோச்ச இவையெல்லாம் அவசியம். ஆனால் அவர் இவற்றை எளிதாக மேற்கொள்கிறார்.
ஊக்கத்தின் பாதை
இவை தவிர சக்தி திறம்பட செய்திருக்கும் மற்றொரு விஷயம் தனது குறைபாடுகளை பற்றி கவலைப்படாமல் இலக்குகளை நோக்கி முன்னேறுவது.
"பாதகமானது என கருதப்படும் எதுவுமே நம் எண்ணத்தில் தான் இருக்கிறது. நீங்கள் எந்த ஒரு விஷயம் பற்றி அதிகம் யோசித்து, பேசி, கவலைப்படுகிறீர்களோ அது உங்கள் சிந்தனையில், சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. நான் கீழே விழும்போது அதனால் பாதிக்கப்படுவதில்லை. அது மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.”
”மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்க உடனடி பரிவை நம் சமூகம் வைத்திருக்கிறது. நாங்கள் அதை உண்மையில் விரும்பவில்லை, வெறுக்கிறோம் என அது உணர்வதில்லை. மற்றவர்கள் போலவே வாழ்க்கைகான வாய்ப்புகளை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்”.
"அதோடு சிலர் எங்கள் பிரச்சனையை சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் யார்?நம்முடைய சமூகம், ஒன்று பரிவு காட்டுகிறது, இல்லை அலட்சியப்படுத்துகிறது. அவர்களிடம் இருந்து சகஜநிலையை எதிர்பார்க்க முடியாது.”
ரெயில்வே சலுகைகள், வருமான வரி சலுகை மற்றும் மாநாடுகள் போன்றவை எப்படி பயனற்றதாக இருக்கின்றன என்பதை அவர் விளக்குகிறார்.
"எங்கும், என்னால் நான் விரும்பியதை செய்ய முடியுமா? இது தான் அளவுகோளாக இருக்க வேண்டும். எங்களுக்கு அனுதாபம் வேண்டாம். எங்களை தொழில்முறையில் நடத்துங்கள். சமமான வாய்ப்பு கொடுங்கள். இந்தியாவில் சக்கர நாற்காலியில் பயணம் செய்யும் வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் என்னை சக்கர நாற்காலியில் இருந்து எழுந்திருக்கச் சொன்னார்கள். இந்த நாட்டில் எந்த ஒரு நகரிலும் நான் சக்கர நாற்காலியுடன் பஸ்சில் ஏற முடியாது. மருத்துவமனைகளும் இப்படி தான் இருக்கின்றன”.
”இந்த பிரச்சனைகள் பற்றி பேசக்கூடிய மாற்றுத்திறனாளி தலைவர் ஒருவரும் இல்லை என்பது தான் பிரச்சனை. இந்த நிலை மாறவேண்டும். இந்தியாவில் நாங்கள் 20 மில்லியன் பேர் இருக்கிறோம்” என்கிறார் சக்தி.
சக்தி தனது உடல் நிலையை தன்னுடைய தனித்தன்மை வாய்ந்த பல விநோத அம்சங்களில் ஒன்றாகவே பார்க்கிறார்.
இவரை ஃபாலோ செய்ய: @v_shakthi , The Quill