கேராளாவில் ஆதிவாசிகள் வாழ்வாதாரம் மேம்பட பாடுபடும் சூழலியல் ஆய்வாளர்!
வனப்பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசிகள் தங்கள் பாரம்பரிய அறிவை கொண்டு வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளும் வகையில் டாக்டர். மஞ்சு வாசுதேவனின் பாரஸ்ட் போஸ்ட் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
கேரளாவில் சாளகுடி மற்றும் கருவனூர் ஆகிய ஆற்று பகுதிகள் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களை அதிகம் கொண்டவை. இந்த மக்கள் பெரும்பாலும் காடுகளை நம்பி வாழ்பவர்கள்.
இந்த மக்களுடன் தொடர்ந்து உரையாடி வந்த சூழலியல் ஆய்வாளரான டாக்டர். மஞ்சு வாசுதேவன் மனதில், இந்த சமூகத்தின் பட்டறிவு மற்றும் அனுபவ வளத்தைக் கொண்டு இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் எனும் கேள்வி அடிக்கடி எழுந்தது.
இந்த கேள்விக்கு பதிலாக, கடார், மளயார் மற்றும் முத்துவார் பழங்குடியின மக்களுடன் இணைந்து, 2017ம் ஆண்டு ’பாரஸ்ட் போஸ்ட்’ (Forest Post) அமைப்பை உண்டாக்கினார்.
வனத்தில் உள்ள பொருட்களை சேகரிப்பவர்கள் மற்றும் மூங்கில் கூடை போன்ற கைவினை பொருட்களை தயாரிப்பவர்களின் வலைப்பின்னலாக இந்த அமைப்பு செயல்படுகிறது.
மகரந்த சேர்க்கை சூழலியலில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர்.மஞ்சு, கேரளாவின் ரிவர் ரிசர்ச் செண்டரில், வனப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார திட்டங்களுக்கும் தலைமை வகிக்கிறார். ஆறுகளை பாதுகாக்கும் இயக்கங்களிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
“உலக வனவிலங்கு நிதியுடன் இணைந்து வன உரிமை பற்றி போராடிய போது செய்த பணிகளின் விளைவாக இந்தத் திட்டம் உருவானது,” என்று அவர் கூறுகிறார்.
வாழச்சால் வனப்பகுதி அருகே உள்ள பகுதி தான், தென்னிந்தியாவில் முதல் முறையாக சமூக வன உரிமைகள் பெற்ற பகுதியாகும். இதன் கீழ், இந்த கிராமங்கள் தங்களுடைய பாரம்பரிய வன நிலத்தின் உரிமையை பெற்று, அதை பராமரித்து, பாதுகாக்கும் உரிமையையும் பெறுகின்றனர்.
வாழ்வாதாரத் திட்டம்
ஆதிவசி மக்களிடம் இருந்து, மரம் அல்லாத பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பது பல காலமாக நடைபெற்றாலும், இதில் நிறைய போதாமைகள் இருப்பதாக மஞ்சு கருதினார். இந்த இடைவெளியை போக்கும் வகையில் அவரது திட்டம் அமைந்துள்ளது.
இலைகள், வேர்கள், மரப்பட்டைகள், தேன், திராட்சை முதலியவற்றை வன மேம்பாடு ஏஜென்சி நியாயமான விலையில் ஆதிவாசிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறது.
“இந்தப் பொருட்கள் எல்லாம் பருவகாலம் சார்ந்தவை என்பதால் ஆதிவாசிகளுக்கு இவற்றை எப்போது எங்கே அணுகலாம் என்பது தெரிந்திருக்கிறது,” என்றும் கூறும் மஞ்சு இந்த அனுபவத்தை சுரண்டல் இல்லாமல் பயன்படுத்திக்கொள்கிறோம் என்கிறார்.
“அவர்களுடைய பட்டறிவில் நீடித்த வளர்ச்சி இயல்பாகவே பொதிந்திருக்கிறது,” என்கிறார் அவர். வனப்பகுதிகள் அருகே வாழும் ஆதிவாசிகள் வாழ்வாதாரத்தை காப்பது வன வளம் தொடர்பான அவர்கள் அறிவையும் காப்பதாக அமைகிறது.
திட்டத்தின் துவக்கத்தில் நீலகிரியில் உள்ள கீஸ்டோன் பவுண்டேஷனின் நிதி கிடைத்தது.
“வனத்தில் உள்ள பொருட்களை ஆவணப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாக மஞ்சு கூறுகிறார்.
சூழலியலில் பயிற்சி பெற்ற மஞ்சு, பல நேரங்களில் ஆதிவாசிகளுடன் வனப்பகுதிக்குள் செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். இது போன்ற ஒரு பயணத்தில் அங்கு, வன ஆஸ்பர்கஸ் அதிகம் இருப்பதை பார்த்து அதில் இருந்து ஊறுகாய் தயாரிக்கும் திட்டத்தை துவக்கினர்.
ஆதிவாசிகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாகி, உணவுப் பொருட்கள் மட்டும் அல்லாது, அவர்கள் தயாரிக்கும் மற்ற பொருட்களை விற்பதற்கான வாய்ப்பாகவும் அமைகின்றன.
‘ஃபாரஸ்ட் போஸ்ட்’ அமைப்பு இணையதளம் மூலமும் நேரடியாக விற்கத்துங்கியுள்ளது. கேரள மாநிலத்தின் பெண்கள் தொழில்முனைவுத் திட்டமான குடும்பஸ்ரீ திட்டத்துடனும் இணைந்து செயல்படுகின்றனர்.
இப்போது மீண்டும் நேரடி நிகழ்ச்சிகளை நடத்துவது சாத்தியமாகி இருப்பதால், உள்ளூர் கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் அதிகம் நடத்தப்படும் என்கிறார் மஞ்சு.
சவால்கள், வாய்ப்புகள்
“எந்த அளவுக்கு அறுவடை செய்யலாம் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கிறது,” என்கிறார் மஞ்சு.
ஆதிவாசிகள் வாழ்க்கை முறை நீடித்த வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதை இந்தத் திட்டம் மதிக்கிறது. எனவே, பெரிய அளவில் உற்பத்தி செய்வது என்பது சாத்தியம் இல்லை. எனினும், திட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு நியாயமான ஊதியம் அளிக்கப்பட்டு வருகிறது.
“ஒரு சில வன உணவுப் பொருட்களை குறுகிய காலத்தில் தான் பெற முடியும். உதாரணத்திற்கு வன திராட்சை மே மாதத்தில் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் தான் கிடைக்கும்” என்கிறார் அவர்.
ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டம் (UNDP) கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தில் ஆர்வம் தெரிவித்து, வர்த்தகச் செயல்முறையை சீராக்குவது தொடர்பான விஷயங்களில் ஆலோசனையும் அளித்து வருகிறது.
ஃபாரஸ்ட் போஸ்ட் இணைந்து செயல்படும் அமைப்பு ஒன்று, இந்திய பழங்குடியினர் கூட்டுறவு மார்க்கெட்டிங் மேம்பாட்டு கூட்டமைப்பின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இது மேலும் வாய்ப்புகள் மற்றும் தேசிய அளவிலான திருவிழாக்களுக்கும் வழிவகுக்கும் என்று மஞ்சு நம்புகிறார்.
ஆங்கிலத்தில்: ஷெரினா பொய்யல் | தமிழில்: நரசிம்மன்