கொடைக்கானலின் இயற்கை தேன் உங்கள் வீட்டு வாசலில்: இரு தோழிகள் தொடங்கிய தேன் விற்பனை ஸ்டார்ட்-அப்
கொடைக்கானலைச் சேர்ந்த ’Hoopoe on a Hill’ ஸ்டார்ட் அப் ஆதிவாசி பழங்குடியினரிடமிருந்து தேனை வாங்கி ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விற்பனை செய்கிறது. வணிகத்தை விரிவுபடுத்தி கூடுதலாக பெண்களை பணியிலமர்த்தி அதிக தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது.
பழனி மலை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆதிவாசி சமூகத்தினரிடமிருந்து அதிகப்படியான தேன் வாங்கப்பட்டதால் நிஷிதா வசந்த், ப்ரியாஸ்ரீ மணி இருவரும் 2015-ம் ஆண்டு கொடைக்கானலைச் சேர்ந்த Hoopoe on a Hill என்கிற ஸ்டார்ட் அப்பைத் துவங்கினார்கள். இந்த ஸ்டார்ட் அப் ஆர்கானிக் தேனை பதப்படுத்தி, பேக் செய்து விற்பனை செய்கிறது. அத்துடன் ஆர்கானிக் தேன் தொடர்புடைய பொருட்களையும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விற்பனை செய்கிறது.
ப்ரியாஸ்ரீ கூறுகையில்,
“அதிகப்படியாக இருந்த தேன்மெழுகைக் கொண்டு என்ன செய்யலாம் என வியந்து கொண்டிருந்தோம். காஸ்மெடிக்ஸ் சந்தையில் ஏற்கெனவே பல நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் எங்களுக்கு அந்தப் பகுதியில் செயல்பட விருப்பம் இல்லை,” என்றார்.
மற்ற தொழில்முனைவோர்கள் போன்றே இந்நிறுவனர்கள் இருவரும் புதுமை படைத்தனர். “அந்த சமயத்தில் கனடாவில் இருந்து என்னுடைய உறவினர் ஒருவர் அழகான தேன்மெழுகு ராப்பர்களை (Beeswax wraps) அனுப்பிவைத்தார். நாங்களும் தேன்மெழுகு ராப்பர் தொடர்பான வணிகத்தில் ஈடுபட தீர்மானித்தோம்,” என்றார்.
தேன்மெழுகு ராப்பர்கள் மறுபயன்பாட்டிற்கு உகந்தது. மக்கும்தன்மை கொண்டது. எனவே உணவுப்பொருட்களை ஃப்ரெஷ்ஷாக வைக்க பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக்கால் ஆன ராப்பர்களுக்கு சிறந்த மாற்றாக பார்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது. பல ஆய்வுகளுக்குப் பிறகு Hoopoe on a Hill பல வகையான தேன்மெழுகு ராப்பர்கள் அறிமுகப்படுத்தியது.
துணிகளால் தயாரிக்கப்படும் இந்த ராப்பர்களின் மேற்பரப்பு தேன்மெழுகினால் ஆனது. உணவு வகைகளை சேமிக்கவும் வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கவும் பயன்படும் இந்த ராப்பர்கள் தற்போது இவர்களது வலைதளம் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த ராப்பர்கள் பெரிய அளவு, நடுத்தர அளவு, சிறியது என மூன்று அளவுகள் சேர்ந்த ஒரு பேக்காக கிடைக்கிறது. வெவ்வேறு அச்சுகளுடனும் வண்ணங்களுடனும் கிடைக்கும் பேக்கின் விலை 390 ரூபாய்.
ஆரம்ப நாட்கள்
பெங்களூருவைச் சேர்ந்த நிஷிதா, ப்ரியாஸ்ரீ இருவரும் இண்டியன் நேஷனல் ட்ரஸ்ட் ஃபார் ஆர்ட் அண்ட் கல்ச்சர் ஹெரிடேஜ் (INTACH) என்கிற அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஒரு பகுதியை பார்வையிட்டனர். அதுதான் இந்த முயற்சிக்கான ஆரம்பகட்டமாக அமைந்தது.
”நாங்கள் பளியர் இனப் பழங்குடியினர் தேன் அறுவடை செய்யும் வரலாற்றை ஆவணப்படுத்தினோம். அவர்கள் பாரம்பரிய திறன்களைப் பயன்படுத்தி அடர்ந்த காட்டில் இருக்கும் மரங்களில் ஏறி தேன்கூடுகளில் இருந்து தேன் அறுவடை செய்தனர். பல நூறாண்டுகளாக இந்தச் சமூகத்தினரின் கலாச்சார நடைமுறைகளில் இது அங்கம் வகிக்கிறது,” என்றார் ப்ரியாஸ்ரீ.
வருவாய் ஈட்ட தேன் விற்பனையில் ஈடுபட்டிருந்த பழங்குடி மக்கள் தேன் வாங்க விருப்பமுள்ளதா என நிறுவனர்கள் இருவரிடமும் கேட்டனர். ஆரம்பத்தில் இருவரும் சிறிய அளவில் வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தனர். விரைவில் அவர்கள் வாங்கி சேமித்த தேன் அளவு அதிகமாக இருந்ததால் விற்பனை செய்ய நினைத்தனர்.
கொடைக்கானலில் இருந்த இவர்களது வீட்டில் ஹூப்பி பறவை அடிக்கடி வந்து செல்லும். எனவே இவர்கள் பதப்படுத்தப்படாத இயற்கையான தேனை விற்பனை செய்யும் இவர்களது ஸ்டார்ட் அப்பிற்கு அந்தப் பெயரையே வைத்தனர். நிறுவனர்கள் இருவரும் பழங்குடி சமூகத்தினரிடமிருந்து தேனை வாங்கி வீட்டில் இருந்த சிறிய அறையில் சேமித்து வைத்து ஆஃப்லைனில் சில்லறை வர்த்தக முறையில் விற்பனை செய்தனர். அவர்களுக்கு உதவ அந்தப் பகுதியை சேர்ந்த நான்கு பெண்களை பணியிலமர்த்திக்கொண்டனர்.
பருவநிலை, பூக்கள், தேன் உற்பத்தி செய்யும் தேனீயின் வகை ஆகியவற்றைப் பொறுத்து தேன் வழங்கப்படும். தற்சமயம் மருத்துவ குணத்திற்கு பிரபலமான ஜாமும் தேன், பல்வேறு மலர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேன், யூகலிப்டஸ், Cerana, Dammer போன்ற அரிய வகைகள் என பல்வேறு வகைகளில் வழங்குகிறது. வடிகட்டும் செயல்முறை முடிந்ததும் தேன் கண்ணாடி பாட்டில்களில் பேக் செய்யப்படுகிறது.
சிறிய நகரில் இருந்து செயல்பட்டது
கொடைக்கானல் போன்ற நகரத்தில் இருந்து செயல்படுவதில் அதற்கே உரிய சவால்களும் இருந்தன. Hoopoe on a Hill முயற்சியில் லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடுகள் கடினமாக இருந்தது. தேன் அறுவடையில் ஈடுபட்ட பளியர் இன பழங்குடியின மக்கள் பழனி மலையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் கொடைக்கானலில் இருந்து செயல்படுவதே சிறந்ததாக இருந்தது.
”பெங்களூருவில் இருந்து செயல்படுவது எளிது என்றாலும் கொடைக்கானலில் இருந்து செயல்படுவது அதிக மதிப்பு சேர்ப்பதாக தோன்றியது. தற்போது எங்களுடன் ஆறு பெண் ஊழியர்கள் உள்ளனர். அனைத்து செயல்பாடுகளையும் இவர்களே நிர்வகிக்கின்றனர். கம்ப்யூட்டரை இயக்கவும் கற்று வருகின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும் பெண்களுக்கு அதிக பணி வாய்ப்புகள் இல்லை. ஆண்கள் தினக்கூலியாக பணியாற்றுகின்றனர். பெண்களுக்கு நிலையான பணி வாய்ப்பு வழங்க விரும்பினோம்,” என்றார் ப்ரியாஸ்ரீ. தற்போது இந்தப் பெண்கள் மாதம் 7,000 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர்.
காலி பாட்டில்கள், பேக்கேஜ் செய்யத் தேவையான பொருட்கள் போன்றவற்றை பெங்களூருவில் உள்ள விற்பனையாளர்களிடம் இக்குழுவினர் வாங்குகின்றனர். அனைத்து செயல்பாடுகளும் முறையாக நடப்பதை உறுதிசெய்ய ப்ரியாஸ்ரீ, நிஷிதா இருவரும் அடிக்கடி பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்தப் பகுதியில் இரண்டு பருவமழைக் காலம் இருக்கும் என்பதால் இரண்டு முறை தேன் அறுவடை செய்யப்படும். பழங்குடியின மக்கள் சுமார் ஒரு வாரகாலம் காட்டின் உட்பகுதிகளுக்குச் சென்று தேனை அறுவடை செய்து குழுவிடம் கொண்டு சேர்ப்பார்கள். குழுவினர் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 450 ரூபாய் முதல் 650 வரை செலுத்தி வாங்கிக்கொள்கின்றனர்.
தேனில் இருக்கும் அசுத்தங்களை நீக்க மஸ்லின் துணியில் மூன்று முதல் நான்கு முறை வடிகட்டப்படுகிறது. அதன் பிறகு பெரிய கேன்களில் சேமிக்கப்பட்டு பின்னர் கண்ணாடி பாட்டில்களில் மாற்றப்படுகிறது. 500 கிராம் தேன் 450 ரூபாய்க்கும் 300 கிராம் தேன் 290 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சிறிய நகரில் இருந்து செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகள்
லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான சவால்கள் இருப்பினும் சிறிய நகரில் இருந்து செயல்படுவதால் செலவுகள் குறையும். வாடகை, தொழிலாளர்கள் போன்றவற்றிற்காக செலவு மிகக்குறைவு. அனைத்து செயல்பாடுகளையும் அமைக்க 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை செலவிட்டதாக தெரிவித்தார் ப்ரியாஸ்ரீ.
Hoopoe on a Hill தற்போது அதன் பொருட்களை கொடைக்கானலில் இருந்து இந்தியா முழுவதும் விநியோகம் செய்கிறது.
”முதலில் இந்தியா போஸ்ட் பார்சல் சேவையுடன் இணைந்தோம். சிறிய நகரில் இருந்து சிறியளவில் செயல்படும் வணிக உரிமையாளர்களுக்கு இது சிறந்ததாகும். இதன் சேவை நம்பகமானது. நாட்டின் மூலை முடுக்குகளை இதன் வாயிலாக சென்றடையலாம். அத்துடன் பாதுகாப்பானது,” என்றார் ப்ரியாஸ்ரீ.
Hoopoe on a Hill அதிக பெண்களை பணியிலமர்த்தி அதிக தயாரிப்புகளையும் இணைத்துக்கொண்டு வருங்காலத்தில் சிறப்பாக வளர்ச்சியடைய உள்ளது.
”நாங்கள் சமீபத்தில் தேன்மெழுகு க்ரேயான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதற்கு தேன்மெழுகு மற்றும் உணவுத் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் கலர்கள் பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகளுக்கு பாதுகாப்பானது. மேலும் புதுமையான பொருட்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டு வருகிறோம்,” என்றார் ப்ரியாஸ்ரீ.
வலைதள முகவரி: Hoopoe on a Hill
ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா