உயிரிழந்தவர்ளை மரியாதையுடன் தகனம் செய்ய ‘விறகு வங்கி’ துவங்கிய சமூக தொழில் முனைவர்!
சஞ்சய் ராய் ஷெர்பூரியா நதிக்கரைகளில் சடலங்கள் மிதப்பதைக் கண்டு மனம் வருந்தியதால் இறுதி சடங்குகள் நடக்க உதவி செய்கிறார்.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. வருமானம் இல்லாமல் தவித்தவர்களுக்கு எத்தனையோ பேர் உணவும் அத்தியாவசியப் பொருட்களும் கொடுத்து உதவியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க உயிரிழந்த பலரின் உடல்கள் கங்கை நதியில் மிதந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உலுக்கியது.
கொரோனா காரணமாக நெருங்கிய சொந்தங்களை இழந்துத் தவிர்த்தவர்கள் உயிரிழந்தவரின் உடலுக்கு அருகில் இருந்து இறுதிச் சடங்குகளைக் கூட செய்ய முடியாமல் போனது. மேலும், பலர் ஏழ்மை நிலையில் இருப்பதால் இந்த சடங்குகளை செய்ய முடியாமல் போனது.
சஞ்சய் ராய் ஷெர்பூரியா சமூகப் பணியாளர்; தொழில்முனைவர். இவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ‘லக்டி பேங்க்’ தொடங்கியுள்ளார்.
இந்த ’விறகு வங்கி’ மூலம் மக்களுக்கு விறகுகளை வாங்கிக் கொடுகிறார். இவரது குழுவில் 45க்கும் மேற்பட்டோர் உள்ளனர். 5,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் விறகு கொடுத்து உதவுவதுடன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளுக்காக பண உதவியும் செய்கிறார்கள்.
“பராமரிக்க யாரும் இல்லாமல் ஆற்றங்கரைகளில் கிடக்கும் சடலங்களை நாங்கள் தகனம் செய்கிறோம். ஒட்டுமொத்த நாடும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில் மக்களுக்கு உதவி செய்வதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் நான் பொறுப்பேற்று என்னால் இயன்ற வகையில் பங்களிக்க விரும்பினேன்,” என்கிறார் சஞ்சய்.
Youth Rural Entrepreneurial Foundation நாட்டின் கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து வருகிறது. சஞ்சய் இந்த அமைப்பின் வழிகாட்டலுடன் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Lakdi Bank தொடங்கினார்.
Lakdi Bank தன்னார்வலர்கள் உடல்களை தகனம் செய்வதற்காக அமைக்கபட்டுள்ள இடங்களில் ஸ்லாட் புக் செய்து உதவுகிறார்கள். இவர்களது முயற்சி பலருக்கு தெரியவந்தது. இந்நிறுவனம் உத்திரப்பிரதேசம் காசிபூர் பகுதியில் உள்ள பல்வேறு நதிக்கரைகளில் இதுவரை 10 வங்கிகள் அமைத்துள்ளது.
குழப்பங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்க ஒவ்வொரு இடத்திலும் ஐந்து பேர் கொண்ட குழு மேற்பார்வையிடுகிறது.
”வங்கியில் யார் வேண்டுமானாலும் வந்து விறகுகளை நன்கொடையாக வழங்கலாம். விவசாயிகள் பலர் தாராளமாக நன்கொடை செய்கிறார்கள். மக்களிடமும் நிறுவனங்களிடமும் பயன்படுத்தாமல் இருக்கும் விறகுகளை எங்களிடம் கொடுக்குமாறு கேட்கிறோம். தற்போது எங்களிடம் 600 டன் விறகுகள் உள்ளன. மக்கள் எங்களுக்கு பண உதவியும் செய்து வருகிறார்கள்,” என்கிறார்.
உயிரிழந்த ஏராளமானவர்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடக்க இந்தக் குழுவினர் உதவி வருகின்றனர். இவர்கள் இதுவரை சுமார் 20 லட்ச ரூபாய் நன்கொடை திரட்டியுள்ளனர். நதிக்கரைகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக 1 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளார்கள்.
சவால்கள்
கொரோனா இரண்டாம் அலையின்போது உயிரிழப்பு அதிகம் இருந்தது. விறகுகளுக்கான தேவையும் அதிகரித்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு வழக்கமாக 450 ரூபாய்க்கு விற்பனை செய்யும் விறகுகளை 2,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்தனர். பலர் மருத்துவ சிகிச்சைக்கும் மருந்துகளுக்கும் ஏற்கெனவே செலவு செய்துவிட்டு பணமின்றி தவித்த நிலையில் அதிக விலை கொடுத்து வாங்க முடியாமல் போனது.
“தேவை அதிகம் இருந்த 10 இடங்களைக் கண்டறிந்து விறகு வங்கி அமைத்தோம். ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக இந்த முயற்சி உதவியதுடன் நீர்நிலைகள் தூய்மையாக இருக்கவும் உதவியது,” என்கிறார் சஞ்சய்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சி
விறகு தட்டுப்பாடு பிரச்சனைக்குத் தீர்வு காணும் அதே சமயம் வேலை வாய்ப்பை உருவாக்கவும் ஏற்பாடு செய்தது விறகு வங்கி. கைவிடப்பட்ட மாடுகளை தத்தெடுத்துக் கொண்டு அவற்றின் சாணத்தைக் கொண்டு எரிபொருள் தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
“மாட்டு சாணத்திலிருந்து எரிபொருள் தயாரிக்க உதவும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளோம். இதனால் மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும். அது மட்டுமல்லாமல் கிராம மக்கள் மாட்டு சாணத்தைக் கொண்டு பணம் சம்பாதிக்கவும் முடியும். பால் உற்பத்தி நின்ற பிறகும் மாடுகளைக் கைவிடாமல் பராமரிக்க இந்த முயற்சி உதவும்,” என்கிறார் சஞ்சய்.
இதர சேவைகள்
காசிபூரில் மக்கள் கொரோனா சிகிச்சை பெற உதவும் வகையில் சஞ்சயும் அவரது குழுவினரும் காசிபூரில் கோவிட்-19 மையம் அமைத்துள்ளனர். 70 பேர் பணியாற்றும் இந்த கால் செண்டர் இதுவரை 16,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளை ஏற்றுள்ளது.
இக்குழுவினர் காசிபூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கோவிட்-19 பரிசோதனைகள் மேற்கொண்டனர். அத்துடன் மருந்து விநியோகம் செய்து விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர்.
மூச்சுத் திணறலுடன் போராடியவர்களுக்கு 200 ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர். 53,000 முன்களப் பணியாளர்களுக்கு மருந்து, மாஸ்க், ஃபேஸ்ஷீல்ட் போன்றவற்றை கொடுத்து உதவியுள்ளனர்.
ஆங்கில கட்டுரையாளர்: விருந்தா கார்க் | தமிழில்: ஸ்ரீவித்யா