Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

600 வகையான உணவுவகைகளைத் தயாரிக்கும் இந்தியாவின் முதல் இயந்திர சமையல் மனிதன்!

இல்லத்தரசிகளுக்கும், உணவகங்களுக்கும் நாள்தோறும் விதவிதமான உணவுகளை சமைக்க உருவாக்கப்பட்டுள்ள ரோபோசெஃப், இந்தியன், சைனீஸ் என 600க்கும் மேற்பட்ட உணவுகளைத் தயாரித்து சுடச்சுட கொடுத்துவிடும்.

600 வகையான உணவுவகைகளைத் தயாரிக்கும் இந்தியாவின் முதல் இயந்திர சமையல் மனிதன்!

Tuesday December 24, 2019 , 5 min Read

குடிசையாக இருந்தாலும் சரி, பெரிய மாட மாளிகையாக இருந்தாலும் சரி சமையலறை என்ற ஒன்று இல்லாவிட்டால் அதனை வீடு என்றே யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எவ்வளவு தான் ஹோட்டல்கள் வந்தாலும், ஆன்லைனில் வீட்டிற்கே உணவு கொண்டு வந்து கொடுத்தாலும் வீட்டுச் சாப்பாட்டின் ருசியே தனி தான்.


ஆனால், சமையலறைகள் பெரும்பாலும் பெண்களுக்கானது என்ற மனப்போக்கு தான் இங்கு சரியில்லாதது. சமையல் அறை தான் பெண்களின் உழைப்பை அதிகம் கேட்கக்கூடிய இடமாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் கூட கூடுதல் உழைப்பை தர வேண்டிய கட்டாயத்தில் தான் இன்று பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள்.


சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலையளிக்கவேண்டும் என்று உணவுத்துறை விஞ்ஞானிகள், ஏனைய தொழில்நுட்ப துறையினருடன் இணைந்து இன்றளவிலும் போராடி வருகிறார்கள். மிக்சி, கிரைண்டர், ஜுஸ் மேக்கர், காபி மேக்கர், காய்கறிகளை வெட்டும் கருவி, இன்டக்ஷன் ஸ்டவ் என சமையலறை வேலைகளை சுலபமாக்க அவர்கள் பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ள போதும், அவற்றை இயக்கி வேலை வாங்குவதற்காவது பெண்கள் கட்டாயம் சமையலறையிலேயே அடைந்து கிடக்க வேண்டிய நிலைமை இன்னமும் நீடித்து வருகிறது.

Robochef Saravanan

Robochef நிறுவனர் சரவணன் சுந்தரமூர்த்தி

முன்பு வீட்டிலேயே மட்டும் இருந்த பெண்களுக்கு சமையல் அவ்வளவாக சுமையாகத் தெரிந்ததில்லை. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. ஆண்களுக்கு இணையாக சமயங்களில் அவர்களைவிட கூடுதல் பொறுப்புடன் சமூகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சமையல் என்பது பெரும்பாலும் உடல் சுமையாக மட்டுமல்லாமல், மனச்சுமையாகவும் மாறி விடுகிறது. தன் குடும்பத்தினருக்கு தன்னால் வாய்க்கு ருசியாக சமைத்துப் போட முடியவில்லையே என்ற கவலையும் நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.


அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக கண்டுபிடிக்கப் பட்டிருப்பது தான் 'ரோபோசெஃப்' (ROBOCHEF) எனப்படும் இயந்திர சமையல் மனிதன். இந்தியாவின் முதல் சமைக்கும் எந்திர மனிதனான ரோபோசெஃப்பை வடிவமைத்துள்ளார் அதன் நிறுவனத்தின் உரிமையாளரான சரவணன் சுந்தரமூர்த்தி.

“மென்பொருள் நிபுணராக நான் பதினோரு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, உணவுத் துறையில் ஏதேனும் சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்து, இந்த ரோபோசெஃப் என்ற இயந்திர மனிதனை வடிவமைத்திருக்கிறோம்.

Robo Saravanan
இந்த இயந்திர மனிதன் 600 வகையான ரெசிபிகளை சமைக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம். அதில் இந்தியன், சைனீஸ், வியட்நாமீஸ், தாய்லாந்து நாட்டு உணவுவகைகள் என பல நாட்டு உணவுகளையும் சமைக்கும் வகையில் தயாரித்திருக்கிறோம். இதன் மூலம் தினமும் 3,000 நபர்களுக்கு சமைத்து, விநியோகிக்கிறோம்,” என்கிறார் சரவணன் சுந்தரமூர்த்தி.

உணவே மருந்து என வாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். ஆனால் இன்றோ மருந்தே உணவாக மாறிய அவலநிலையில் இருக்கிறோம். சமீபகாலமாக ஆரோக்கிய உணவு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்திருக்கிறது. உணவு சுவையாக மட்டும் இருந்தால் பத்தாது, அது சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்ற தெளிவு மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. அதோடு சுவை என்பது ஒரே அளவில் எப்போதும் மாறாததாக இருக்கவேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள்.


வீடுகள் மட்டுமின்றி உணவகங்களிலும் தொடர்ந்து ஒரே வேலையைச் செய்யும் ஊழியர்களுக்கு சலிப்பு ஏற்படுவது தவிர்க்க இயலாதது. அது சுவையிலும் எதிரொலிக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான சுவையில் உணவைத் தருவது உணவக உரிமையாளர்களுக்கும் பெரும் சவாலாகி விடுகிறது. இப்படிப்பட்ட குடும்பத்தலைவிகள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த ரோபோசெஃப் என்கிறார் சரவணன்.

“இன்று ஏராளமானவர்கள் சமையலுக்கான நேரத்தை ஒதுக்குவதை விரும்புவதில்லை. சமையல் என்பது அதிக நேர உழைப்பை கேட்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீட்டின் இல்லத்தரசி சமையலுக்காக தினமும் குறைந்தபட்சம் ஆறு மணிநேரத்தை ஒதுக்கவேண்டி இருக்கிறது. இதனால் தான் மனிதர்களின் உதவியின்றி இயந்திரத்தை எவ்வளவு தூரம் சமையலில் ஈடுபடுத்த முடியும் என்பதை தொடர்ந்து ஆய்வு செய்தோம். வடிவமைத்த பின்னர் சமையலுக்கு செலவிடும் நேரம் குறைந்திருப்பதை உறுதி செய்தோம்.

ஒரே மாதிரியான சுவையை அனைத்து விதமான உணவு வகைகளிலும் அளிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்தினோம். உதாரணத்திற்கு மதுரை சிக்கன் பிரியாணியை எங்களுடைய ரோபோ செஃப் சமைத்தால், மதுரை, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் வேறு எங்கு சுவைத்தாலும் ஒரே மாதிரியான சுவையைத்தான் தரும். இது ரோபோசெஃபின் மிகப்பெரும் பலன் என்று கூறலாம்,” என்கிறார் சரவணன்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது குழுவினருடன் சேர்ந்து உணவுத்துறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளார் சரவணன். அவர்களது தொழில்நுட்ப நிறுவனத்தில் ரோபோடிக் பிரிவு எனப்படும் இயந்திர மனிதனை உற்பத்தி செய்யும் பிரிவும் உண்டு. அங்கு இயந்திரவியல் துறையில் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். முப்பரிமாண அச்சு இயந்திர கருவியை முழுமையாக தானியங்கி முறையில் வடிவமைத்திருக்கிறார்கள்.


அப்போது தான் இந்த தானியங்கி தொழில்நுட்பத்தை எப்படி மக்களின் தேவைக்கான துறையில் அறிமுகம் செய்வது என்ற எண்ணம் சரவணனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் தானியங்கி தொழில்நுட்பம் கார்ப்பரேட் நிறுவனங்களிலும், எண்டர்பிரைசஸ் நிறுவனங்களிலும் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையை மாற்றி ஏன் இதை வீடுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்ற கோணத்தில் அவர் யோசித்துள்ளார். எண்ணத்தில் இருந்ததை செயலில் கொண்டுவர முயற்சித்த போது, ஆரம்பத்தில் பல தடங்கள்களைச் சந்தித்துள்ளார் சரவணன்.


“என்னுடைய துறையைச் சார்ந்த நண்பர்கள், தானியங்கி எனப்படும் ரோபோடிக் துறையில் வல்லவராக இருக்கும் உங்களால் முழுக்க முழுக்க சமையல் செய்யும் எந்திர மனிதனை உருவாக்க முடியுமா? என சாதாரணமாகவும், நகைச்சுவையாகவும் கேட்டார்கள். அதன் பிறகு இதற்கான முயற்சியைத் தொடங்கினோம். தற்போது நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ரோபோசெஃப் பதினெட்டாவது ஹார்ட்வேர் வெர்ஷன்.

ஒவ்வொரு முறையும் பிரத்யேகமான முறையில் மீண்டும் மீண்டும் ரீடிசைன் செய்து கொண்டே இருந்தோம். இந்தத் துறையில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களே இது குறித்து ஆய்வு நிலையிலேயே இருக்கும் போது உங்களால் மட்டும் எப்படி சாத்தியப்படும்? என்றார்கள். ஆனால் ஒன்றை நினைத்து அதில் முழு மனதுடன் பணியாற்றி வெற்றிகிடைக்கும் என்ற மனநிலையில் குழுவாக இணைந்து கடினமாக பணியாற்றியதால் இதனை உருவாக்க முடிந்தது. இந்தத் தருணத்தில் இதற்காக உழைத்த என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,” எனக் கூறுகிறார் சரவணன்.

ரோபோசெஃப்பை பொறுத்த வரை இரண்டு வகையான ரோபோக்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஒன்று வணிக நோக்கம் கொண்டது. மற்றொன்று ரோபோசெஃப் மினி. இது இல்லத்தரசிகளுக்கு ஏற்றது.

ரோபோசெஃப்பில் 600 வகையான ரெசிப்பிகளை செய்ய முடியுமாம். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, சாம்பார், ரசம், சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் என அறுநூறுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரிக்க முடியும் எனக் கூறி பிரமிக்க வைக்கிறார்கள்.

ரோபோசெஃபை வேலை வாங்குவது மிகவும் சுலபம் தான். சமைக்கும் முன்னர் நீங்கள் என்ன உணவைத் தயாரிக்கவேண்டுமோ, அதற்குத் தேவைப்படும் பொருள்களை, அதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறிய வடிவிலான பெட்டி போன்ற ஹாப்பர்ஸ் அமைப்பில் வைத்து விடவேண்டும். இது மட்டும் தான் இந்த இயந்திர மனிதனுக்கு நாம் செய்யும் ஒரேயொரு வேலை. இதனைத் தொடர்ந்து நீங்கள் என்ன வகையான உணவு தேர்வு செய்கிறீர்களோ அதற்கான ஆப்ஸை டவுண்லோடு செய்து, கிளிக் செய்தால் போதும். ரோபோசெஃப் குறைவான நேரத்தில், சுவையான உணவை தயாரித்து தந்து விடுவார்.

award

ஒரு வேளை உங்களுடைய வீட்டில் சர்க்கரை நோயாளிகள் அல்லது இரத்த அழுத்த நோயாளிகள் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் உணவை தயாரிப்பதற்கு முன்பாக அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும். சர்க்கரை குறைவாகவோ அல்லது உப்பு, காரம் குறைவாகவோ உணவு தயாராகிவிடும்.


இந்த இயந்திர மனிதனுக்குள் முப்பத்தெட்டு ஹார்ப்பஸை அமைத்திருக்கிறார்கள். இது தவிர சாலிடட் இன்கிரிடன்ட்ஸான காய்கறிகள் மற்றும் இறைச்சியை போட்டு வைத்துக் கொள்வதற்கென தனியாக பதினெட்டு ஹாப்பர்ஸ்கள் உள்ளனவாம். கூடுதலாக காய்கறிகளை நறுக்குவதற்காக தானியங்கி வெட்டும் இயந்திரத்தையும் சேர்த்து பொருத்தியிருக்கிறார்கள்.

“சில தொழில்நுட்பங்கள், சிலரின் பணிகளின் எளிமைப்படுத்தி, பணிச்சுமையைக் குறைக்குமேத் தவிர, அவருக்கு பதிலீடாக எந்தத் தொழில்நுட்பமும் வரவில்லை. இதன் மூலம் பல தொழில்முனைவோர்கள் உருவாவார்கள். குறிப்பாக உணவகத் தொழிலில் ஈடுபட ஏராளமானவர்கள் விருப்பமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகயிருப்பது, தினமும், தொடர்ச்சியாக மூன்று வேளையிலும், ஒரே சுவையுடன் கூடிய வித விதமான உணவைத் தயாரித்து, மக்களுக்கு அளிப்பது தான். இந்த கவலையையும் ரோபோசெஃப் நீக்கி விடும்,” என்கிறார் சரவணன்.

இதில் சுவைக்காக வடிவமைத்திருக்கும் மென்பொருளில் தமிழகம் மற்றும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலமான சமையல் கலை நிபுணர்களின் பங்களிப்பு இருக்கிறது. இதன் மூலம் ஒரே மாதிரியான சுவையில் பத்தாயிரம் பேருக்கு கூட உணவு சமைக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

ரோபோசெஃப்பில் தயாரிக்கப்படும் உணவு முழுவதும் சுகாதார முறையில் தயாரிக்கப்படுகிறது. மேலும் சமைக்கப்படும் உணவு ஆறு மணி நேரத்திற்கு சூடாகவும், சுவை மாறாமலும் இருக்கும் என்கிறார்கள். அதே போல் சமைத்த பின்னர் சமையல் பாத்திரங்களை கழுவி சுத்தப்படுத்தவும் பிரத்யேகமாக இதில் வசதி உள்ளது. சமைத்த உணவை ‘டேக் அவே’ பாணியில் எடுத்துக் கொண்டுச் செல்லும் வகையிலும் ரோபோசெஃப் பணி புரிகிறது.


இந்த ரோபோசெஃப் நிறுவனமானது ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் சிறந்த ஸ்டார்ட்டப் நிறுவனம் என்ற விருதைப் பெற்றிருக்கிறது. துபாய் அரசின் உதவியுடன் அங்கு நடைபெற்ற உலகளவிலான கண்காட்சியில் இடம்பெறுவதற்காக இந்தியாவிலிருந்து ரோபோசெஃப் தேர்வு செய்யப்பட்டது, அந்த கண்காட்சியில் பலரின் பாராட்டுகளையும் இது பெற்றிருக்கிறது.

“எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய ரோபோசெஃப்-ஐ அறிமுகப்படுத்த இருக்கிறோம். இதன் மூலம் இதுவே விதவிதமான சுவையில், உணவைத் தயாரித்து மக்களை மகிழ்விக்கும்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் சரவணன்.

ஒரே நிமிடத்தில் பத்து தோசையைத் தயாரிக்கும் கருவி, சப்பாத்தி மற்றும் புரோட்டாவை தயாரிக்கும் கருவி, பஜ்ஜி, போண்டோ போன்ற நொறுக்குத் தீனிகளை தயாரிக்கும் கருவி என சமையலுக்கு பயன்படும் வகையிலான பல கருவிகளையும் ரோபோசெஃப் நிறுவனம் இதற்கு முன்னர் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.