டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக சைக்கிளில் பயணம் - யார் இந்த ஜிபின் ஜார்ஜ்?
டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நாட்டை உலுக்கி வருகிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் அந்த போராட்டம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
எந்தெந்த வகையில் முடியும் அந்த வகையில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகளுக்கு ஆதரவுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படித்தான் தன்னால் முடிந்த வகையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஜிபின்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள சங்குமுகம் பகுதியைச் சேர்ந்தவர். சேர்ந்தவர் ஜிபின் ஜார்ஜ். 22 வயதான இவர், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜிபின் தனது சொந்த ஊரிலிருந்து காஷ்மீருக்கு சைக்கிளிலிருந்தே மாராத்தான் சென்றிருக்கிறார். அவர் செல்லும் வழியில் வேளாண் சட்டங்கள் குறித்தும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். ஜனவரி 7 ஆம் தேதி தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய அவர் வியாழக்கிழமை வடக்கு கேரளாவின் கோழிக்கோடை அடைந்தார்.
"நான் ஜனவரி 7 ஆம் தேதி சாலைப் பயணத்தைத் தொடங்கினேன், நெடுஞ்சாலை வழியாக மகாராஷ்டிரா வரை சென்று, அங்கிருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தானை உள்ளடக்கிய பகுதிகள் வழியாக உட்புறப்பகுதிகளில் நுழைந்து, டெல்லியை அடையத் திட்டமிட்டுள்ளேன்.”
தேசிய தலைநகரில் விவசாயிகளைச் சந்தித்த பிறகு, நான் மீண்டும் காஷ்மீர் பயணத்தை தொடருவேன். காஷ்மீரை அடைய இரண்டு மாதங்கள் ஆகும், என்று ஜிபின் இந்தியா டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.
ராஜதனி இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜியின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஜிபின், அண்மையில் தென்னிந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தின்போது விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து அறிந்து கொண்டதாகக் கூறியுள்ளார்.
"கடந்த மாதம் நான் தென்னிந்தியா முழுவதும் ஒரு நீண்ட தூர சைக்கிள் பயணத்தில் இருந்தேன். விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும், நான் வீட்டிற்கு வந்தபிறகு தான் அதன் வீரியத்தை அறிந்துகொண்டேன். செய்திகளில் இருந்து வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து மேலும் அறிந்து கொண்டேன்.”
நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். காஷ்மீர் வரை சைக்கிளில் பயணம் செய்ய வேண்டும் என்பது எனது நீண்டகால கனவாக இருந்தது. நான் ஏன் இந்த வாய்ப்பை விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பயணமாக மாற்றக்கூடாது? என்று யோசித்தேன்.
இது போன்ற சைக்கிள் பயணம் எனக்கு புதியதில்லை என்றாலும், ஒரு கருப்பொருளைக் கொண்டு இதுபோன்ற ஒரு பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும், என்று ஜிபின் கூறியுள்ளார்.
அவரது முயற்சிக்கு அவரது குடும்பத்தினரின் ஆதரவைப் பற்றி கேட்டபோது,
கடந்த இரண்டு ஆண்டுகளாக சைக்கிளில் நீண்ட பயணம் மேற்கொண்டிருப்பதால் எனது ஆர்வத்துக்கு அவர்கள் எந்த தடையும் விதிப்பதில்லை என்று ஜிபின் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: மலையரசு