தமிழக தேர்தல் 2021: திமுக+கூட்டணி- 137 அதிமுக+கூட்டணி- 95; ஏற்ற இறக்கங்களில் நட்சத்திர வேட்பாளர்கள்!
தமிழக தேர்தல் நிலவரம்!
தமிழக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வெளியாகி வருகின்றன. இந்த முறை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்று பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். தமிழகத்தில் இரு பெரிய தலைவர்களான மு.கருணாநிதி மற்றும் ஜெ.ஜெயலலிதா இல்லாத இத்தேர்தல் முடிவுகள் எப்படி வரப்போகிறது என கணிக்கமுடியாத நிலையிலேயே இருந்தது.
இந்நிலையில், இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை விவரங்கள் வெளிவரத்தொடங்கியது. அதில், 3 மணி நிலவரப்படி,
திமுக இதுவரை 117 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. திமுக + கூட்டணி தற்போது 137 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
அதிமுக-84 இடங்களிலும், பா.ஜ.க- 5 இடங்களிலும், பா.ம.க- 6 இடங்களிலும், மொத்தமாக அதிமுக கூட்டணி- 95 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது என தேர்தல் ஆணயத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் முன்னேற்றம்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி தமிழகம் பெரும்பாலான தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்து வருகின்றன. எனினும் அக்கட்சியின் தலைவர் சீமான் தோல்வி முகத்தில் இருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம்!
மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த தேர்தலில் 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து வெற்றிமுகத்தில் இருந்து வருகிறார். அவரை எதிர்த்து இரு பெரிய கட்சிகளின் பிரமுகர்களான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயூரா ஜெயகுமார், பாஜக கட்சியைச்சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன், இருவரும் மாறி, மாறி இரண்டாம் இடத்தில் வந்து கொண்டிருக்கின்றனர்.
பின்னடைவை சந்திக்கும் பிரபலங்கள்!
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் எம்.சி.சம்பத், நாம் தமிழர் கட்சி சீமான், அமமுக தலைவர் டிடிவி தினகரன், வேல்முருகன், போன்ற பல பிரபலங்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த தேர்தல்களைப் போலவே இந்த தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. கோவை மாவட்டத்தில் 8 தொகுதிகள், திருப்பூர் மாவட்டத்தில் 5 தொகுதிகள், நீலகிரியில் மூன்று தொகுதிகள், ஈரோட்டில் 3 தொகுதிகள் என கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கை ஓங்கியே இருக்கிறது.
அதே போல், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.