சீனாவுக்கு இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி 58% அதிகரிப்பு!
இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அளவில், இந்தியா-சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த இருநாடுகளும் முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொறியியல் சாதனங்களின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவு குறைந்துவரும் வேளையில், இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொறியியல் சாதனங்களின் அளவு, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டுக்கு 58 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகத்திற்கு உட்பட்ட பொறியியல் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் உட்பட இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொறியியல் பொருட்கள், சீனாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 176 புள்ளி 94 மில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த ஏற்றுமதி 112 புள்ளி 20 மில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது 57 புள்ளி 70 சதவீதம் உயர்ந்துள்ளது.
சர்வதேச வர்த்தகம் தேக்கம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொறியியல் சாதனங்களின் அளவு அதிகரித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என இந்திய பொறியியல் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சிலின் தலைவர் ரவி ஷெகால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் இதுவரை புதுதில்லியில்தான் இந்திய தலைவர்களை சந்திப்பது வழக்கமாக இருந்து வந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, சீன அதிபர் ஷி ஜின்பிங்-கும், பிரதமர் மோடியும் குஜராத் மாநிலம், சபர்மதி ஆற்றங்கரையில் சந்தித்துப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து, சீனாவின் பண்டைக்கால தலைநகராக கருதப்படும் ஊஹான் நகரில் இருதலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பிரஞ்ச் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன், பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். வேறு சில நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பும் தில்லிக்கு வெளியே நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக , தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், பண்டைக் காலத்தில் தமிழகம்–சீனா இடையே நடைபெற்ற வர்த்தக பரிமாற்றங்களை நினைவுகூறும் விதமாகவும், தமிழகத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமான யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், இன்றும், நாளையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.