சிங்கிள் மாம் போராட்டம் டூ சினி மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகி அசத்தும் நிரஞ்சனா!
கையில் இரண்டு குழந்தைகளுடன் விதவை ஆகி, 15 ஆண்டுகளாய் வாழ்க்கை ரேசில் ஓடி வெற்றியை பார்க்கத் தொடங்கியுள்ள இவர், வழிநெடுகிலும் பல குண்டு, குழிகளைத் தாண்டி வந்திருக்கிறார்.
“சொந்த ஊர் சென்னை. அம்மா, அப்பா, தம்பினு சின்ன குடும்பம். 2000ம் ஆண்டில் கல்யாணம். 2001ல் பையன். 2003ல் பொண்ணு. 2004ல் கணவர் விபத்தில் இறந்திட்டாரு. 15 வருஷமா பிரைடல் மேக்கப் ஆர்டிஸ்ட். 5 வருஷமா செலிபிரிட்டிகளுக்கும் ஹேர் ஸ்டைலிங் பண்றேன். 7 வருஷமா பார்லர் ஒன்றை நடத்தி வருகிறேன்...” என்று படபடவென பேசும் நிரஞ்சனா, உண்மையில் துறதுறு பெண்மணி.
கடந்த 15 ஆண்டுகளாய், ஒற்றை மனுஷியாய் நேரம் காலம் பாராமல் கிடைக்கும் நேரங்களில் நர்சிங், மணப்பெண்களுக்கு அலங்காரம், ஏழைப் பெண்களுக்கு இலவச பியூட்டிஷியன் பயிற்சி,சினிமா செலிபிரிட்டிகளது பெர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்ட் என நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் நிரஞ்சனா, அறிஞர் அண்ணாவின் ஒன்னுவிட்ட பேத்தி.
15 ஆண்டுகளாய் வாழ்க்கை ரேசில் ஓடி வெற்றியை பார்க்கத் தொடங்கியுள்ள அவர், அவரது ஓடுகள தளத்தின் வழிநெடுகிலிருந்து குண்டு, குழிகள் பற்றியும் அவற்றை கடந்ததை பற்றியும் பகிரத் தொடங்கினார்...
“ஆசையா காதலிச்சு, இரண்டு பேர் வீட்லயும் எந்த மறுப்புமின்றி லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். அவரு போலீஸ். திடீர்னு ஒரு நாள் ரோடு ஆக்சிடன்ட் ஆகி, அவரு எங்கள விட்டுட்டு போயிட்டாரு. அதுக்கு அப்பறம் லைஃபே கிடையாதுனு மனசு உடைஞ்சு போயிட்டேன். இரண்டு, மூணு தடவை தற்கொலைக்கும் முயற்சித்தேன். 6 மாதத்துக்கு எதுவுமே செய்யாம வாழ்க்கையே வெறுத்து போச்சு. அந்த சமயத்தில் ஆட்டோகிராஃப் படத்தில் வரும் ‘ஒவ்வொரு பூக்களுமே...’ பாட்டை தான் கேட்டுட்டே இருப்பேன். அந்த பாடலின் வரிகள் தான் என்னை மீட்டெடுத்து.
அம்மா, அப்பாவும் தம்பி வீட்டில் இருந்தாங்க. அங்க போயி கொஞ்ச காலம் இருந்ததுல தம்பி வீட்ல என்னால நிறைய சண்டை. இனி அவங்களுக்கு தொந்தரவா இருக்கக் கூடாதுனு, பிள்ளைகளை கூட்டிட்டு வீட்டைவிட்டு கிளம்பிட்டேன். என்ன பண்றதுனே தெரில. பிள்ளைகளை ஸ்கூல் ஹாஸ்டலிலே சேர்த்துவிட்டு விட்டு, நானும் ஒரு ஹாஸ்டலில் தங்கி, ஹாஸ்பிட்டலில் வேலை செய்தேன்.
காலையிலிருந்து மாங்கு மாங்குனு வேலை பாத்தாலும், மாசச் சம்பளம் வெறும் 3,000 ரூபாய் தான். அந்த காசு, பிள்ளைங்க படிப்பு செலவுக்குலாம் பாத்தாதுனு. பகல் டியூட்டி முடிந்து நைட் ஷிப்ட்டும் தொடர்ச்சியா பாப்பேன்.
“நைட்டு, பகல்னு இல்லாம தூக்கம் இல்லாம வேலை செய்வேன். பிள்ளைங்க லீவுக்கு வந்துபோன கூட தங்குறதுக்கு வீடு கிடையாது,” என்று நிரஞ்சனா கண்ணீருடன் கூறுகையிலே அவர் பட்ட கஷ்டங்கள் காட்சிகளாக கண்முன்னே விரிந்து மனதை கணத்தன.
ஸ்கூல் படிக்கும் போதிருந்தே மேக்கப் செய்துவிடுவதில் ஆர்வமிக்க அவர், மெஹந்தி போடுவதிலும் கில்லாடி. பள்ளிப் படிப்பு முடிந்து பியூட்டிஷியன் கோர்ஸ் படிக்க விருப்பப்பட்டுள்ளார். ஆனால், பெற்றோர்களின் விருப்பத்துக்கேற்ப நர்சிங் சேர்ந்து படித்துள்ளார். கணவர் இறந்த பிறகு குழந்தைகளுக்காக அவருடைய கல்வி தகுதி உயர்த்தியுள்ளார். நர்சிங்கில் இருந்து லேப் டெக்னீசியன், ஈசிஜி டெக்னிஜியன், பி.எஸ்சி சைக்காலஜி படித்து, பிடித்த வேலைய செய்யலாமென பியூட்டிஷயன் பயிற்சி எடுத்துள்ளார்.
உள்ளூரில் அடிப்படையான பியூட்டிஷியன் பயிற்சி முடித்துவிட்டு, நேச்சுரல்ஸ் சலூனில் மேனேஜராக பணிபுரிந்துள்ளார். கை நிறைய சம்பளம் என்றாலும், மன நிறைவான வேலையை செய்ய எண்ணி அட்வான்ஸ் லெவல் மேக்கப் பயிற்சி மேற்கொண்டு சென்னை நேச்சுரல்சில் பியூட்டிஷியனாக பணிக்கு சேர்ந்துள்ளார். அது தான் தொடக்கம். இன்று, கடந்த 7 ஆண்டுகளாக சென்னை பல்லாவரத்தில் ‘லாவெண்டர் ப்யூட்டி சலூன் அண்ட் மேக்கப் ஸ்டூடியோ’ என்ற பெயரில் சக்சஸ்புல்லாக பியூட்டி பார்லர் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
“ஒவ்வொரு முறை மேக்கப் அப்டேஷன் கோர்ஸ் முடிப்பதற்கே லட்சங்களில் செலவாகியது. பிள்ளைகளையும் தனியார் ஸ்கூலில் சேர்த்துள்ளதால், ஃபீஸ் வேறு எக்கச்சக்கமாய் வரும். வட்டிக்கு மேல் வட்டினு கடன் வாங்கி ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்போ, பார்லர் தொடங்க அம்மா தான் 3லட்ச ரூபாய்க்கான நகைகளை கொடுத்தாங்க. அதை விற்று தான் பார்லரை தொடங்கினேன். ஏற்கனவே, நேச்சுரல்சில் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால் தனியாக பார்லரை நடத்துவது சிரமமாக இல்லை. எனக்குனு இருந்த கஸ்டமர்கள் என்னைத் தேடி வந்தனர்.”
இதுவரை 1,000க்கும் அதிகமான மணப்பெண்களை அலங்காரம் செய்துள்ளேன். வாழ்க்கைல திரும்பிப் பார்க்க விரும்பாத ஒரு நிகழ்வா முடிஞ்ச ஒண்ணு. ஆனா, இன்னிக்கி அதுவே வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேக்கப் பொருள்களை வாங்கினது போக, மாதத்திற்கு ரூ.1,00,000 வருமானம் வருது. இருந்தாலும், ஈ.எம்.ஐ வாழ்க்கையில் கைக்கு வருவது இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடுகிறது.
அதுவும் இல்லாம இது சீசன் பிசினஸ் என்பதால் புரட்டாசி, ஆடி மாதங்களில் பிசினஸ் டல் அடிக்கும். அந்த சமயங்களில் எங்க ஸ்டூடியோவில கஷ்டப்படுகிற பெண்களுக்கு இலவசமாக பியூட்டிஷியன் கோர்ஸ் எடுக்கும் வேலையில் இறங்கிவிடுவேன். அந்த மாதிரி நிறைய பெண்களுக்கு பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.
அதுல நிறைய பேரு ‘அக்கா, நீங்க இல்லன்னா இந்நேரம் என் லைஃப் எப்படி போயிருக்கும்னே தெரில’னு சொல்லுவாங்க. கேட்கும் போது உள்ளுக்குள் ஒரு சந்தோஷமா இருக்கும்,” என்றவர் சின்ன சின்ன சந்தோஷங்களால் வாழ்க்கையை அழகாக்கி வருகிறார்.
நிரஞ்சனாவின் திறமைக்கான அங்கீகாரங்களாக, ‘உழைக்கும் பெண்களுக்கான சாதனையாளர் விருது’, ‘ஃபீனிக்ஸ் விருது’, ‘சிறந்த மணப்பெண் ஒப்பனையாளர் விருது’ ஆகிய விருதுகளும் கிடைத்துள்ளன. அப்படி, 2018ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நடத்தப்பட்ட ‘சங்கமம் சாதனையாளர் விருது - 2018’ அழகுப் போட்டியில் சிறப்பாக அலங்காரம் செய்ததாக நிரஞ்சனாவுக்கு முதல் பரிசு கிடைத்தது.
இதில் சிறப்பு என்னவென்றால், நிரஞ்சனா போட்டிக்காக அழைத்துச் சென்றவர் ஒரு திருநங்கை.
“அங்க இருக்கிற யார்கிட்டயும் நீ ஒரு திருநங்கைனு சொல்ல வேண்டாம்னு சொல்லி தான் ஜீவாவை அழைத்துச் சென்றேன். ஒவ்வொரு பரிசா அறிவிச்சுட்டு வரும் போது, முதல் பரிசு எங்களுக்குனு சொன்னதும் என்னால நம்பவே முடியல. விருதை கையில வாங்கினதுக்கு அப்புறம் தான் ஜீவா அழுதுகிட்டே, தான் ஒரு திருநங்கை என கூறினார். அதை கேட்ட அனைவரும் அப்படியே ஆச்சர்யப்பட்டு பார்த்தாங்க. அந்த நிகழ்வை என்னால மறக்கவே முடியாது,” என்றார்.
இந்தியாவின் நாற்திசைக்கும் பயணித்து, மேக்கப் கோர்ஸ் முடித்து தமிழ் சினிமாவில் பல செலிபிரிட்டிகளுக்கு பெர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்டாக பணிபுரிந்து வருகிறார் நிரஞ்சனா. சினித்துறைக்குள் காலடி வைத்த கதையை பகிர்ந்தார். “பிரைடல் மேக்கப் 15 வருஷமா போட்டுட்டு இருக்கும் சமயத்தில், அடுத்ததென்ன, அடுத்ததென்ன என்ற தேடலில், தென்னந்திய சினிமா ஒப்பனையாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அதன் பிறகு, நடிகை ராதிகா மேடமின் ராடன் தயாரிப்பு கம்பெனியில் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக 3 வருடங்களாக வேலை பார்த்தேன். ‘வாணி ராணி’ சீரியலுக்கு ராதிகா மேடமின் இரு கதாபாத்திரத்தும் நான் தான் வேறு வேறு லுக்கில் ஹேர் ஸ்டைலிங் பண்ணேன். சீரியல் முடிந்தவுடன் என்னோட வொர்க்கை பார்த்து, பெர்சனல் ஹேர் ஸ்டைலிங் பண்ண ராதிகா மேடம் கூப்பிட்டாங்க. அப்படியே, நளினி மேம், பிக்பாஸ் மதுமிதா, நடிகை சினேகா, ஐஸ்வர்யா ராஜேஷ், மதுபாலா என பலருக்கும் பெர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்ட்டா வொர்க் பண்ணியிருக்கேன். ரீலிசாக உள்ள பல படங்களுக்கும் வொர்க் பண்ணியிருக்கேன்.
ஷுட்டிங் ஸ்பாட், கல்யாண மண்டபம், பார்லர் என ஓய்வு நேரமே இல்லாம ஓடிக் கொண்டே இருக்கும்போது, ஒரு நாள் ஆக்சிடென்ட் ஆகிருச்சு. ஸ்கூட்டியில் போகும் போது, எதிரே வந்த கார் மோதிருச்சு. அவரே என்னை என் பேக்கிலிருந்தே காசை எடுத்து அட்மிட் பண்ணிட்டு போயிட்டாரு. அப்புறம் ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் நானே அதே வண்டிய ஓட்டிக்கிட்டே வீடு வந்து சேர்ந்துட்டேன். சின்ன காயம் தானு அசல்ட்டா விட்டதில், காலையே எடுக்கணும்னு நிலையில கொண்டு போயி விட்டுருச்சு. ஏதோ இன்ஃபெக்ஷனாகி காலை எடுக்கணும்னு சொன்னாங்க முதலில், அப்புறம் வேணாம்னு ஆப்ரேஷன் பண்ணாங்க. அதனால, தொடர்ந்து 5 மணி நேரம் நின்னாலே கால் வீங்கிக்கும். பிள்ளைகள் படித்து, நல்ல வேலைக்கு போகும் வரை உழைத்துத் தான் ஆகவேண்டும். ஏன்னா, என் மகன் என்கிட்ட அடிக்கடி,
‘அம்மா, நீ சுடிதார் போட்டா அம்மா; ஜீன்ஸ் போட்டா அப்பா’னு சொல்லுவான்...''எனத் தாய்மையில் நெகிழ்ந்தார் நிரஞ்சனா.