'சுயநிதி வழியில் தொழில்முனைவில் வெற்றி பெறுவது எப்படி?’ - டிவிஎஸ் கேபிடல் கோபால் ஸ்ரீனிவாசன் TechSparks-இல் பகிர்ந்த ஆலோசனைகள்!
தொழில்முனைவு வெற்றிக்கான மற்றொரு அம்சம், அனைவருக்குமான ஜனநாயகமயமான புதுமையாக்கம் என்று கோபால் ஸ்ரீனிவாசன் நம்புகிறார்.
’நிறுவனர் என்ற முறையில், எந்தவித தயக்கமும் இல்லாமல் சுயநிதியில் வர்த்தகத்தை துவங்கும் எண்ணத்தை தழுவிக்கொள்ள வேண்டும்,’ என்று டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியின் 14வது பதிப்பில் பேசிய டிவிஎஸ் கேபிடல் பண்ட்ஸ் தலைவர் கோபால் ஸ்ரீனிவாசன் கூறினார்.
“தொழில்முனைவு என்பது, உங்கள் போட்டியாளரை வென்று, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வர்த்தகத்தை உருவாக்கும் வேட்கையாகும். ஒவ்வொரு கட்டத்திலும், சுயநிதியில் செயல்படுவதில், மூலதனம் மற்றும் மதிப்பை நாடுவதில் தீவிர அழுத்தம் அளிப்பது சாத்தியம்,” என்று யுவர்ஸ்டோரி நிறுவனர், சி.இ.ஓ ஷர்த்தா சர்மாவுடனான உரையாடலில் அவர் கூறினார்.
"எல்லா வெற்றிகரமான நிறுவனங்களுக்கும் பொருந்தும் உண்மை இது- அவர்கள் வாடிக்கையளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமே வெற்றி பெற்றனர். டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனர் என்ற முறையில், 35 ஆண்டுகளுக்கு முன், எந்த ஊழியரும் இல்லாமல் நிறுவனத்தை துவக்கினேன். அதன்பிறகு உலகம் நல்லவிதமாக மாறியிருப்பதற்காக உற்சாகம் கொள்கிறேன்,” என்கிறார்.
2007ல் கோபால் ஸ்ரீனிவாசனால் துவக்கப்பட்ட TCF. நிதிச்சேவை மற்றும் பி2பி துறையில் தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகங்களுக்கு ஆதரவு அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
”தற்போது தனது மூன்றாவது தனியார் சமபங்கு நிதியான டிவிஎஸ் ஸ்ரீராம் குழும வளர்ச்சி நிதி 3 மூலம், ரூ.1900 கோடி அளவில் முதலீடு செய்து வருகிறது. இந்த நிதி டிவிஎஸ் குழுமம் மற்றும் ஸ்ரீராம் குழும ஆதரவு பெற்றுள்ளது, என்றார். இந்த தனியார் சமபங்கு முதலீடி நிறுவனம் இதுவரை மூன்று நிதிகள் வாயிலாக ரூ.3,700 கோடி முதலீடு செய்துள்ளது,” என்கிறார் ஸ்ரீனிவாசன்.
தொழில்முனைவு வெற்றிக்கான மற்றொரு அம்சம், அனைவருக்குமான ஜனநாயகமயமான புதுமையாக்கம் என்கிறார்.
“லிமிடெட் பார்ட்னர்களின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போவது ஒரு முக்கியமான அம்சமாகும். ஏனெனில், அமெரிக்கா அல்லது சிலிக்கான் வேலி மாதிரியில் வெற்றி பெற்ற வெளிநாட்டு பென்ஷன் நிதிகள், இந்திய தொழில்முனைவு கனவை முழுமையாக புரிந்து கொண்டு ஆதரிப்பது சவாலானது,” என்று வெளிநாட்டில் இருந்து இந்திய ஸ்டார்ட் அப்களுக்கு வரும் நிதி பற்றி பேசும் போது குறிப்பிடுகிறார்.
இதற்கு மாறாக, இந்திய நிதி வாய்ப்புகள் தனித்துவமான வழியாக அமைகின்றன. இதன் மூலம் நிறுவனர்கள் தங்கள் தொலைநோக்கின் பிரதிபலிப்பை உணர்ந்து, பாரதிய பண்புகளை தழுவிக்கொள்ளலாம் என்கிறார். இதன் மூலம் தங்கள் வர்த்தகங்களில் மேலும் பரவலான நம்பிக்கைகள் சாத்தியமாகும்.
“இந்திய நிதி, முதலீட்டாளர்கள் உங்கள் மீது நம்பிகை கொள்ள வைக்கிறது, உங்கள் செயல்பாட்டு முறையில் நம்பிக்கை கொள்ள வைக்கிறது,” என்கிறார்.
கோபால் ஸ்ரீனிவாசன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முனைவு பாதையில் பயணிக்கிறார். தொழில்நுட்பம், நிதிச்சேவைகள் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் துறைகளில் எட்டு நிறுவனங்கள் துவங்கப்பட ஆதரவு அளித்துள்ளார்.
ஆங்கிலத்தில்: புவனா காமத் | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan