சிறு, குறு வணிகங்கள் ஜிஎஸ்டி வரி தாக்கல் செயல்முறை: செயற்கை நுண்ணறிவு கொண்டு எளிதாக்கும் ஸ்டார்ட் அப்!

சென்னையைச் சேர்ந்த ThoughtBit ஸ்டார்ட் அப், சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய உதவுகிறது. இந்நிறுவனம் அதற்குச் சொந்தமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு தரவுகள் சார்ந்த தீர்வுகளை வழங்குகிறது.

10th Sep 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் வணிகங்கள், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வணிகங்கள் வரி தாக்கல் செய்யும் செயல்முறையை சீரமைக்க உதவும் நோக்கத்துடன் ஏராளமான தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய தீர்வுகளில் பெரும்பாலானவை பெரிய நிறுவனங்களை மையமாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.


சிறு வணிகங்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் 2017-ம் ஆண்டு தாட்பிட் (ThoughtBit) நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர் ஐஐஎம்ஏ முன்னாள் மாணவர்களான சித்தார்த்தன் பன்னீர்செல்வம் (சித் செல்வம்) மற்றும் ராஜேஷ்வரன் வேணுகோபால்.


வணிகங்கள் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய சென்னையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் உதவுகிறது. இந்நிறுவனத்திற்குச் சொந்தமான செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உதவியுடன் தரவுகள் சார்ந்த தீர்வுகளை வழங்குகிறது.


இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வணிகங்களுக்கு மிகப்பெரிய தடையாக இருப்பதை உணர்ந்த நிறுவனர்கள் ஸ்டார்ட் அப் துவங்க தீர்மானித்தனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களின் ஏற்றுமதி தயாரிப்புகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் காட்டிலும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டதாக ஆர்பிஐ மெமோ குறிப்பிடுகிறது.
1
”மிகப்பெரிய அளவிலும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் நிலையான வணிகத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் ThoughtBit இணை நிறுவனர் சித் செல்வம்.

சித், ராஜேஷ் இருவருமே சுமார் நாற்பதாண்டு கால அனுபவம் பெற்றவர்கள். தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பை உருவாக்கவேண்டும் என்பதே இருவரது தனிப்பட்ட திட்டமாக இருந்தது. ராஜேஷ் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மாற்றலானபோது இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் சித் அறிமுகமானார். இருவரும் பல முறை சந்தித்துக் கொண்டனர். இருவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்து இவர்கள் ThoughtBit நிறுவனத்தைப் பதிவு செய்தனர்.


2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி மென்பொருளின் சோதனைகட்ட வெர்ஷனை உருவாக்கினர். ThoughtGST என்கிற இவர்களது தயாரிப்பு 2018-ம் ஆண்டு வணிக ரீதியாக அறிமுகமானது.

”நாங்கள் வெவ்வேறு பாதையில் பயணித்திருந்தாலும் ஒரே திசையில் கவனம் செலுத்தியதால் ThoughtGST உருவானது,” என்றார் சித்.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு

ThoughtBit செயற்கை நுண்ணறிவு என்ஜினைப் பயன்படுத்தி வணிகங்கள் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய உதவுகிறது. இந்த தீர்வின் மூலம் லட்சக்கணக்கான கோரிக்கைகளை விநாடிகளில் கையாளமுடியும் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.


ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்யப்பட்ட வணிகங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு படிவங்களை பதிவு செய்யவேண்டியது அவசியம். நிறுவனங்கள் அரசாங்க வலைதளத்தில் வரிதாக்கல் செய்யும் வசதியும் உள்ளது. ஆனால் இந்த செயல்முறை சற்று சிக்கலானது. இந்த நிறுவனங்களின் சப்ளையர்கள் வரித்தாக்கல் செய்யும் வரை இந்நிறுவனங்களால் உள்ளீட்டு வரி வரவு பெறமுடியாது. மக்கள் வரி தரவுகள் பதிவு செய்வதில் பல குறைபாடுகள் உள்ளது. இதனால் வரியை சேமிப்பதற்கான வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது என்கிறார் சித்.

2
”எனவே குறைந்த விலையில் தரவுகள் அதிவிரைவாக சரிபார்க்கப்படவேண்டும் என்பதற்காக ThoughtAI உருவாக்கினோம்.”

ThoughtGST அரசு அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் இருந்து தரவுகள் எடுக்கமுடியும். இந்நிறுவனம் ஜிஎஸ்டி வரிவிதிப்புகளை முறையாக தாக்கல் செய்யாத சப்ளையர்களின் விவரங்களை அறிக்கையாக வழங்குகிறது. இந்த ஸ்டார்ட் அப்பின் அம்சங்களை ஆராய்ந்த பிறகே அரசு ஒப்புதல் வழங்கியதாக சித் தெரிவிக்கிறார்.


ThoughtBit நிறுவனத்தின் முதல் வாடிக்கையாளர் ஆட்டோமோடிவ், விண்வெளி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற பிரிவுகளில் கவனம் செலுத்தும் உற்பத்தியாளர் ஆவார். இவர்கள் தங்களது சப்ளையர்களிடமிருந்து அதிகளவிலான இன்வாய்ஸ்களைப் பெற்றனர். அப்போது வழங்கப்பட்ட ஜிஎஸ்டி தீர்வுகள் பொருத்தமாக இல்லை. இதனால் இவர்களது கணக்கியல் குழுவே வரி சார்ந்த நடவடிக்கைகளைக் கையாண்டு வந்தது. 

”எங்களை சந்திக்க அவர்கள் தயக்கம் காட்டினாலும் எங்களது தயாரிப்பு குறித்த செய்முறை விளக்கத்தை பார்த்த பிறகு அவர்கள் சம்மதித்தனர். அவர்களது நிர்வாக இயக்குனரிடம் நேரடியாக அழைத்துச் சென்று உடனடியாக கொள்முதல் செய்யத் தீர்மானித்தனர். எங்களது சேவைக்காக நாங்கள் பல காசோலைகளை வாங்கியிருந்தாலும் முதல் வாடிக்கையாளரின் ஆர்டர் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக இருந்தது,” என்றார் சித்.

இந்த ஸ்டார்ட் அப்பின் செயற்கை நுண்ணறிவு தளம், விற்பனை மற்றும் கொள்முதல் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வணிகம் சார்ந்த நுண்ணறிவுகளையும் வழங்குகிறது. மற்றொரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ThoughtGST நிறுவனத்தின் நுண்ணறிவுகளைப் பயன்படுத்தி விற்பனை மற்றும் மார்கெட்டிங் பட்ஜெட்களில் கவனம் செலுத்தியது. அதேபோல் ஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் அதன் சப்ளையர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்புகளை முறையாக தாக்கல் செய்யாததால் நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டதை ThoughtGST நிறுவனத்தின் நுண்ணறிவுகள் மூலம் கண்டறிந்தது.

சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தீர்வு

ThoughtGST SaaS சார்ந்த சந்தா மாதிரியை வழங்குகிறது. கடந்த ஆறு மாதங்களில் இந்நிறுவனம் கட்டணம் செலுத்தும் 50 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பட்ஜெட் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மிகக்குறைந்த தொகையாக ஆண்டிற்கு 10,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறது.


சிறு வணிகங்களுக்கான தீர்வை உருவாக்குவதில் காணப்படும் முக்கிய அம்சத்தை சித் சுட்டிக்காட்டும்போது,

”தீர்வு குறைந்த விலையில் இருக்கவேண்டும். சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் சிறப்பாக செயல்பட உதவும் வகையில் முக்கிய வணிக பிரச்சனையைத் தீர்த்துவைக்கவேண்டும்,” என்றார்.
3

தற்போது நாட்டில் 63 மில்லியனுக்கும் அதிகமான சிறு, குறு, மற்றும் நடுத்தர வணிகங்கள் இருப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இந்நிறுவனங்கள் 110 மில்லியனுக்கும் அதிகமானோரை பணியிலமர்த்தியுள்ளது. அத்துடன் தொழில்துறை தயாரிப்பில் 45 சதவீததிற்கும் அதிகமாக பங்களிக்கிறது. 2019-ம் ஆண்டு மே மாத நிலவரப்படி சுமார் 1.22 கோடி நிறுவனங்கள் ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளன.

ஜிஎஸ்டி பதிவு செய்த சுமார் 70 லட்சம் நிறுவனங்கள் தொடர்ந்து வரி தாக்கல் செய்வதாகவும் இந்நிறுவனங்களில் ஒரே ஒரு சதவீதம் மட்டுமே 50 கோடிக்கும் அதிகமான விற்றுமுதல் கொண்டுள்ள நிறுவனங்கள் என்றும் ThoughtBit மதிப்பிடுகிறது. எனவே 50 லட்சத்திற்கும் அதிகமான வணிகங்களை இலக்காகக் கொள்ளமுடியும் என இந்த ஸ்டார்ட் அப் கணிக்கிறது.

இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் உள்ளீட்டு வரி வரவில் இருக்கும் இடைவெளிகளைக் கண்டறிய உதவியுள்ளது. சராசரியாக ஒரு சதவீதம் வரை வருவாய் இழப்பைத் தவிர்க்கவும் உதவியுள்ளது. வணிகங்கள் செலுத்தும் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் அவர்களது சந்தா தொகையில் இருந்து 100 மடங்கு முதலீட்டின் மீதான லாபம் இருப்பதாக இந்த ஸ்டார்ட் அப் மதிப்பிடுகிறது.


ஆரம்பகட்டத்தில் சரியான குழுவை உருவாக்குவது மிகப்பெரிய சவால்களில் ஒன்று என சித் தெரிவித்தார். தொழில்நுட்பம், ஆய்வு, வணிக மேம்பாடு போன்ற பிரிவுகளுக்கான சரியான நபர்களை ThoughtBit தேடி வருகிறது.

”ஒத்த சிந்தனையுடைய, கடினமாக உழைக்கக்கூடிய, ஸ்டார்ட் அப் மனநிலை கொண்டவர்களைக் கண்டறிவது சவால் நிறைந்தாகவே உள்ளது,” என்றார்.

தற்சமயம் இந்த ஸ்டார்ட் அப் குழுவில் ஆறு நபர்கள் உள்ளனர். இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ளது. இந்த முயற்சிகள் மூலம் சிறு வணிகங்களுக்கு பலன் கிடைக்கும் எனவும் சிறு, குறு, மற்றும் நடுத்தர வணிகங்கள் துறை ஊக்குவிக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.


ThoughtBit அடுத்த ஆறாண்டுகளில் சீட் நிதி உயர்த்தவும் வளைகுடா நாடுகளில் விரிவடையவும் திட்டமிட்டுள்ளது. 2020ம் ஆண்டில் 500 சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை இணைத்துக்கொள்ளவும் என்டர்பிரைஸ்டெக், அனாலிடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தவும் இந்த ஸ்டார்ட் அப் திட்டமிட்டுள்ளது.


தற்போது இந்நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள பட்டயக் கணக்கியல் நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் மார்கெட்டிங் நிபுணர்கள் உடன் பணியாற்றி வருகிறது.

இந்த ஸ்டார்ட் அப்’பில் இதன் நிறுவனர்கள் 25 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளனர். எனவே இந்நிறுவனம் தற்போது சுயநிதியில் இயங்கி வருகிறது. ThoughtBit நிதியாண்டு இறுதியில் லாபமோ நஷ்டமோ இல்லாத நிலையை எட்ட திட்டமிட்டுள்ளது. தயாரிப்பை உருவாக்கவும் வாடிக்கையாளர்கள் குறித்த ஆய்விற்கு பெரும்பாலான மூலதனம் பயன்படுத்தப்பட்டது.

Tally Solution நிறுவனத்திடமிருந்தும் அரசாங்க வலைதளங்களில் இன்வாய்ஸ்களை பதிவேற்றம் செய்தோ அல்லது பட்டயக் கணக்காளர் மூலமோ வரி தாக்கல் செய்யும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்தும் இந்த ஸ்டார்ட் அப் போட்டியை சந்திக்கிறது. ClearTax, Intuit போன்ற பெரிய நிறுவனங்கள் சிறு மற்றும் நடுத்தர வணிக பிரிவில் அதிகம் செயல்படவில்லை.


ThoughtBit நாஸ்காம் ஸ்டார்ட் அப் திட்டத்தின் உறுப்பினர். சென்னை டைடல் பார்க்கில் உள்ள நாஸ்காம் கிடங்கு வளாகத்தில் இருந்து செயல்படுகிறது.

ThoughtGST சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான எங்களது முதல் பிராடக்ட் ஆகும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதித்தொழில்நுட்பம் உருவாக்குவதில் கவனம் செலுத்த உள்ளோம். அதிகம் செயல்படாத இந்தப் பிரிவில் தரவுகள் சார்ந்த தீர்வுகளை அறிமுகப்படுத்த உள்ளோம்,” என்றார் சித்.

ஆங்கில கட்டுரையாளர்: அன்யா ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India