Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

’சொந்த சிக்கல்களுக்கான தீர்வுகளை ஸ்டார்ட்-அப் ஆக்குங்கள்’- கோவை ஷிக்‌ஷா பிளே ஸ்கூல் நிறுவனர் ஸ்ரீநிதி!

தொழில்முனைவில் ஆர்வமிகுதியால் பொறியாளரான ஸ்ரீநிதி, 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ‘Shiksha Junior' ப்ளே ஸ்கூலில் இதுவரை 300 குழந்தைகள் வெளியேறி உள்ளனர். இன்று 7 கிளைகளுடன் வெற்றிநடை போடும் இந்நிறுவனம் விரைவில் தமிழ்நாடு முழுதும் ப்ரான்சைஸ் முறையில் விரிவாக்கம் செய்ய உள்ளது.

’சொந்த சிக்கல்களுக்கான தீர்வுகளை ஸ்டார்ட்-அப் ஆக்குங்கள்’- கோவை ஷிக்‌ஷா பிளே ஸ்கூல் நிறுவனர் ஸ்ரீநிதி!

Tuesday March 05, 2019 , 3 min Read

ஒரு குழந்தையின் மழலைப் பருவம், பின்னாளில் உருவாகவிருக்கும் அந்த குழந்தையின் ஆளுமையில் முக்கியப் பங்காக இருக்கும். பாதுகாப்பான சூழலில் ஊக்குவிப்போடு வளரும் குழந்தைகள், தன்னம்பிக்கையுடன் இருக்கின்றன; அது கிடைக்காத குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையோடு வளர்க்கின்றன. கூடவே, குழந்தைகள் முதன்முதலாக சமூகமயமாகும் இடமாகவும் இருப்பது கல்விக்கூடங்கள் தான். இதையெல்லாம் யோசித்து தான் குழந்தைகளை ப்ளே ஸ்கூல்களிலும், பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறார்கள் பெற்றோர்கள்.

தொழில் வாழ்க்கையோடு சேர்த்து குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும் அத்தனை ‘வொர்க்கிங்-வுமனி’ற்கும் ஒரு நல்ல ப்ளே ஸ்கூலை கண்டுபிடிப்பது எளிதில் நடப்பதில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வாக, நம்பிக்கையான, தரமான ப்ளே ஸ்கூல்களை உருவாக்குவது தான் ஸ்ரீநிதியின் கனவாக இருந்தது. அதன் விளைவாகவே இன்று, கோவை முழுதும் பல இடங்களில் ‘ஷிக்‌ஷா ஜுனியர்ஸ்’ ப்ளே ஸ்கூல்கள் தென்படுகிறது.

கோவையில் பிறந்து வளர்ந்தவர் ஸ்ரீநிதி மோகன். எஞ்சினியரிங் படித்து முடித்து ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சில காலம் வேலை செய்திருக்கிறார். பிறகு, மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றிருக்கிறார். திருமணம் செய்வதாக முடிவான பிறகு இந்தியா திரும்பினார்.

“நான் தொழில் முனைவில் இருக்கும் ஒரு நபரைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்று சொல்லும் ஸ்ரீநிதி, திருமணத்திற்கு பிறகு இங்கிலாந்தில் வசித்துள்ளார். பின்னர், தொழில் முனைவு செய்ய வேண்டும் என மறுபடி இந்தியா திரும்பியிருக்கிறார்.

தொழில் முனைவின் மீது அப்படி என்ன வேட்கை என்று கேட்டால்,

”எனக்கு சின்ன வயசில இருந்தே பிசினஸ் பண்ணனும் தான் ஆசை. எந்த ஃபீல்டுலன்னு தெரியல. ஆனா, கண்டிப்பா பிசினஸ் தான் பண்ணனும்னு இருந்தேன். எங்க வீட்ல யாருக்குமே பிசினஸ் பேக்ரவுண்ட் இல்ல. அதனால், என்னை ஒரு வழக்கமான வேலைக்கு போகச் சொன்னாங்க. அதை அப்போ ஏத்துக்கிட்டு வேலைக்கு போனாலுமே, எனக்கு நான் பிறந்து வளர்ந்த கோயம்புத்தூர்ல ஒரு பிசினஸ் நடத்தணும் ஆசை இருந்துட்டே தான் இருந்துச்சு,” என்கிறார்.

இப்படி எதாவது பிசினஸ் தொடங்க வேண்டும் என ஸ்ரீநிதி யோசித்துக் கொண்டிருக்கும் போது கருவுற்றிருக்கிறார். இனி பழையபடி ஐ.டி. வேலைக்கு செல்வதென்றால், வீட்டில் சமநிலை இருக்காது என, தன்னுடைய குழந்தையையும் தொழில் வாழ்க்கையும் பேலன்ஸ் செய்ய எந்த மாதிரியான பிசினஸ் செய்யலாம் என யோசித்த போது கிடைத்த ஐடியா தான் ப்ளே ஸ்கூல்.

”என்னுடையது கூட்டுக்குடும்பம் தான். அதனால் குழந்தையை பார்த்துக் கொள்வதில் எனக்கு உதவி கிடைத்தது. நிறைய குடும்பங்கள் ந்யூக்லியர் குடும்பங்களாக இருக்கின்றன. குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக அம்மா வேலையை விட வேண்டியதாக இருக்கிறது. இதற்கும் தீர்வாக ப்ளே ஸ்கூல் இருக்கும் என நினைத்தேன்’ என்கிறார்.

இப்படித் தான் கோவை டாடாபாத்தில் முதல் ஷிக்‌ஷா ஜூனியர்ஸ் ப்ளே ஸ்கூல் தொடங்கப்பட்டிருக்கிறது.

”நான் தொடங்கிய போது, சொந்த சேமிப்பில் இருந்து தான் பள்ளியைத் தொடங்கினேன். ஆனால், இப்போது உங்களிடம் ஒரு பிசினசிற்கான நல்ல ஐடியா இருந்தால், நிதியோ முதலீடோ பெரிய பிரச்சினையாக இருக்காது என்று நினைக்கிறேன்,” என்கிறார்.

ஒரு வழக்கமான ப்ளே ஸ்கூலில் இருந்து ஷிக்‌ஷா மாறுபடும் இடம் எதுவென்று கேட்டால், ‘நாங்கள் தரம் சார்ந்து தான் இயங்குகிறோம். இல்லையென்றால், இரண்டு வருடங்களில் எங்களால் ஏழு செண்டர்கள் திறந்திருக்க முடியாது. பத்து குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் எனும் விகிதம் இருக்கிறது. குழந்தைகளோட வயதுக்கு ஏற்ற ஆக்டிவிட்டிகள் கொடுக்கிறோம். சமூக திறன்களுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிறோம்,” என்று பதில் சொல்கிறார்.

கூடவே ஷிக்‌ஷா முழுக்க முழுக்க பெண் ஊழியர்களைக் கொண்டே இயங்குகிறது, ஒரு இடத்திலும் ஆண் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதில்லை. இதன் வழியே ‘பெண் வலிமை’க்கு பங்களிப்பதாக சொல்கிறார் ஸ்ரீநிதி மோகன். இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வரும் ஷிக்‌ஷா பள்ளிகளில் இதுவரை முன்னூறு குழந்தைகள் படித்து, வெளியேறியிருக்கிறார்கள்.

”நான் ஸ்கூல் தொடங்கி சரியா ஒரு வருஷம் ஆகுறதுக்கு முன்னாடியே எனக்கு ஒரு ஃப்ரான்சைசி சைன் - அப் ஆகிட்டாங்க. இப்போ ஃப்ரான்சைசி மாடலில் தமிழகம் முழுவதுமே விரிவு செய்யும் திட்டம் இருக்கு.”

ஸ்ரீநிதி இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் எல்லாமும் ஃப்ரான்சைஸி மாடலில் இயங்க விரும்புபவர்களை எதிர்பார்த்து இருப்பதாக கூறுகிறார்.

கோவை தொழில் முனைவோருக்கு ஆதரவளிப்பதாக இருக்கிறதா எனக் கேட்ட போது,

”நீங்கள் எந்த ஊரில் தொடங்குகிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. தொடங்கிய ஊரில் பலமாக நின்று விட்டால் போதும். நான் கோவையில் தான் தொடங்கினேன். இப்போது எனக்கு சென்னையில் இருந்து ஃப்ரான்சைஸி கால் வருது. கோவையில் இருப்பது என்னுடைய வளர்ச்சிக்கு தடையாக இருப்பதில்லை,” என்றார்.

குழந்தைகள் பள்ளிக் கூடத்தில் இருக்கும் நேரத்தை தவிர பிற நேரங்களில் வீட்டில் தான் இருக்கிறார்கள் எனும் போது வீடும் ஒரு ஆரோக்கியமான கல்விக் கூடமாகவே இருக்க வேண்டும். இந்த நோக்கோடு ‘ஷிக்‌ஷாந்தரா ஃபவுண்டேஷன்’ எனும் அரசு சாரா அமைப்பை தொடங்கியிருக்கிறார். இந்த அமைப்பு வழியே ‘எர்லி சைல்டுஹுட் எஜுகேஷன் (early childhood education) மற்றும் மாண்டிசெரியில் டிப்ளோமா

ஆகியவை கற்றுத்தரப்படுகிறது. பெற்றோர்களுக்கும், குழந்தைகள் நலனில் கவனம் செலுத்த நினைப்பவர்களுக்கும் இது உதவும் என்கிறார் ஸ்ரீநிதி.

ஸ்டார்ட்-அப் தொடங்க நினைக்கும் இளம் தலைமுறைக்கு என்ன எளிய அறிவுரை சொல்ல முடியும் என்றால்,

”தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எது பிரச்சினையாக இருக்கிறதோ, அதற்குத் தீர்வு காண ஸ்டார்ட்-அப் பண்ணுங்கள். நான் ப்ளே ஸ்கூல் தொடங்குவதற்கு முன்னர் நிறைய ப்ளே ஸ்கூல்களுக்கு சென்று பார்த்தேன். எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்தும், பி.எட் படித்து என்னை தயார் செய்து கொண்டேன். உங்களுடைய களத்தில் நிற்க நீங்களே உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள்,” என்கிறார்.

பலருடைய ஆதரவு; நண்பர்களோடான சந்திப்புகளை தியாகம் செய்தது; இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொண்டே வேலை செய்வது என ஷிக்‌ஷாவின் வெற்றிக்கு நிறைய காரணிகள் இருக்கின்றன.

கேட்பதற்கு மிக எளிதான பயணம் போல இருந்தாலுமே, அவ்வளவு சாதரணமாய் ஸ்ரீநிதி இத்தனை தூரம் வந்துவிடவில்லை. வேலை வாய்ப்புகள் குறுகி இருக்கும் தலைமுறைக்கு இப்படியான தொழில் முனைவோர் தான் ஊக்கம் அளிக்கிறார்கள்.