4 ஆண்டுகளில் இல்லாத பங்குச்சந்தை வீழ்ச்சி - பில்லியன்களை இழந்த அம்பானி, அதானி!
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆன கவுதம் அதானியின் சொத்து மதிப்பில் 24.9 பில்லியன் டாலர்கள் இழக்கப்பட்டன.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளான செவ்வாயன்று (4-6-24) இந்தியப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி கண்டது. இதில் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகிய இந்தியப் பணக்காரர்கள் தங்கள் சொத்துகளில் சில பில்லியன்களை இழந்தனர்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போக பாஜக தனிப்பெரும் கட்சியாக பெரும்பான்மை பெறவில்லை. இதனையடுத்து, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி கடும் சரிவுகளைச் சந்திக்க வர்த்தகம் தொடங்கிய 15 நிமிடங்களிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக செய்திகள் அலறின.
இதில் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆன கவுதம் அதானியின் சொத்து மதிப்பில் 24.9 பில்லியன் டாலர்கள் இழக்கப்பட்டன. இதனால் அவரது சொத்து மதிப்பு 97.5 பில்லியன் டாலர்களாக சரிவு கண்டது. அதே போல், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9 பில்லியன் டாலர்கள் சரிவு கண்டு 106 பில்லியன் டாலர்களாக ஆனது.
பங்குச்சந்தையின் பெரும் சரிவில் அதானி குழுமத்தின் பங்குகள் 18% சரிவு கண்டன. இதற்கு முந்தைய 3-4 வர்த்தக அமர்வில் நல்ல லாபம் கண்ட அதானி குழுமப் பங்குகள் திடீர் சரிவை செவ்வாய்க் கிழமையன்று சந்தித்தது. திடீர் சரிவினால் முதலீட்டாளர்களின் கணிப்புகள் பொய்த்துப் போயின.
இதனையடுத்து, பதற்றத்தில் வந்த வரை லாபம் என்று பங்குகளை விற்கத்தொடங்கினர். இதனை ‘பேனிக் செல்லிங்’ என்பார்கள். இதனால், அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் வீழ்ச்சியடைந்து ரூ.10 லட்சம் கோடியை கபளீகரம் செய்தது.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பும் 8.99 பில்லியன் டாலர் சரிவைக் கண்டது. அவரது நிகர சொத்து மதிப்பு $106 பில்லியன் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார்.
நேற்றைய நிலவரத்தைக் காட்டிலும் இன்று பங்குச் சந்தை சற்றே நிமிர்ந்துள்ளது சற்று முன் நிலவரப்படி, சென்செக்ஸ் 2303 புள்ளிகள் அதிகரித்து 74,384 புள்ளிகளுடன் உள்ளது, தேசியப் பங்குச் சந்தை நிப்டி 50 குறியீடு 736 புள்ளிகள் அதிகரித்து 22,620.35 ஆக உள்ளது.