குக்கிராமம் டூ தலைமை நீதிபதி: யார் இந்த என். வி. ரமணா?
தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் என்.வி.ரமணா பற்றிய தொகுப்பு!
ஆந்திராவின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருப்பவர் நீதியரசர் என்.வி.ரமணா. தற்போது உச்சநீதிமன்ற நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் போப்டே ஏப்ரல் 23ம் தேதியுடன் ஓய்வுபெறப்போகிறார்.
இந்நிலையில், அவர் தனக்கு அடுத்தபடியாக மூத்த நிதியபதியான என்.வி.ரமணாவை இந்தியாவின் 48வது தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார். நீதிபதி போப்டேவின் பரிந்துரை ஏற்கப்படும் பட்சத்தில் பி.வி.ரமணா அடுத்த தலைமை நீதிபதியாக ஏப்ரல் 24ம் தேதி பதவி ஏற்பார். அவர் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி வரை இந்திய தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார்.
யார் இந்த பி.வி.ரமணா?
ஆந்திராவில் உள்ள பொன்னாவரம் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் 1957ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி பிறந்தவர் நீதியரசர் நுதலபட்டி வெங்கட ரமணா. 1983ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வழக்கறிஞராக பார்கவுன்சிலில் தன்னை பதிவு செய்துகொண்டார். இதையடுத்து 2000ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி முதல் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார்.
மேலும், ஆந்திர உயர்நீதிமன்றத்தில் செயல் தலைமை நீதிபதியாக 2013ம் ஆண்டு மார்ச் 10 முதல் 2013ம் ஆண்டு மே 20 வரை பணியாற்றினார். நீதிபதி ரமணா செப்டம்பர் 2, 2013 முதல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், பிப்ரவரி 17, 2104 முதல் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். சட்டம் தவிர்த்து, தத்துவம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
பி.வி.ரமணா வழங்கிய முக்கிய தீர்ப்புகள் இங்கே :
கடந்த ஜனவரி மாதம், நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் வேலையின் மதிப்பு, அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்யும் கணவனை விட குறைவானது இல்லை என்று கூறியிருந்தார். பல்வேறு தரப்பினர் இதனை வரவேற்றனர்.
நீதிபதி ரமணா 2001 ஆம் ஆண்டு விழாவின்போது தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான லதா வாத்வா வழக்கில், இல்லத்தரசிகள் அவர்கள் வீட்டில் செய்த சேவைகளின் அடிப்படையில் அதை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தார்.
என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் பி.ஆர்.கவாய் ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம், மாநிலத்தில் தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவைகளுக்கு தடைகளை விதிக்கும் அனைத்து உத்தரவுகளையும் ஒரு வாரத்தில் மறுஆய்வு செய்து, பொது தளத்தில் வைக்குமாறு கேட்டுக்கொண்டது.
ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில் 4 ஜி மொபைல் இணைய சேவையை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆராய்வதற்காக என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் பி.ஆர்.கவாய் ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா, டி.ஒய் சந்திரசூட், தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோரின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, நீதிச் சட்டத்தின் 184வது பிரிவு செல்லுபடியாகும் என உறுதி செய்தது.
டி.எஸ். தாக்கூர், ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, சிவ கீர்த்தி சிங், என்.வி.ரமணா, ஆர்.பானுமதி மற்றும் ஏ.எம். கான்வில்கர், ஜே.ஜே., உள்ளிட்ட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாநிலங்கள் விதித்த நுழைவு வரி செல்லுபடியாகவும் என்பதை உறுதி செய்தது. மேலும், மாநிலங்களுக்கு தங்கள் நிதிச் சட்டங்களை வடிவமைக்கும் உரிமை உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழகத்திலிருந்து ஆதி சைவ சிவாச்சாரியர்கள் நலச் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது ஆகமங்களின்படி செய்யப்பட வேண்டும் என்றும் என்.வி.ரமணா உள்ளடக்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.