Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மேற்கு வங்கம், கேரளா, அசாமில் ஆளும் கட்சிக்கு வெற்றி முகம்; புதுவையில் பாஜக கூட்டணி முன்னிலை!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 4 மணி நிலவரப்படி மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியும், கேரளாவில் பினராயி விஜயனும் வெற்றி முகம் கண்டுள்ளனர்.

மேற்கு வங்கம், கேரளா, அசாமில் ஆளும் கட்சிக்கு வெற்றி முகம்; புதுவையில் பாஜக கூட்டணி முன்னிலை!

Sunday May 02, 2021 , 3 min Read

கடுமையான கொரோனா தொற்று காலத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய பலப்பரிட்சையாக.பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தொகுதிகளுக்கு ஏற்ப பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மேற்குவங்கம்

மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்திற்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரி மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது.


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சுவேந்து அதிகாரி உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் பாஜகவிற்கு கட்சி மாறியதற்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டது.


நிலக் கையகப்படுத்துதலை எதிர்த்து போராட்டம் நடந்த நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்த அதிகாரியும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருக்கும் இடையே வாக்கு எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. மம்தா பானர்ஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்காவிடில் அரசியலை விட்டே விலகுவதாக சுவேந்து அதிகாரி தெரிவித்திருக்கும் நிலையில், நந்திகிராம் தொகுதியில் தொடக்கத்தில் பெரும் பின்னடைவை சந்தித்த மம்தா பானர்ஜி அதன்பிறகு எழுச்சி கண்டு முன்னிலை பெற்ற நிலையில், தற்போது 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியை வீழ்த்தியுள்ளார்.


மேலும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவிலேயே உள்ளன.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 146 இடங்களில் முன்னிலை வகிப்பதோடு 65 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளன. பாஜக 63 இடங்களில் முன்னிலை வகிப்பதோடு 16 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி செல்லும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

Mamta

கேரளா

கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜனதா இடையே பலத்த போட்டி நிலவியது. 


4 மணி முன்னிலை நிலவரப்படி இடதுசாரி ஜனநாயக முன்னணி 30 இடங்களில் முன்னிலையிலும், 69 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 22 இடங்களில் முன்னிலையும், 19 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளன.


பாஜக 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு சாதகமான முன்னிலை மற்றும் வேட்பாளர்களின் வெற்றியும் உள்ளதால் அங்கு மீண்டும் ஆளும் கட்சியின் ஆட்சியே தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அசாம்

அசாமில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தலைவராக இருந்த தருண் கோகாய் மரணத்திற்குப் பிறகு கடந்த 2016ம் ஆண்டில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது பாஜக.


2021 தேர்தலில் பாஜக அங்கு ஆட்சியை தக்க வைக்கும் நிலையே ஏற்பட்டுள்ளதாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதோடு, 7 தொகுதிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆளும் பாஜக கூட்டணி 53 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதோடு 19 இடங்களில் வெற்றிக்கனியையும் பறித்திருக்கிறது.

புதுச்சேரி

யூனியன் பிரதேசமான புதுவையில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்திற்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுவை மாவட்டத்தில் 23 தொகுதிகளும், காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதிகளும், கேரள பரப்பில் அமைந்திருக்கும் மாஹே மற்றும் ஆந்திர பரப்பில் அமைந்திருக்கும் யானம் ஆகிய இடங்களில் தலா ஒரு தொகுதியையும் கொண்டுள்ளது.

Rangasamy

சட்டமன்ற தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சில முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் அங்கே காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளிலும், திமுக 14 தொகுதிகளிலும், விசிக ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது.


என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டணியில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இடம் பெற்றுள்ளன. என். ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டது. 4 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களில் வெற்றியும், 3 இடங்களில் முன்னிலையிலும் உள்ளன. பாஜக – என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களில் வெற்றியும், 2 இடங்களிலும் முன்னிலையும் பெற்றுள்ளன.