காட்டிலுள்ள அரிய வகை ஆர்கிட் மலர்களை பாதுகாக்கும் பெட்டர்சன் நஷாங்வா!
மணிப்பூரைச் சேர்ந்த ஆசிரியரான பெட்டர்சன் நஷாங்வா காட்டில் வெட்டப்படும் அரிய வகை ஆர்கிட் மலர்களை சேகரித்து தனது வீட்டில் மறுநடவு செய்து பாதுகாப்பதுடன் மரங்கள் வெட்டவேண்டாம் என மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் பல வண்ணங்களில் வகை வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்கள் நம்மை மெய்மறக்கச் செய்துவிடும். அத்தனை ரகங்கள். அத்தனை நிறங்கள். இவற்றில் சில பூக்கள் அரிய வகைகளைச் சேர்ந்தவை.
இங்குள்ள காடுகளில் எத்தனையோ அரிய வகை மரங்கள் உள்ளபோதும் மக்கள் அவற்றை வெட்டி அழித்து வருகின்றனர். இவற்றை பராமரிக்காமல் போனால் இந்த வகை மரங்களையே நாம் இழந்துவிடும் அபாயம் உள்ளது.
காடுகளில் உள்ள மரங்களை வெட்டுபவர்கள் மத்தியில் பெட்டர்சன் நஷாங்வா என்பவர் இங்குள்ள அரிய வகைப் பூக்களைப் பராமரித்து வருகிறார்.
2014ம் ஆண்டில் இந்த பராமரிப்பு வேலையைத் தொடங்கினார். காடுகளில் இருக்கும் ஆர்கிட் செடிகளை சேகரித்தார். அவற்றைக் கொண்டு வந்து தன் வீட்டில் மறுநடவு செய்தார். அவரே இயற்கையான முறையில் அவற்றைப் பராமரிக்கத் தொடங்கினார்.
ஆசிரியரான பெட்டர்சன் வெவ்வேறு கிராமங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு செல்வது வழக்கம்.
“இப்படி நிறைய பள்ளிகளுக்கு போகும்போதுதான் மக்கள் மரங்களை வெட்றதை கவனிச்சேன். அழகான ஆர்கிட் பூக்களெல்லாம் நாசமாச்சு. அதைப் பார்க்கவே மனசுக்கு கஷ்டமா இருந்துது. இப்படியே மரங்களை எல்லாம் வெட்டிட்டா, இந்த மாதிரியான பூக்கள் அடுத்தடுத்த தலைமுறையைச் சேர்ந்தவங்களுக்குக் கிடைக்காமலே போயிடும்னு யோசிச்சேன். அப்பதான் இதைப் பாதுகாக்கணும்னு தோணுச்சு. பராமரிக்க ஆரம்பிச்சேன். அதுவே பழக்கமா மாறிடுச்சு,” என்கிறார்.
பெட்டர்சன் கிட்டத்தட்ட 60-70 வகையான செடிகளை பராமரித்து வருகிறார். கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்ட ஆர்கிட் செடிகளை வளர்த்து வருகிறார். பலர் இந்தச் செடிகளையும் பூக்களையும் பார்ப்பதற்காகவே இவரது வீட்டிற்கு வந்து செல்கிறார்கள்.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இவரால் காட்டுக்குச் சென்று வர முடியாமல் போனது.
“மக்கள் மரங்களை வெட்றதை நிறுத்தலை. தொடர்ந்து வெட்டிகிட்டேதான் இருக்காங்க. நானும் தொடர்ந்து அவங்ககிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு வரேன். சிலர் என்னோட பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வெட்டப்பட்ட செடிகளை மறுநடவு செய்யறாங்க. இதைப் பார்க்கும்போது மனசுக்கு நிறைவா இருக்கு,” என்கிறார்.
நஷாங்வாவின் வீட்டில் இயற்கையான சூழலில் விதவிதமான அரிய வகை ஆர்கிட் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
தகவல் உதவி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில்: ஸ்ரீவித்யா