மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் 'ஸ்டார்ட் அப் திருவிழா' - உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!
தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் 2 நாள் ஸ்டார்ட் அப் திருவிழா நிறைவு நாள் விழாவில் மாநில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, ஸ்டார்ட் அப் ஊக்க திட்டங்களை துவக்கி வைத்து, திட்ட ஆணைகளை வழங்குகிறார்.
தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் 2 நாள் ஸ்டார்ட் அப் திருவிழாவின் நிறைவு நாள் விழாவில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, ஸ்டார்ட் அப் ஊக்க திட்டங்களை துவக்கி வைத்து, திட்ட ஆணைகளை வழங்க உள்ளார்.
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ், செயல்படும் ஸ்டார்ட் அப் டிஎன் அமைப்பு, ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்கத்திற்கான மாநில ஒருங்கிணைப்பு மையமாகும்.
ஸ்டார்ட் அப் டிஎன் சார்பில், வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில், ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது. யுவர்ஸ்டோரி தமிழ் இதன் ஊடக பங்குதாரராக விளங்குகிறது.
இந்த இரண்டு நாள் ஸ்டார்ட் அப் திருவிழாவை முன்னிட்டு, மதுரையில் மாவட்ட கலெக்டர் சங்கீதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில்,
"ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு உதவும் அரசு திட்டங்களையும், ஸ்டார்ட் அப் செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் இந்த ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுவதாக," அவர் தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய ஸ்டார்ட்-அப் டிஎன் சிஇஒ சிவராஜா ராமனாதன், மாநாட்டில், ஸ்டார்ட் அப் வல்லுனர்கள், ஸ்டார்ட் அப் மைய தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,
”ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களோடு நேரடி சந்திப்பு நிகழ்வும் வழி செய்யப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் டிஎன் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் வெப்3 நுட்பத்தை குறிக்கும் மெட்டாவர்ஸ் அரங்கை இந்த மாநாட்டின் சிறப்பசங்களில் ஒன்று,“ எனக் கூறினார்.
இந்த மாநாட்டில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் சேவைகளை காட்சிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், ஸ்டார்ட் அப்கள் தங்கள் எண்ணங்களை தேவதை முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் முன்வைப்பதற்கான தனி அமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மாநாட்டில் ஊக்கம் அளிக்கும் உரைகள், பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்கள், கலந்துரையாடல்கள் இடம்பெறும். 150க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட ஸ்டார்ட் அப் கண்காட்சி நடைபெற உள்ளது. உணவுத்துறை ஸ்டார்ட் அப்`கள் பங்கேற்கும் சிறப்பு கண்காட்சியும் நடைபெறுகிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், இதர பங்குதாரர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கண்காட்சியில் மெட்டாவெர்ஸ் அரங்கமும் அமைக்கப்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் நேரடி காட்சி விளக்கம் வழங்க மற்றும் தயாரிப்புகளை அறிமுகம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.
ஸ்டார்ட் அப் திருவிழா நிறைவு நாளில் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக மாவட்ட ஆணையர் சங்கீதா தெரிவித்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
நிறைவு நாள் விழாவில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுகாக மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து, திட்ட ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறார்.
Edited by Induja Raghunathan