மகளை சீண்டியவர்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்மிருதி இரானி!
'அவளுடைய தாயாக இருப்பதில் பெருமையடைகிறேன்' என்று தலைப்பிட்டு மகளை கேலி செய்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி அவருடைய மகளுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட உடனே, மகள் சகமாணவர்களால் கிண்டலுக்கு ஆளாகிறார் என்பதை அறிந்து அப்பதிவை நீக்கினார். பின்னர், அவர் மகளின் புகைப்படத்திற்கு பவர்ஃபுல்லான கேப்ஷனிட்டு உருக்கமாக பதிவிட, அப்பதிவிற்காக நெட்டிசன்கள் மத்தியில் அன்புகளை பெற்று வருகிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தோற்கடித்த ஸ்மிருதி இரானி, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
கட்சி வேலைகள், தொகுதி மக்களை சந்தித்தல் என்று பிசியாக வலம் வந்தாலும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அரசியல்வாதி அவர். இந்நிலையில், கடந்த வாரம், அவருடைய மகள் ஜோயிஷ் இரானியுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
ஆனால், அப்பதிவை கண்ட ஜோயிஷுடன் பயிலும் சகமாணவர்கள் அவருடைய முகத்தோற்றம் குறித்து கேலி செய்துள்ளனர். இதனால், வேதனை அடைந்த ஜோயிஷ், அவருடைய அம்மாவிடம் அப்புகைப்படத்தால் தான் கேலிக்கு ஆளாகுவதாகவும், அதனை டெலிட் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மகளின் நிலையை கண்டு சிறிது தயக்கத்துடன், முதலில் அப்பதிவை நீக்கியுள்ளார். பிறகு, அவ்வாறு செய்வது கிண்டல்செய்பவர்களுக்கு கூடுதல் பலம் கிடைத்துவிடும் என்பதை உணர்ந்த அவர், இன்ஸ்டாகிராமில் மற்றொரு பதிவிட்டார்.
“நான் நேற்று பதிவிட்ட என் மகளின் செல்பி புகைப்படத்தை நீக்கிவிட்டேன். ஏனெனில், அவளுடைய வகுப்பில் உள்ள ஜா எனும் முட்டாள், அவளுடைய தோற்றத்திற்காக அவளை கேலி செய்துள்ளான். வகுப்பில் உள்ள அவனது நண்பர்களிடமும் ‘அவள் தாயின் இன்ஸ்டா பதிவில் எப்படி இருக்கிறாள்’ என்று கூறி அவர்களையும் அவமானம்படுத்தும்படி சொல்லியிருக்கிறான். ‘மா தயவுசெய்து அதை நீக்குங்கள், அவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்’ என்று என் குழந்தை என்னிடம் கெஞ்சியது. அவளுடைய கண்ணீரை என்னால் தாங்க முடியாமல் படத்தை நீக்கினேன். பிறகு தான், என்னுடைய இச்செயல் கொடுமைப்படுத்துவதை ஆதரிக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். எனவே திரு ஜா,
என் மகள் ஒரு திறமையான விளையாட்டு வீராங்கனை, லிம்கா புக்கில் இடம்பெற்று சாதனை படைத்தவர், கராத்தேவில் 2வது டான் பிளாக் பெல்ட் பெற்றவர், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வாங்கியுள்ளார். எனது அன்பான மகள், ஆம்... மிகவும் அழகானவள். நீங்கள் விரும்பும்வரை அவளை கொடுமைப்படுத்துங்கள், அவள் மீண்டும் போராடுவாள். அவள் சோயிஷ் இரானி, நான் அவளுடைய அம்மாவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்...” என்று பதிவிட்டார்.
ஸ்மிருதியின் நெகிழ்ச்சி மிக்க பதிவிற்கு 1,14,999 பேர் ஹார்டினிட்டு, கமெண்ட் பாக்சில் அன்புகளையும், ஆதரவுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
பட உதவி: ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராம் | கட்டுரையாளர் : ஜெயஸ்ரீ