வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு!
வேலூர் இலவம்பாடி முள் கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஆகியவற்றிற்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊருக்கும் என தனிப்பட்ட சிறப்பான பொருட்கள் அடையாளமாக இருக்கும். அப்படிப்பட்ட பொருட்களை கௌரவிக்கவும், அங்கீகாரம் கொடுப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் புவிசார் குறியீடு.
இந்த குறியீடு மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம், அறிவுசார் சொத்துரிமை துறை ஆகியவை இணைந்து இந்த குறியீட்டை வழங்குகிறது.
1999ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புவிசார் குறியீட்டு சட்டம் 2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் சம்பந்தப்பட்ட பொருளை வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ போலியாகவோ பயன்படுத்துவதை தடுக்க முடியும். தமிழ்நாட்டில் பல பொருட்களுக்கு இது போன்று மத்திய அரசின் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தவரிசையில் தற்போது வேலூர் இலவம்பாடி முள் கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஆகியவற்றிற்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.
முள் கத்திரிக்காய்
தமிழில் இலவம்பாடி முள் கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய முட்கள் நிறைந்த நாட்டு கத்தரிக்காய் இனமாகும். இவ்வகை கத்தரிக்காய்கள் இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் பளபளப்பாக காணப்படும். சராசரியாக ஒரு கத்தரிக்காயின் எடை 40 கிராம் வரை இருக்கும்.
புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள இக்கத்தரிக்காய்கள், மற்ற கத்தரி வகைகளை விட சுவையானதாகவும் இருக்கும். இந்த முள் கத்திரிக்காய் மென்மையாகவும், சதைப் பற்றுள்ளதாகவும் உள்ளது. பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்தி இந்த கத்திரிக்காய் இனத்திற்கு உண்டு.
இவ்வகை கத்தரிக்காய் செடியின் அனைத்துப் பகுதிகளிலும் முட்கள் இருக்கும். இந்த முட்களே அச்செடியின் மிகவும் தனித்துவமாகவும், அடையாளம் காணக்கூடியதாகவும் இருக்கிறது.
இந்த வகைக் கத்தரிக்காயை சுட்டும் சாப்பிடலாம், பார்பிக்யூ செய்யலாம், வறுக்கலாம், ஊறுகாய்கூட போடலாம். செடிகளில் கொத்து கொத்தாக காய்த்து தொங்கும் இக்காய்கள், 140-150 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 40-45 டன்கள் மகசூல் தருகின்றன. அறை வெப்பநிலையில் 3 நாட்களும், குளிரூட்டப்பட்ட சுற்றுப்புறத்தில் சுமார் 8 நாட்களும் இருக்கும்.
வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்டதாக இருப்பதால், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட இலவம்பாடி, ஈச்சங்காடு, பொய்கை புதூர் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 தலைமுறைக்கும் மேலாக முள்ளு கத்தரிக்காய் சாகுபடியை செய்து வருகின்றனர். இதனாலேயே இதனை வேலூர் முள்ளு கத்தரிக்காய் எனவும் அழைக்கின்றனர்.
இங்கு அறுவடை செய்யப்படும் முள் கத்திரிக்காய் வேலூர் ஒருங்கிணைந்த காய்கறி மார்கெட்டில் இருந்து சோளிங்கர், செய்யாறு, திருவண்ணாமலை, ஆரணி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்படுகிறது. அதேபோல், சென்னைக்கும் இலவம்பாடி கத்தரிக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதோடு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வேலூர் உழவர் சந்தை தொடங்கி வைத்தபோது, குறிப்பாக வேலூர் முள்ளு கத்தரிக்காயை குறிப்பிட்டு அதன் அரிய குணங்களை விவரித்தார். வேலூருக்கு கலைஞர் வந்தால், பரிமாறப்படும் உணவில் இலவம்பாடி கத்தரிக்காய் முக்கிய இடம்பெற்றிருக்கும். எனவே, அப்போதிருந்து இந்தக் கத்தரிக்காய்களுக்கு, ‘கலைஞர் கருணாநிதி சுவைத்து சாப்பிட்ட இலவம்பாடி கத்தரிக்காய்’ என்ற பெயரும் உண்டு.
நீண்ட காலமாகவே இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது அவற்றிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் குண்டு மிளகாய்
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி பகுதிகளில் தொடர்ச்சியாக குண்டு மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர். சம்பா மிளகாய்களை காட்டிலும் அதிக மகசூல் தரக்கூடியது குண்டு மிளகாய்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மிக அதிகளவிலும், அதற்கு அடுத்த படியாக, அதன் பக்கத்து மாவட்டங்களான சிவகங்கை, துாத்துக்குடி, விருதுநகரிலும் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
‘ராமநாடு முண்டு' எனப்படும் குண்டு மிளகாய் சாகுபடியில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தென்னிந்திய உணவு வகைகளில் பிரபலமானது குண்டு வடிவ மிளகாய். இது கருமையான பளபளப்பான மற்றும் அடர்த்தியான தோலைக் கொண்டுள்ளது.இந்த மிளகாயில் விட்டமின் சி, கே நிறைந்து, பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் சத்துக்கள், சிலிக்கான் அதிகம் உள்ளது.
எனவே, இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. குண்டு மிளகாயில் இருந்து, மிளகாய் வத்தல், மிளகாய்த்தூள், மிளகாய் சாஸ், மிளகாய் எண்ணெய், ஊறுகாய் வகைகள் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. குண்டுமிளகாய் பொடி உணவு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, மிளகாய் எண்ணெய் தயாரித்து மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அதிகளவு குண்டு மிளகாய் இங்கிருந்து அனுப்பப்படுகிறது. அதேபோல், கத்தார், ஓமன், துபாய், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியர்கள் குறிப்பாக, தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய நாடுகளில் குண்டு மிளகாய்க்கு அதிக வரவேற்பு உள்ளது.
காரத்தன்மை அதிகம் கொண்ட குண்டு மிளகாய் சாகுபடியில் ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பதால், அதனைக் கௌரவிக்கும் விதமாக குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என்பது அம்மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
தற்போது குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அங்கீகாரத்தால் குண்டு மிளகாய் சாகுபடி அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
2வது இடத்தில் தமிழகம்
முன்னதாக தமிழ்நாட்டில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்கிடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, உடன்குடி பனங்கற்கண்டு, சோழவந்தான் வெற்றிலை, மார்த்தாண்டம் தேன் உட்பட 43 உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
தற்போது இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதன் மூலம் இந்த எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலமாக கர்நாடகா உள்ளது. அங்கு 46 பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. கர்நாடகாவிற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. 36 தயாரிப்புகளுடன் இந்தப் பட்டியலில் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு கிடைத்தது புவிசார் குறியீடு!