சமைக்க நேரமில்லையா? கவலையை விடுங்க: 200 வகை டிஷ்களை வீட்டிலே சமைக்கும் ரோபோ!
பெங்களூருவைச் சேர்ந்த Euphotic Labs உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த Nosh ரோபோ 200-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரித்து அசத்துகிறது!
”அலெக்ஸா...” என்று அழைத்ததும் குரல் வழி நீங்கள் இடும் உத்தரவுக்காகக் காத்திருந்து அதற்குக் கீழ்படியும் அல்லவா? நீங்கள் கேட்கும் பாடலை, திரைப்படத்தை ப்ளே செய்யும் அல்லவா? அதேபோல் நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு உணவை உங்களுக்கு ஒரு ரோபோ தயாரித்துக் கொடுத்தால் எப்படி இருக்கும்?
கற்பனை செய்து பார்த்துவிட்டீர்களா? கற்பனையுடன் நிறுத்திக்கொள்ள வேண்டாம். இது இப்போது கற்பனைக்கு எட்டாத விஷயம் அல்ல. சாத்தியம்தான். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலரால் சமையலுக்கு அதிக நேரம் செலவிடமுடிவதில்லை. மனம் இந்தச் சூழலைப் புரிந்துகொள்கிறது. ஆனால் நாக்கு? சுவையைத் தேடுகிறதே! விதவிதமான உணவு வேண்டும் என்கிறதே!
சமைக்க நேரமில்லை; ஆனால் சுவையான விதவிதமான உணவு வேண்டும்; இந்த சிக்கலுக்குத் தீர்வளிக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த Euphotic Labs.
Euphotic Labs ஒரு கிச்சன் ரோபோடிக் ஸ்டார்ட் அப். இந்த நிறுவனம் சமைப்பதற்காக செயலி சார்ந்த தானியங்கி ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோவின் பெயர் Nosh.
கடாய் பனீர், மட்டர் பனீர், சிக்கன் கறி, ஃபிஷ் கறி, கேரட் அல்வா, உருளை ஃப்ரை என கிட்டத்தட்ட 200 உணவு வகைகளை Nosh தயாரித்து அசத்துகிறது.
தொடக்கப் புள்ளி
யதின் குஜராத்தில் உள்ள கந்த்வா கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தொழில்நுட்பப் பிரிவில் முதுகலைப் படிப்பு முடிப்பதற்காக 2008-ம் ஆண்டு இவர் பெங்களூரு சென்றார். யதின் வீட்டை விட்டு சென்று தனியாக வசிப்பது அதுவே முதல் முறை. வெளியில் சாப்பிடவேண்டியிருந்தது. அந்த சாப்பாடும் இவருக்குப் பிடிக்கவில்லை.
திருமணம் முடிந்த பிறகும் யதின் பெங்களூருவிலேயே வசித்து வந்தார். மனைவியும் வேலையில் இருந்தார். இருவரும் வேலைக்கு செல்வதால் இவர்களுக்குப் பிடித்த உணவை செய்து சாப்பிட நேரமில்லாமல் போனது. சமையலுக்கு ஆட்களை நியமிக்கும் ஏற்பாடும் சரிவரவில்லை.
ஹார்ட்வேரில் நிபுணத்துவம் பெற்ற யதின், ஏற்கெனவே மோஷன் கேமரா உருவாக்கியுள்ளார். இது 23-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டன. எனவே உணவுப் பிரச்சனைக்குத் தானே தீர்வுகாண நினைத்தார் யதின்.
பிரச்சனைக்குத் தீர்வு உருவாக்க வேண்டுமானால் பிரச்சனை குறித்த ஆழமான புரிதல் அவசியம். எனவே பெங்களூருவிலும் அமெரிக்காவிலும் உள்ள நண்பர்களிடம் இதுகுறித்து கருத்து கேட்டார். உணவைப் பொருத்தவரை பெரும்பாலானோர் பிரச்சனைகளை சந்திப்பது புரிந்தது.
“உணவகங்களில் சாப்பிடுவதால் வயிறு உபாதைகள் ஏற்படுகிறது; டெலிவரிக்கு காத்திருப்பது எரிச்சலூட்டுகிறது; உணவின் சுவை பிடிக்கவே இல்லை; உடனடியாக சாப்பிடக்கூடிய இன்ஸ்டன்ட் உணவு வகைகளையே சாப்பிடவேண்டியிருக்கிறது; இப்படி பலர் பலவிதமான பிரச்சனைகளை முன்வைத்தார்கள்,” என்கிறார் யதின்.
வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவு அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று நினைத்தார். தொழில்முனைவில் ஆர்வம் இருந்த யதின் இந்த நோக்கத்திற்காக 2018-ம் ஆண்டு Euphotic Labs தொடங்கினார். மூன்று பொறியாளர்களின் உதவியுடன் Nosh உருவாக்கினார். இந்த நோக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட பிரனவ் ராவல், அமீத் குப்தா, சுதீப் குப்தா ஆகியோர் இணை நிறுவனர்களாக இணைந்துகொண்டனர்.
Nosh செயல்பாடுகள்
Nosh பயன்படுத்த முதலில் பயனர்கள் பாக்ஸ் வடிவில் இருக்கும் ரோபோவில் தண்ணீர், எண்ணெய், மசாலா உள்ளிட்ட மூலப்பொருட்களைப் போடவேண்டும். ரோபோ சமைக்கவேண்டிய டிஷ்ஷின் பெயரைத் தேர்வு செய்யவேண்டும்.
இந்த ரோபோ செயற்கை நுண்ணறிவு சார்ந்து செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமரா ரோபோவில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள் சமைப்பது போன்றே ஒவ்வொரு மூலப்பொருளும் அவை சேர்க்கப்படவேண்டிய சரியான சமயத்தில் ஒவ்வொன்றாக சேர்க்கப்படும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்களது தனிப்பட்ட ருசி தேவைக்கு ஏற்ப உப்பு, காரம் போன்றவற்றைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
மூன்றாண்டுகள் செலவிட்டு இந்தத் தயாரிப்பை குழுவினர் உருவாக்கியுள்ளனர். ஆறு முன்வடிவங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு அம்சமாக தீவிரமாக ஆராய்ந்து இறுதி வடிவம் பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டு இறுதியில் Nosh தயாரித்த முதல் டிஷ் உருளைக்கிழங்கு ஃப்ரை.
“Nosh உங்களிடம் இருந்தால் உங்கள் உணவை நீங்கள் திட்டமிட முடியும்; மளிகை ஆர்டர் செய்துகொள்ள முடியும்; கலோரிகளைக் கண்காணிக்க முடியும்; சுவையை தனித்தேவைக்கேற்ப நிர்ணயித்துக்கொள்ள முடியும்; புதிய ரெசிபிக்களை உருவாக்கிக்கொள்ள முடியும்,” என்கிறார் யதின்.
சவால்கள்
Nosh முற்றிலும் புதிய தயாரிப்பு என்பதால் முந்தைய தயாரிப்புகளைப் பார்த்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
“புதிய தயாரிப்பாக இருப்பதால் ஒவ்வொன்றாக சோதனை செய்து, தோல்வியுற்று, தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு,மாற்றியமைத்து சரியான தயாரிப்பை உருவாக்கியிருக்கிறோம்,” என்கிறார் யதின்.
கொரோனா பெருந்தொற்று சூழலானது நுகர்வோரிடம் தயாரிப்பைக் கொண்டு சேர்ப்பது, பயனர்கள் தயாரிப்பை முயற்சி செய்து பார்க்க ஏற்பாடு செய்வது, தயாரிப்பை உருவாகுவது என அனைத்து செயல்பாடுகளையும் பாதித்தது.
சந்தை மற்றும் வணிகம்
இந்தியர்களையும் வீட்டு உணவை விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களையும் இந்த வணிகம் இலக்காகக் கொண்டுள்ளது. மற்ற நாடுகளிலும் விரிவடையத் திட்டமிட்டுள்ளது.
இரண்டாம் கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு Nosh ஷிப்பிங் செய்யப்படத் தயாராக உள்ளது. இதற்கான ஆர்டர்களும் பெறப்படுகின்றன. இந்தியா மற்றும் அமெரிக்காவில் இருந்து ஏற்கெனவே 50 ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன.
Nosh இந்தியாவில் 40,000 – 50,000 ரூபாய் என்ற விலையும் அமெரிக்காவில் 699-1,299 அமெரிக்க டாலர் என்கிற விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Nosh தயாரிப்பின் விற்பனை மூலம் மட்டுமல்லாது பிரீமியம் ரெசிபி சந்தா, வருடாந்திர பராமரிப்பு, மளிகைப் பொருட்களுக்கான இணைப்பு போன்றவை மூலமாகவும் வருவாய் ஈட்டப்படுகிறது.
முதலீடு மற்றும் வருங்காலத் திட்டங்கள்
யதின் தனது நண்பரான மொகமதியிடம் நிதி திரட்டுவது பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
”மொகமதிக்கு எங்களது தயாரிப்பு பிடித்திருந்தது. எங்கள் நிறுவனத்தில் 5 லட்ச ரூபாய் முதலீடு செய்ததுடன் முதல் வாடிக்கையாளராகவும் மாறினார்,” என்கிறார் யதின்.
யதின் ஆரம்பத்தில் 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தார். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 25 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதுதவிர ஐஐடி மும்பை புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு சங்கம் (Society for Innovation and Entrepreneurship-SINE) 40 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
தற்சமயம் இந்நிறுவனம் பெங்களூருவில் 1,000 யூனிட்களைத் தயாரித்து வருகிறது. ஆர்டர் அடிப்படையில் மொத்த அளவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
“நீங்கள் எங்கு வசித்தாலும், வீட்டில் சமைத்து சாப்பிடும் உணவின் அதே சுவையை ஃப்ரெஷ்ஷாக வழங்க உத்தரவாதம் அளிக்கிறது Nosh,” என்கிறார் சுதீப்.
ஆங்கில கட்டுரையாளர்: ராஷி வர்ஷினி | தமிழில்: ஸ்ரீவித்யா