16 வயதில் தந்தையுடன் இணைந்து ரூ.400 கோடி டிவி ப்ராண்டை உருவாக்கிய தேவிதா!
'நீங்கள் பலசாலி என்பதை வெளிப்படுத்த ஆணாக இருக்கவேண்டிய அவசியமில்லை. நான் ஒரு பெண்ணாக ஆணாதிக்கம் நிறைந்த துறையில் ஒரு தலைவராகவும் தொழில் முனைவோராகவும் பார்க்கப்படுகிறேன்.'
”நீங்கள் பலசாலி என்பதை வெளிப்படுத்த ஆணாக இருக்கவேண்டிய அவசியமில்லை. நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் ஆணாதிக்கம் நிறைந்த துறையில் ஒரு தலைவராகவும் தொழில்முனைவோராகவும் பார்க்கப்படுகிறேன்.”
பெண் தொழில்முனைவோரிடமிருந்து இத்தகைய வார்த்தைகளை கேட்பதற்கு அதிக உற்சாகமாக இருக்கிறதல்லவா?
இவ்வாறு கூறியவர் VU டெக்னாலஜீஸ் நிறுவனர் தேவிதா சராஃப். எப்போதும் ஃபேஷனான உடை அலங்கராம், சற்றும் பிசகாத அழகான கூந்தல் என அவரது ப்ராண்டின் அனைத்து விளம்பரங்களிலும் அவரே தென்படுகிறார். அவரது நிறுவனத்தின் விற்பனையும் அவரது வார்த்தைகளும் அவரது புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கிறது.
35 வயதான தேவிதா 2006-ம் ஆண்டு VU எனும் தொலைக்காட்சி பிராண்டை அறிமுகப்படுத்தினார். பத்தாண்டுகளுக்குப் பிறகு 2015-16 நிதியாண்டில் 2 லட்சம் தொலைக்காட்சிகளை விற்பனை செய்து 275.8 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது இந்நிறுவனம். தற்போது ஒரு மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிதியாண்டில் 500 கோடி வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது. இதில் 400 கோடி ரூபாயை ஏற்கெனவே எட்டிவிட்டது.
வணிகம் அவருக்கு புதிதல்ல
அதிக சவால்கள் நிறைந்த வணிக உலகில் தேவிதா மட்டும் எளிதாக பாதையை கடந்து விட்டதாக பலர் குறிப்பிடுவார்கள். அவரது தந்தை ராஜ் ஷராஃப் ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் (Zenith Computers) நிறுவனர். தேவிதா 16 வயது முதலே நிறுவனத்தை நடத்துவது குறித்து தெரிந்துகொள்வதற்காக அவரது தந்தையின் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றத் தொடங்கினார். பழமைவாதம் நிறைந்த மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால் தந்தையின் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வது போன்ற சின்னச் சின்னச் விஷயங்களில் கூட பல கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிய வேண்டியிருந்தது.
தேவிதா யூனிவர்சிட்டி ஆஃப் சதர்ன் கலிஃபோர்னியாவில் பிசினஸ் படிப்பில் இளநிலை பட்டம் பெற்றார். அவருடன் படித்தவர்கள் நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்தபோது சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். நடைமுறைத் திறன்களை வளர்த்துக்கொள்ள தனது தந்தையின் நிறுவனம்தான் சிறந்த இடம் என்பதை நன்கு உணர்ந்தார் தேவிதா.
”அனைத்திற்கும் ஒரு பாதுகாப்பை தேடிக்கொண்டிருந்தால் உங்களால் எப்போதும் தொழில்முனைவோராக முடியாது. நீங்கள் ஏதேனும் செய்ய நினைத்தால் பெரிதாகச் செய்யுங்கள்,”
என்றார் 21 வயதில் ஜெனித் நிறுவனத்தின் மார்கெட்டிங் டைரக்டராக பொறுப்பேற்ற தேவிதா.
பெரிய திரை ஈர்த்தது
2000-ம் ஆண்டின் துவக்கத்தில் இன்டெல் மற்றும் சமகாலத்தைச் சேர்ந்த மற்ற நிறுவனங்களும் உயர்தர பெர்சனல் கம்ப்யூட்டர்களை டெவலப் செய்தனர். தேவிதா ப்ராடக்ட் டெவலப்மெண்ட் பணியில் ஈடுபட்டிருந்தார். ஜெனித்தின் அப்போதைய விநியோக முறையில் இப்படிப்பட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான விலை உயர்ந்த பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு அவரால் இடமளிக்க முடியவில்லை. அதனால் வேறு ஒரு ப்ராண்டை அறிமுகப்படுத்தி மும்பையின் நரிமன் பாயிண்ட் பகுதியில் ஒரு தனிப்பட்ட ஸ்டோரை அமைத்தார். வெறும் தொழில்நுட்ப ப்ராண்டாக இல்லாமல் ஆடம்பர லைஃப்ஸ்டைல் ப்ராண்டாக உருவாக்கவே திட்டமிட்டார். அவ்வாறு விலையுயர்ந்த கம்ப்யூட்டர்களை விற்பனை செய்தபோது தேவிதா ஒரு விஷயத்தை கண்டறிந்தார்.
”பலருக்கு முழுமையான தொழில்நுட்பம் புரிவதில்லை. கம்ப்யூட்டரின் டிஸ்ப்ளே பிடித்திருப்பதால்தான் கம்ப்யூட்டரை வாங்குகிறார்கள். சிலர் மானிட்டரை மட்டும் வாங்கினர். அதனால்தான் நான் தொலைக்காட்சி பிசினஸில் கவனம் செலுத்தலாம் என்றேன்.” என்று நினைவுகூர்ந்தார் தேவிதா.
அப்படித்தான் 2006-ல் VU டிவி அறிமுகமானது. விலையுயர்ந்த சர்வதேச ப்ராண்டுகள் உயர்தரமாக இருக்கும் என்றே வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர். அப்படிப்பட்ட ப்ராண்டுகளுக்கு மாற்றாக விலைகுறைந்த மற்றுமொரு இந்திய ப்ராண்டாக VU இருக்ககூடாது என்பதில் தேவிதா தெளிவாக இருந்தார்.
”ஆடம்பர ஹோட்டல் ப்ராண்ட்களைத் தவிர மற்ற இந்திய வணிகங்களுக்கு ப்ராண்டிங் குறித்த புரிதல் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடும் ஒரு பெரிய நிறுவனமாக VU இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றார்
சந்தையின் முன்னணி நிறுவனங்களான சாம்சங் அல்லது சோனியின் விலையைவிட VU டிவியின் விலை கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைவாகும். அதே சமயம் வீடியோகான் போன்ற இந்திய போட்டியாளர்களின் விலையைவிட கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகமாகும். 22 SKUs ரேன்ஞ்களைக் கொண்ட VU டிவி செட்டின் விலை 9,500 ரூபாய் முதல் 3 லட்ச ரூபாயாகும்.
இ-காமர்ஸ் விற்பனை
தேவிதா அவரது டிவிக்களை அவரது சொந்த ஸ்டோர்களிலும் பல்வேறு ப்ராண்ட்களைக் கொண்ட க்ரோமா போன்ற ஸ்டோர்களிலும் விற்கத் தொடங்கினார். க்ரோமாவுடன் சில வருடங்களுக்கு பிரத்யேகமான பார்ட்னர்ஷிப் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஸ்டோரில் ப்ரைவேட் லேபிள் ப்ராண்டுகளுடன் அவரது டிவி போட்டியிட்டதை அறிந்தார். சில்லறை விற்பனையாளர்களும் 18 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 30 சதவீதம் என அதிக ஆதாயத்தை எதிர்பார்த்தனர். ஆகவே 2014-ம் ஆண்டு 30 கோடி மதிப்பிலான பிசினஸ் இருந்தபோது ஸ்நாப்டீல் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் வாயிலாக விற்பனையை மேற்கொள்ள முடிவெடுத்தார் தேவிதா.
ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் கவனம் செலுத்தியதால் இ-காமர்ஸ் வளர்ச்சி காரணமாக VU நிறுவனத்தின் வருவாய் ஒரு வருடத்தில் 90 கோடி ரூபாயை எட்டியது. ஃப்ளிப்கார்ட் நுகர்வோர் சாதனங்களிலும் கவனம் செலுத்திய நேரத்தில் 2015-ல் VU-வுடன் ஒரு பிரத்யேக பார்ட்னர்ஷிப்பில் இணைந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தியது.
”ஃப்ளிப்கார்ட்டுடன் பிரத்யேகமாக பணிபுரிவதற்கான அவர்களது சலுகைகள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. எங்களது சம்மதத்தை தெரிவிக்க நான்கு மாதங்கள் எடுத்துக்கொண்டோம்.” என்றார் தேவிதா.
பார்ட்னர்ஷிப்பின் சரியான நிதி விவரங்களை அவர் வெளியிட விரும்பவில்லை. ஃப்ளிக்கார்ட், VU இரண்டு நிறுவனங்களுமே இந்த பார்ட்னர்ஷிப் தங்களது வளர்ச்சிக்கு நன்கு உதவியதாக தெரிவித்தது. ஒவ்வொரு வருடமும் 100 சதவீத வளர்ச்சியடைந்து தற்போது டிவி சந்தையில் 4.5 சதவீத பங்கை VU பெற்றுள்ளது என ஃப்ளிப்கார்டின் கன்ஸ்யூமர் எலக்ரானிக்ஸ் மற்றும் அப்ளயன்சஸ் தலைவரான சந்தீப் கார்வா தெரிவித்தார். ஃப்ளிப்கார்டின் டிவி விற்பனையில் 30-35 சதவீதம் VU பங்களிக்கிறது.
”இந்தியாவின் மிகப்பெரிய டிவி ப்ராண்ட்களில் VU நான்காவது இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஒட்டுமொத்த டிவி சந்தையில் 20 சதவீதத்தை கைப்பற்றுவதை ஃப்ளிப்கார்ட் இலக்காகக் கொண்டுள்ளது. ஆகவே VU நிச்சயம் இந்த இலக்கை அடைந்துவிடும்.” என்றார் சந்தீப்.
விளம்பரங்களைத் தாண்டிய ப்ராண்ட் பில்டிங்
”பிரபலங்களை ப்ராண்ட் பிரதிநிதியாக்கினால் வாடிக்கையாளர்களை இழந்துவிடுவோம்” என்பதால் தேவிதா தாமே அனைத்து விளம்பரங்களிலும் தோன்றினார். பல விளம்பரங்களில் பிரபலங்களே நடிப்பதால் வாடிக்கையாளர்கள் மனதில் ப்ராண்ட் அவ்வளவாக பதிவதில்லை என்கிறார் தேவிதா. வளர்ந்துவரும் நுகர்வோர் சாதன நிறுவனத்திற்கு ப்ராண்ட் பில்டிங் மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில் சோனி, சாம்சங், எல்ஜி போன்ற சர்வதேச ஜாம்பவான்களுக்கு இருக்கும் மார்க்கெட்டிங் பட்ஜெட்கள் இவர்களுக்கு இல்லை. தேவிதா இதை நன்கறிவார்.
வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்த சிறந்த தயாரிப்புகள், பேக்கேஜிங், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை அளிக்கவேண்டும் என்பது அவருக்கு தெரியும். மேலும் ஒரு வாடிக்கையாளர் மற்றவருக்கு பரிந்துரைப்பது வெற்றிக்கு அத்தியாவசியமானதாகும். வாடிக்கையாளரின் உடனடி கருத்தும் மற்றும் உண்மையான தகவல்களை அணுகுவதற்கு வாய்ப்பு கிடைப்பதும் ஆன்லைன் விற்பனையின் மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். ப்ராடக்டிற்கு தேவைப்படும் மாற்றங்களை நிறுவனத்தால் உடனடியாக செயல்படுத்த முடியும். உதாரணமாக VU-வின் 30 சதவீத விற்பனைக்கு உதவும் ஸ்மார்ட் டிவிகள் Netflix மற்றும் யூட்யூப் பட்டன்களுடன் வருகிறது. Netflix இந்தியாவில் அறிமுகமாக இருப்பது ஃப்ளிப்கார்ட் மூலமாக தெரியவந்ததால் நிறுவனத்தால் இந்த மாற்றத்தை செய்யமுடிந்தது.
VU ப்ராடக்ட்கள் குறித்து ஃப்ளிப்காட்டில் ஆயிரக்கணக்கான நேர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் இந்த ப்ராண்ட் குறித்த எதிர்மறை விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது. மும்பையிலுள்ள VU தலைமையகத்தில் இருக்கும் தேவிதாவின் கேபினுக்கு வெளியில்தான் வாடிக்கையாளர் சேவை குழு இயங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் ப்ராண்ட் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். டெலிவரி மற்றும் இன்ஸ்டலேஷன் தாமதிப்பதே பெரும்பாலானோருக்கு பிரச்சனையாக இருப்பதாக தெரிவிக்கிறார் தேவிதா. எனினும் ப்ராடக்ட் குறித்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அவர் உடனடியாக செயல்படுத்த முயல்கிறார்.
”எங்களது ஒலி அவுட்புட் குறைவாக உள்ளதாக விமர்சனங்கள் கிடைத்ததால் தெளிவான ஒலியுடன் 30W ஸ்பீக்கருடன் கூடிய இண்டெர்னல் USB கனெக்ஷனுக்காக முதலீடு செய்தோம். ஆகவே ப்ராடக்ட் டெவலப்மெண்ட் முறையில் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.”
என்கிறார் தேவிதா. VU குறித்த அவரது நோக்கங்களை நிறைவேற்ற உதவும் முதலீட்டாளர்களை தேடி வருகிறார். அப்படியென்றால் டிவியைத்தாண்டி VU வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுமா என்கிற கேள்விக்கு ஆச்சரியமான பதிலை வெளிப்படுத்தினார் தேவிதா.
“நான் ஏதாவது செய்தால் இதைவிடப் பெரிதாகவே செய்ய விரும்புகிறேன். நிச்சயம் மொபைல் போன்ற சாதனங்கள் அல்ல. அடுத்து நான் கவனம் செலுத்த விரும்புவது கார்.” என்கிறார் தேவிதா.
தேவிதா எதைத் தேர்வு செய்தாலும் தனக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். அவர் கூறுகையில் “எங்களது விளம்பரத்துக்கு ஃபோட்டோஷூட் மாடலாக இருக்கும்போதும் புதிய சாதனத்தை உருவாக்கும் முயற்சியில் முழுவீச்சில் இருக்கும்போதும் ஒவ்வொன்றும் என்னுடைய திறமையை பிரதிபலிக்கிறது. நான் என்னை மாற்றிக்கொள்ளாமல் ஒரு விஷயத்தை அடையும்போது அந்த வெற்றி மிகவும் இனிமையானதாக இருக்கும்.
ஆங்கில கட்டுரையாளர் : ராதிகா பி நாயர்