தொழில்முனைவு என்றால் என்ன? ஆல்ஃபா டு ஒமேகா - புதிய தொடர்!
நீங்கள் விரும்புவது சுயதொழிலா அல்லது தொழில்முனைவா என்பதை முதன்முதலில் வரையறுத்துக்கொள்ளுங்கள். அப்போ இரண்டும் வேறுவேறா?
நண்பர் ஒருவருக்கு சொந்தத்தொழில் செய்யவேண்டும் என்ற ஆசை. மாதம் முழுவதும் முதலாளிக்காக உழைத்துக்கொட்டிவிட்டு மாசக்கடைசியில் அவர் கிள்ளித்தரும் சம்பளத்திற்கு வேலை செய்ய விருப்பமில்லாமல் சொந்தமாகத் தொழில் துவங்க வேண்டும் என்பது அவர்தரப்பு விளக்கம்.
நமக்கு என்ன வரும் என்ற யோசனை ஒருபக்கம், என்ன செய்தால் நமக்குப் பணம் வரும் என்ற யோசனை மறுபக்கம் என யோசித்துக் கொண்டிருந்தவருக்கு பளிச்சென ஒரு ஐடியா. அந்த ஐடியாவை அசைபோட்டுக்கொண்டிருந்தவரின் மனக்கண்ணில், சினிமா படப்பாடலைப்போல முதலில் ஒரு பைக்கும், பின்னே ஒரு குட்டியானையும், பிறகு சின்னதாக ஒரு காரும், அப்படியே சிறிதும் பெரிதுமாக சில கார்களுமாக அவரது போர்ட்டிகோ அழகாகிக்கொண்டேப் போனது.
என்னதான் பிடித்தமான பாடலாக இருந்தாலும், பாடலுக்கு முடிவு உண்டல்லவா? மனக்கண்ணில் ஓடிய காட்சிகளை மெய்ப்படுத்த முனைந்தவருக்கு அதிர்ச்சி.
அவர் ஐடியாவை கேட்ட நண்பர்கள் பலரின் அறிவுரையும்/கருத்தும் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை அவருக்கு. ’இது ரிஸ்க் என்றும், இது வேண்டாத வேலை என்றும், இதில் உனக்கு அனுபவம் இல்லை என்றும், இதெல்லாம் நம்மூருக்கு செட்டாகுமா’ என்றும் கேள்விக்கணைகளும் கேலிக்கணைகளுமாகப் போனது சில வாரங்களும் மாதங்களும்.
சொகுசு கார்களில் செல்வதைப்போல வரும் கனவு உத்வேகமாயும், ’நான்தான் அப்பவே சொன்னேன்ல’ என்ற பயமுறுத்தல்கள் சலிப்படைய வைப்பதுமாய் மாறிமாறி நாட்களை கடத்திக்கொண்டிருக்கிறார் அவர்.
இந்த நண்பரைப்போலவே, தொழில்முனைவுக்கான நல்ல ஐடியாவை வைத்துக்கொண்டு அடுத்தகட்ட நகர்வு குறித்து இருமனதாய் இருப்பவர்களுக்காகவே இந்தத் தொடர்!
என்ன செய்யப்போகிறோம் என்ற முடிவான ஐடியா உங்கள்வசம் இருந்தாலும் சரி, அல்லது தொழில்முனைவுதான் என்று முடிவாகிவிட்டது, என்ன ஐடியா என்றுதான் தெரியவில்லை என்றாலும் சரி, உங்கள் சஞ்சலங்களுக்கு விடைகாண முயலும் ஒரு எளிய முயற்சி...
’தொழில்முனைவு எல்லாருக்குமானதல்ல, எனவே, நீங்கள் ஏன் தொழில்முனைவோராக மாறவேண்டும்’ என்று போதனை வகுப்பு எடுக்கப் போவதில்லை. மாறாக, தொழில்முனைவுதான் ஆசை, ஆனால், என்ன செய்வது அல்லது எப்படிச் செய்வது என்று முடிவெடுக்க இயலாமல் இருக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம்நிலை நகரங்களைச் சேர்ந்த முதல்தலைமுறை தொழில்முனைவோரை முதன்மை வாசகர்களாகக் கருத்தில்கொண்டு இத்தொடர் எழுதப்படுகிறது.
ஏற்கெனவே தொழில்முனைவு குறித்து நல்ல புரிதல் இருப்பவர்களுக்கும் இந்ததொடரின் மூலம் ஏதேனும் கிடைக்கப்பெற்றால் மகிழ்ச்சி.
என்னோட ஐடியாவை நினைக்கும்போது அப்படியே பணம் அருவியா கொட்டுது, ஆனா, அந்த முதல் ஸ்டெப்தான் முட்டுது என குணா கமலைப்போல எவ்வளவு இக்கட்டான நிலைமை!
ஆனால், குணாவுக்கு அபிராமி வார்த்தைகளைக் கோர்த்துக் கொடுப்பதைப்போல, தொழில்முனைவோருக்கு கைதூக்கிவிட பல அபிராமிகள் இருக்கிறார்கள்.
இதுல சோகம் என்னன்னா, இந்த மாதிரி கைதூக்கிவிட ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே அதிகம் வெளியில் தெரிவதில்லை. உங்கள் வீட்டில், ஊரில் அல்லது ஜில்லாவிலேயே நீங்கள்தான் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருந்தாலும் சரி, உங்கள் ஐடியா என்னவென்று கேட்க, உங்கள் கோரிக்கை முதலீடுகோரி, ஆலோசனைவேண்டி, அல்லது மார்க்கெட்டிங் உத்திகள் கற்றுத்தர என எதுவாக இருந்தாலும் அவற்றை கவனமுடன் பரிசீலித்து தேவையான உதவிகளைச் செய்ய, உங்கள் தொழில்முனைவு பயணத்தில் துவக்கத்தில் இருந்து உங்களை கைப்பிடித்து அழைத்துச்செல்ல நிறைய நல்லுல்லங்கள் செயலாற்றி வருகின்றனர்.
தொழில்முனைவோரின் கனவை நனவாக்கி, உங்கள் போர்ட்டிக்கோவை அழக்காக்குவதில் என்னென்ன வழிகள் மற்றும் படிகள் இருக்கின்றன என்பது குறித்து ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
நீங்கள் விரும்புவது சுயதொழிலா அல்லது தொழில்முனைவா என்பதை முதன்முதலில் வரையறுத்துக்கொள்ளுங்கள். அப்போ இரண்டும் வேறுவேறா?
ஆம். நிச்சயம் வெவ்வேறுதான். மாதம் இத்தனை லட்சம் அல்லது இத்தனை ஆயிரம் ரூபாய் லாபம் வேண்டும், அதற்கு ஏதாவது தொழில் வேண்டும் என்பது பெரும்பாலும் சுயதொழிலில் அடங்கிவிடும். இங்கே படைப்பாக்கம் இருக்காது. புதுமை இருக்காது. மிகப்பெரிய அளவில் மாற்றம் கொண்டுவராது.
ஆனால், தொழில்முனைவு அப்படியில்லை. ஏதேனும் ஒரு பிரச்னையை தீர்ப்பதுதான் தொழில்முனைவின் அடிப்படையே. அதாவது problem solving.
தொழில்முனைவுக்கு புதுமையான சிந்தனை தேவை. எல்லாரும் ஓடும் திசையில் தானும் ஓடாமல், என்ன பிரச்னை என்பதை அவதானித்து அதற்குத் தீர்வு காண முயல்வதுதான் தொழில்முனைவு. சுயதொழில் பிரிவில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அங்கே நெரிசலும் அதிகம், ஆனால், தொழில்முனைவுப் பாதை நெரிசல் இல்லாத அதேநேரம் கரடுமுரடான பாதை.
தொழில்முனைவு என்றால் என்ன என்ற இலக்கண வகைக்குள் அதிகம் செல்லவேண்டாம். ஆனால், சுயதொழிலுக்கும் தொழில்முனைவுக்குமான அடிப்படை வித்தியாசத்தை அறிந்துகொண்டு மேலே செல்வது நல்லது.
ரிஸ்க் அதிகம் இல்லாத சுயதொழில் உங்கள் விருப்பம் என்றால் நல்லது. ஆனால், இந்தத் தொடரில் நாம், முழுமையாக கவனம் செலுத்தவிருப்பது தொழில்முனைவோரைப் பற்றி மட்டுமே.
சரி, உங்கள் விருப்பம் தொழில்முனைவுதான் என்றாகிவிட்டது என்றால், அது பொருள் உற்பத்தி சார்ந்ததா அல்லது சேவைப்பிரிவைச் சார்ந்ததா (Product or Service Based) என்பது பிரித்தறியப்படவேண்டும். குறிப்பிட்ட பணியைச் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன, அதற்கு மாற்றாக இந்தப் பொருளைக் கொண்டு அந்த சிக்கலை தீர்க்கலாம் என்று ஏதேனும் ஒரு பொருளை (Product) நீங்கள் உருவாக்கலாம். ஏற்கெனவே இருக்கும் ஒரு சேவைப்பிரிவில் கூடுதலாக சில வசதிகளைச் சேர்க்கும்வண்ணம் நீங்கள் சேவையை அளிக்கலாம் அல்லது புத்தம்புதியதாகவே ஒருப் பிரிவை உருவாக்கலாம்.
மாதச் சம்பளம் வேண்டாம், எல்லோராலும் செய்யமுடிகிற சுயதொழில் வேண்டாம், குதித்தால் தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைச்சாமி என்று தொழில்முனைவு கோதாவில் இறங்கியிருக்கும் அன்பர்கள், அவரவர் விருப்பம் சார்ந்து, துறைசார் அறிவுசார்ந்து பொருள் அல்லது சேவைத்துறையை தேர்ந்தெடுத்தப்பின், துவங்குகிறது முதல் அமில பரிசோதனை.
என்ன பண்ணலாம்? நமக்கு எதில் ஆர்வம்? நமக்கு என்ன வரும்? அதுக்கு எவ்வளவு செலவாகும்? இது வொர்க் அவுட் ஆகுமா? இதுல ஒரு சந்தேகம் என்றால் யாரிடம் போய் கேட்பது? எல்லாவற்றுக்கும் மேல இது போனியாகுமா? சரியான ஐடியாவை எப்படி கண்டுகொள்வது? கண்டுகொண்ட ஐடியாவை எப்படி வேலிடேட் செய்துகொள்வது? எங்கிருந்து முதலீடு பெறுவது, முதலீடு திரட்டுவதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன? உற்பத்தி செய்த பொருள் அல்லது சேவையை விற்பனை செய்வது எப்படி என questions questions questions, you don’t like questions என்றாலும் கேள்விகள் உங்களை விடுவதில்லை.
முதலீடு? என்ற ஒற்றை வார்த்தை பெரும்பாலான தொழில்முனைவுகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவது உண்டு. ஆனால், முதலீடு தருவதற்காக ஆட்களும், அரசுகளும், நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு காத்திருக்கின்றன என்றால் ஏற்பீர்களா?
அதுவும் முதலீடாக இல்லாமல் பரிசாக, அன்பளிப்பாக, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அளிக்க வாய்ப்புகள் உண்டென்றால் ஏற்பீர்களா? உண்டு. ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்ப்போம். போர்ட்டிகோவை ரெடி பண்ணிக்கங்க...
தொழில் தொடரும்...
(பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையை எழுதியிருப்பர், ‘பணமரம்’ நிறுவனத்தின் நிறுவனர். இதில் குறிப்பிட்டுள்ளவை அவரின் சொந்த கருத்துக்கள். இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பாகாது.)