வேலை இழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முன்வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்!

வேலை இழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முன்வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்!

Tuesday April 23, 2019,

3 min Read

ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவன செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது அந்நிறுவனத்தின் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தான். நிறுவன ஊழியர்கள் கேள்விக்குறியான எதிர்காலத்துடன் கண் கலங்கி நிற்கும் சூழலில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சில வேலைவாய்ப்பு மூலம் நேசக்கரம் நீட்டியுள்ளன.

தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடந்த சில மாதங்கள் கடன் சுமை உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கித்தவித்து வந்த நிலையில் கடந்த வாரம் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது.

___________________________________________________________________________________________________________

இதையும் படிங்க: செயற்பாடுகள் தற்காலிக நிறுத்தம்: ஜெட் ஏர்வேஸ் எதிர்காலம் என்ன?

____________________________________________________________________________________________________________

நிறுவனம் தற்காலிகமாகவே செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தாலும், தற்போதுள்ள நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மீண்டும் பறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என கருதப்படுகிறது. பிரச்சனையில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் வேறு நிறுவனத்தால் வாங்கப்பட்டால் மட்டுமே தப்பிப் பிழைக்கும் எனும் நெருக்கடியில் உள்ளது.

எனினும் கடன் சுமையில் தள்ளாடும் நிறுவனத்தை வேறு எந்த நிறுவனம் வாங்க முன்வரும் என்று தெரியவில்லை என்பதால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அதைவிட முக்கியமாக ஜெட் ஏர்வேசின் 20 ஆயிரத்திக்கும் மேற்பட்ட ஊழியர்களின் நிலை தான் மிகவும் கவலைக்குறியதாக இருக்கிறது.

நிறுவன ஊழியர்களுக்கு ஏற்கனவே பல மாத சம்பள பாக்கி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், நிறுவனம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கி உள்ளது.

ஜெட் ஏர்வேசின் இழப்பு போட்டி நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஜெட் ஏர்வேஸ் விமானிகள் உள்ளிட்ட பணியாளர்கள் பலருக்கு போட்டி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், விமானிகள் உள்ளிட்ட ஜெட் ஏர்வேசின் 500 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சில ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களூக்கு வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளன. கியூர்ஃபிட் (Curefit) என்ற உடல்நலம் மற்றும் ஆரோக்கிய வழிமுறை ஸ்டார்ட் அப் நிறுவன இணை நிறுவனர் அங்கித் நகோரி, ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தங்களின் பொருத்தமான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என டிவிட்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

“ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சோகமான நிகழ்வுகளுக்கு இடையே, பல ஊழியர்கள் புதிய வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இவர்களில் சிலரை நாங்கள் பணிக்கு அமர்த்திக்கொள்ள விரும்புகிறோம். வேலைவாய்ப்பில் ஆர்வம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம், அல்லது மற்றவர்களை பரிந்துரைக்கலாம் @curefit.com என அவர் தெரிவித்துள்ளார்.”

தொடர்ந்து பைக் ரெண்டல் நிறுவனமான ‘bounce'ன் இணை நிறுவனர் விவேகானந்தாவும் இதே போல வேலைவாய்ப்புக்கான அழைப்பு விடுத்திருந்தார்.

“நாங்களும் ஒரு சிலரை வேலைக்கு நியமிக்க விரும்புகிறோம். நீங்கள் இத்தனை ஆண்டுகள் எங்களை பறக்க வைத்தீர்கள். வேகமாக வளரும் ஸ்டார்ட் அப்’பில் பணியாற்ற விரும்பும் எவருக்கும் இது பரஸ்பரம் நலன் பயக்கும் என எதிர்பார்க்கிறேன்,” என குறிப்பிட்டிருந்தார்.

ஜெட் ஏர்வேஸ் போன்ற வர்த்தக நிறுவனத்தில் அதிக சம்பளத்திற்கு பணியாற்றியவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணியாற்ற முன்வருவார்களா? என்பது தெரியவில்லை என்றாலும், எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வேலைவாய்ப்புடன் வரவேற்பது நிச்சயம் வேலை இழந்து நிற்கும் ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வேலைவாய்ப்புடன் நேசக்கரம் நீட்டுவது இது முதல் முறை அல்ல. 2014 ல் யாஹு நிறுவனத்தில் பொறியாளர்கள் நீக்கப்பட்ட போது, ஜோமேட்டோ நிறுவன இணை நிறுவனர் தீபேந்தர் கோயல், வேலைவாய்ப்பை உணர்த்தும் டிவிட்டர் செய்தியை வெளியிட்டு அனைவரது பாராட்டையும் பெற்றார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களாக வளர்ந்து வருவதை உணர்த்துவதாக இந்த நிகழ்வுகள் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.

பொதுவாக நாட்டில் ஐடி துறை தான் அதிக வேலைவாய்ப்பை அளிப்பதாக கருதப்படுகிறது. எனினும் பல்வேறு காரணங்களினால் அண்மை ஆண்டுகளில் ஐடி நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் தேங்கியுள்ளன. இந்நிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி வருகின்றன.

2018 ம் ஆண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 1.7 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்திக் கொண்டதாகவும் 40 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகவும் நாஸ்காம் அறிக்கை தெரிவிக்கிறது. இ-காமர்ஸ் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மந்தமாகி இருந்தாலும் போதுவாக வேலைவாய்ப்பு வளர்ச்சி ஸ்டார்ட் அப் துறையில் நன்றாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

மேலும் இந்தியாவில் தற்போது 22 யூனிகார்ன் எனப்படும் பிரம்மாண்டமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி இருப்பதும் வேலைவாய்ப்புக்கான உகந்த சூழலை உருவாக்கியுள்ளது. பெங்களூருவைச்சேர்ந்த பணியாளர் நிறுவனம் இந்தியாவில் பல துறைகளில் யூனிகார்ன்கள் இருப்பதாகவும், இவை 60,000 நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூன்று லட்சம் புதிய வேலை வாய்ப்பை உருவாக்க வாய்ப்பிருப்பதாக ரான்ஸ்டாண்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழில்நுட்பம், இ-காம்ரஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளில் பிரதானமாக உருவானாலும், அண்மைக் காலங்களில் தொழில்நுட்பம் அல்லாத பல துறைகளில் ஸ்டார்ட் அப்கள் உருவாகி வருவதாக இதன் அறிக்கை தெரிவிக்கிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நேரடி வேலைவாய்ப்புடன் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றன என கருதப்படுகிறது.

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்; சைபர்சிம்மன்