மெரினா பீச்சில் டீ விற்ற பெட்ரிசியா சென்னையில், பல ஹோட்டல்கள் நிறுவிய கதை!
”மெரினா எனது பிசினஸ் பள்ளி என்பேன். அங்கே தான் நான் எம்பிஏ பெற்றேன்,”
பெட்ரிசியா தாமஸ் 17 வயதில் இந்து பிராமணர் நாரயணன் என்பவரை காதலித்து மணமுடிந்தார். பாரம்பரியமிக்க கிரித்தவ குடும்பத்தை சேர்ந்த அவர், தன் குடும்பத்தாரை எதிர்த்துக்கொண்டு திருமணம் புரிந்தார். அதனால் பெட்ரிசியாவின் தந்தை அவரை வெறுத்து குடும்பத்தை விட்டு ஒதுக்கிவிட்டார். துரதிர்ஷ்டவசமாக மணமுடிந்தவரும் போதைக்கு அடிமையாகி பெட்ரிசியாவை துன்புறுத்தி வந்தார். இரண்டு குழந்தைகளோடு போக இடமின்றி தவித்த பெட்ரிசியா செய்வதறியாத தவித்து வாழ்ந்தார்.
மகள் கஷ்டப்படுவதை பார்த்த பெட்ரிசியாவின் தாயார் அவருக்கு தள்ளுவண்டி மூலம் உணவுவகைகள் விற்பனை செய்ய பண உதவி செய்தார். அதைக்கொண்டு, பெட்ரிசியா மெரினா பீச்சில் இரண்டு மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தி அந்த தள்ளுவண்டி கடையை நடத்திவந்தார். ஸ்னாக்ஸ், ஜூஸ், காபி, டீ என்று விற்பனை செய்தனர்.
”மெரினா எனது பிசினஸ் பள்ளி என்பேன். அங்கே தான் நான் எம்பிஏ பெற்றேன்,” என்று தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பெட்ரிசியா.
மெல்ல சூடுபிடித்த தொழிலின் காரணமாக, சில அலுவலக காண்டீன்களை பராமரிக்க வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. பின்னர் 1998 இல் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள சங்கீதா ஹோட்டல் குழுமத்தின் இயக்குனராக பணியில் சேர்ந்தார் பெட்ரிசியா.
குழந்தைகளும் வளர்ந்த நிலையில், அவரது கணவரின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானது. அவரது கணவர் பணம் கேட்டு சிகரெட் துண்டுகளை கொண்டு பெட்ரிசியாவின் உடலில் சுடுவார், பின் பல மாதங்கள் காணமல் போய்விடுவார், 2002இல் அப்படி சென்றபோது அவர் இறந்துவிட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரிசியாவின் மகளும் ஒரு சாலை விபத்தில் அவரது கணவருடன் இறந்துவிட்டார். வாழ்க்கையில் இத்தனை துயரங்களை கண்ட பெட்ரிசியா, மனமுடைந்த நிலையிலும் தனது மகனுடன் சேர்ந்து ‘சந்தீப்பா’ என்ற தனது மகளின் பெயரில் ஒரு ஹோட்டலை துவங்கினார். தன் மகளை அறவணைத்து வளர்த்தது போல் இந்த ஹோட்டலை வளர்த்தெடுத்தார். 2010 இல் FICCI’ இன் சிறந்த பெண் தொழில்முனைவோர் என்ற பட்டத்தையும் வென்றார்.
“நான் இரண்டு ஊழியர்களுடன் தொழிலை தொடங்கினேன். இன்று 200 பேர் வரை என் ஹோட்டலில் பணிபுரிகின்றனர். என் வாழ்க்கைமுறை மாறியுள்ளது. சைக்கிள் ரிக்ஷாவில் பயணித்த நான் அடுத்து ஆட்டோ பின்னர் என் சொந்த காரில் செல்கிறேன். ஒரு நாளைக்கு 50 பைசா வருமானம் சம்பாதித்த நான் இன்று 2 லட்சம் ரூபாய் வரை ஈட்டுகிறேன்,”
என்று பெட்ரிசியா ரீடிஃப் பேட்டியில் கூறியுள்ளார். பெட்ரிசியாவின் இந்த போராட்டம் அசாத்தியமானது.
கட்டுரை: Think Change India