லாக்டவுன் தாக்கம் ஆய்வு: 8 தமிழக மாவட்டங்கள் சந்திக்கும் வேலை இழப்பு, கடன், உணவுப் பழக்க மாற்றம்!
தமிழகத்தின் அரியலூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட கிராமங்களில் கொரோனா தாக்கத்தால், மக்களின் உணவு பழக்கம் உள்ளிட்டவற்றில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா கால பொது முடக்கம் காரணமாக, தமிழக கிராமங்களில் மக்களின் உணவுப் பழக்கத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் வருவாய் குறைவு ஆகிய காரணங்களினால், மக்கள் அசைவ உணவை குறைத்துக்கொண்டுள்ளனர் என்பது, கிராமப்புறங்களுக்கான மின் வணிகத்தில் கவனம் செலுத்தி வரும் ‘பூன்பாக்ஸ்’ (Boonbox) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின் அரியலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, விருதுநகர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பூன்பாக்ஸ் நிறுவனம் எக்கனாமிக்ஸ் கன்சல்டிங் குழுமத்துடன் இந்த ஆய்வை நடத்தியது . 20 முதல் 67 வயதானவர்கள் மத்தியில் ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை மாத வருமானம் உள்ள குடும்பத்தினர் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையான இரண்டாவது லாக்டவுன் காலத்தில் இரு வாரங்களுக்கு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பெரும்பாலான கிராமப்புற வாடிக்கையாளர்கள் பிராண்ட்களை முக்கியமாகக் கருதுவதில்லை என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் விலை மற்றும் பொருட்கள் எளிதாகக் கிடைப்பதை முக்கியமாகக் கருதியுள்ளனர்.
அதே நேரத்தில் தனிநபர் நல பொருட்களில் மட்டும் பிராண்ட் விசுவாசத்தை வெளிப்பட்டுத்தியுள்ளனர். புதுக்கோட்டை, தஞ்சை, விருதுநகர் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் அதிக சதவீதத்தினர் பிராண்ட்களை முக்கியமாக கருதாமல் இருக்கின்றனர்.
பொது முடக்க காலத்தில் வருவாய் குறைந்த நிலையில், கிராம மக்களின் உணவு பழக்கத்திலும் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வு உணர்த்துகிறது.
அசைவ உணவு மற்றும் முட்டை ஆகிய உணவுகள் மீதான தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பதில் அளித்தவர்களில் 89% அசைவ உணவை குறைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். அரியலூர், மதுரை மற்றும் புதுக்கோட்டையில் உள்ளவர்களில் கணிசமானவர்களும் அசைவ உணவை குறைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்களின் முக்கிய உணவு அரிசியாக இருக்கும் சூழலில் மற்றும் பலரும் நீரிழிவு நோயால் அவதிப்படும் நிலையில், உணவில் புரத சமநிலை குறைவது ஆரோக்கிய நோக்கில் சிக்கல்களை உண்டாக்கலாம் என ஆய்வு தெரிவிக்கிறது.
- நுகர்வோர் பொருட்களை மக்கள், வழக்கமான வழிகள் தவிர மாற்று வழிகளிலும் வாங்கத்தயாராக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா சூழல், மக்களின் வாங்கும் பழக்கத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது.
- மக்கள் மளிகைக்கடைகளில் பொருட்களை தொடர்ந்து வாங்கினாலும், ஆன்லைன் மற்றும் இ-காமர்ஸ் மூலம் பொருட்களை வாங்க பலரும் முன்வந்துள்ளனர். ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான காலத்தில் பூன்பாக்ஸ் நிறுவனத்திற்கான ஆர்டர்கள் 100 சதவீதம் அதிகரித்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பொருட்களை ஆன்லைனில் வாங்குவது போலவே, மக்கள் கடன் வசதியையும் அதிகம் நாடத்துவங்கியுள்ளனர் என ஆய்வு தெரிவிக்கிறது. கிராமப்புற மக்களுக்கு ஏற்ற கடன் தீர்வுகளை வழங்க இது வாய்ப்பாக அமைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் உள்ளவர்களில் பலர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதால் மாற்று வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
- புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பதில் அளித்தவர்களில் 73 சதவீதத்தினர் கொரோனா தாக்கத்தால் வேலை இழந்துள்ளனர்.
- மாற்று வேலைவாய்ப்புகளை வழங்குவது அல்லது நிதி உதவி அளிப்பதில் அரசு தரப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஒட்டுமொத்த வாங்கும் பழக்கத்திலும் கொரோனா தாக்கத்தால் மாற்றம் ஏற்பட்டுள்ளதை ஆய்வு தெரிவிக்கிறது.
“இந்த நோய்த்தொற்று நம் வாழும் விதத்தையே மாற்றியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் தனிநபர்கள் தங்கள் வாங்கும் பழக்கத்தை மாற்றி அமைத்துள்ளனர். இந்த மாற்றத்திற்கு கிராமப்புற இந்தியா எப்படி ஈடு கொடுத்துள்ளது என்பதிலேயே எங்கள் ஆர்வம் உள்ளது. இதையே எங்கள் ஆய்வு உணர்த்துகிறது,” என்று பூன்பாக்ஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ராம்சந்திரன் நாமநாதன் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு; சைபர்சிம்மன்