தெரிந்த ப்ராண்ட்; தெரியாத கதை: 4லட்சத்துக்கு வாங்கிய Bisleri இன்று ரூ.7,000 கோடி ப்ராண்ட் ஆனது எப்படி?
டாடா குழுமத்தால் விலைக்கு வாங்கப்பட இருக்கும் மினரல் வாட்டர் பிராண்ட் பிஸ்லரி, 4 லட்சத்தில் இருந்து 7,000 கோடி மதிப்புள்ள பிராண்டாக வளர்ந்த வெற்றிக்கதை.
இந்தியாவை பொருத்தவரை மினரல் வாட்டர் என்றால் அது 'பிஸ்லரி' (Bisleri) தான். மினரல் வாட்டர் சந்தையில் செல்வாக்கு மிக்க பிராண்ட்கள் பல இருந்தாலும், இந்த பிரிவின் அடையாளமாக பிஸ்லரி கருதப்படுகிறது.
மினரல் வாட்டர் பிரிவில் மட்டும் அல்லாது இந்திய வர்த்தக உலகின் புகழ் பெற்ற பிராண்டாக அமைந்துள்ள பிஸ்லரி, இத்தாலியில் இருந்து இந்தியா வந்த பிராண்ட் என்பது வியப்பை அளிக்கலாம்.
ஆம், வெற்றிகரமான பிராண்ட்களை உருவாக்கியவராக அறியப்படும் ரமேஷ் சவ்கான், 1969ம் ஆண்டு இத்தாலி நிறுவனத்திடம் இருந்து பிஸ்லரி நிறுவனத்தை வாங்கினார். அப்போதைய மதிப்பில் ரூ.4 லட்சத்திற்கு சவ்கான் விலைக்கு வாங்கிய ’பிஸ்லரி’யின் இன்றைய மதிப்பு ரூ.6,000 முதல் 7,000 கோடி எனக் கருதப்படுகிறது.
பிஸ்லரி இந்த அளவு வளர்ச்சி பெற்றது எப்படி? அதன் வெற்றி வரலாற்றை திரும்பி பார்க்கலாம்.
Bisleri - மாபெரும் ப்ராண்ட் வளர்ச்சிக்கதை
இளைஞரின் கனவு
இத்தாலியைச் சேர்ந்த பெலிஸ் பிஸ்லரி (Felice Bisleri) என்பவர் 1965ம் ஆண்டு பிஸ்லரி நிறுவனத்தை துவக்கினார். அதே ஆண்டு பிஸ்லரி நிறுவனத்தை அவர் இந்தியாவுக்கும் கொண்டு வந்தார். 1969ல் ரமேஷ் சவ்கான் எனும் 28 வயது இளைஞர் பிஸ்லரி நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.
பிஸ்லரி நிறுவனத்திற்காக அவர் கொடுத்த விலை ரூ.4 லட்சம்.
சவ்கான் அப்போது பார்லே எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் தான் அவர் கோல்ட்ஸ்பாட், தம்ஸ் அப், லிம்கா போன்ற செல்வாக்கு மிக்க குளிர்பான பிராண்ட்களை உருவாக்கினார்.
இந்த குளிர்பான சந்தையில் சவ்கானின் நிறுவனம் கொடி கட்டிப் பறந்ததும், சர்வதேச ஜாம்வான்களான கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களால் கூட அந்த செல்வாக்கை அசைக்க முடியவில்லை என்பதும் இன்றளவும் வியக்க வைக்கும் வர்த்தக வெற்றிக்கதையாக இருக்கிறது.
1993ம் ஆண்டு, சவ்கானின் குளர்பான பிராண்ட்களை கோக் நிறுவனம் ரூ.186 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
சோடாவைத்தேடி…
தம்ஸ் அப் உள்ளிட்ட பிராண்ட்களை கோக் நிறுவனத்திற்கு விற்பனை செய்த அதே ஆண்டு தான், சவ்கான் மினரல் வாட்டர் பக்கம் கவனத்தை திருப்பினார். அதுவரை பிஸ்லரி பிராண்டை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
உண்மையில், Bisleri பிராண்டை அவர் விலைக்கு வாங்கிய போது கூட அதன் மினரல் வாட்டர் வர்த்தகத்தை அவர் பொருட்படுத்தவில்லை. குளிர்பான சந்தையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர், தன்வசம் சோடா பிராண்ட் எதுவுமே இல்லை என்பதை உணர்ந்தார்.
பிஸ்லரி நிறுவனம் சோடாவையும் விற்பனை செய்ததால், பிஸ்லரி சோடாவுக்காக தான் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருந்தார்.
சவ்கான் எதிர்பார்த்தது போலவே, பிஸ்லரி சோடாவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக நட்சத்திர ஓட்டல்களில் இருந்து நிறைய ஆர்டர்கள் கிடைத்ததால் பிஸ்லரி சோடா கைகொடுத்ததாக சவ்கான் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
பிஸ்லரி காலம்
இந்த நிலையில் தான், 1990-களில் அவர் பிஸ்லரி மினரல் வாட்டரில் கவனம் செலுத்தத் துவங்கினார். பிஸ்லரி மினரல் வாட்டர் இந்தியாவில் தொடக்கத்தில் கண்ணாடி பாட்டில்களில் அறிமுகம் ஆகியிருந்தது. இரண்டு வகைகளில் விற்பனை ஆகிக் கொண்டிருந்தது.
தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டும் எனும் எண்ணமே நம்ப முடியாததாக இருந்த காலகட்டத்தில் சவ்கான் பிஸ்லரி மினரல் வாட்டர் பிராண்டை உருவாக்கினார்.
ஆரம்ப காலம் பெரும் சவாலாக இருந்தது. மினரல் வாட்டருக்கான சந்தை உருவாகியிராத நிலையில், தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு செல்வதும் சிக்கலாக இருந்தது. போக்குவரத்து நிறுவனங்கள் பாட்டில்களை கொண்டு செல்ல விரும்பவில்லை. இது கடினமான பணியாகவும், லாபம் குறைவானதாகவும் இருந்ததே காரணம்.
எனவே, சவ்கான், தண்ணீர் பாட்டில்களை தனது நிறுவனமே கொண்டு செல்லும் ஏற்பாட்டை கொண்டு வந்தார். இதுவே விநியோக பலமாக அமைந்தது. இன்று பிஸ்லரிக்கு 4,500 விநியோகிஸ்தர்களும், 5,000 டிரக்களும் உள்ளன.
புதிய பிராண்ட்கள்
1990-களில் அறிமுகமான பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய சந்தையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தன. தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் பழக்கமும் பரவலானது. முதலில் ஆரோக்கியம் கருதியும், பின்னர் வசதி கருதியும் மினரல் வாட்டர் விரும்பி வாங்கப்பட்டன.
மினரல் வாட்டர் பயன்பாடு அதிகரித்த நிலையில், அக்வாபீனா, கின்லே போன்ற சர்வதேச பிராண்ட்கள் போட்டிக்கு வந்ததோடு, உள்ளூர் பிராண்ட்களும் எண்ணற்றவை உருவாகின.
மினரல் வாட்டர் சந்தை போட்டி மிக்கதாக உருவானாலும், பிஸ்லரி இந்த பிரிவில் முன்னணியில் விளங்கியது. அதன் வலிமையான பிராண்டும், முன்னோடித் தன்மையும் அசைக்க முடியாததாக இருக்கிறது.
டாடா குழுமம்
மினரல் வாட்டர் சந்தையில் முன்னணி பிராண்டாக இருக்கும் பிஸ்லரியை தற்போது புகழ்பெற்ற டாடா குழுமம் விலைக்கு வாங்க இருக்கிறது. டாடா நிறுவனம் இதற்கு 6,000 முதல் 7,000 கோடி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
எல்லாம் சரி வெற்றிகரமான பிஸ்லரியை சவ்கான் ஏன் டாடா-வுக்கு விற்க வேண்டும்?
இந்த கேள்விக்கான பதில் சவ்கானுக்கு வயதாகிவிட்டது என்பதும், அவரது ஒரே மகளான ஜெயந்தி சவ்கான் இந்நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்துவதில் ஆர்வம் இல்லை என்பதும் தான்.
ரமேஷ் சவ்கானுக்கு 82 வயதாகி தள்ளாமையும் வாட்டுவதால் அவர் நிறுவனத்தை விற்க தீர்மானித்திருக்கிறார்.
”பிஸ்லரியை விற்பது வேதனையான முடிவு என்றாலும், டாடா குழுமம் இந்த பிராண்டை கவனித்துக்கொள்ளும் என நம்புவதாக,” அவர் கூறியிருக்கிறார்.
வாரிசின் பாராமுகம்
சவ்கானின் ஒரே மகளான, ஜெயந்தி சவ்கான் தில்லி, மும்பை மற்றும் நியூயார்க் நகரங்களில் வளர்ந்தவர். அமெரிக்காவில் பேஷன் டிசைன் படித்தவர். பின்னர், இத்தாலிக்கு சென்று பேஷன் கலையை பயின்றார்.
பிஸ்லரி நிறுவனத்தின் துணைத்தலைவராக பொறுப்பு வகிக்கும் ஜெயந்தி, நிறுவன பிராண்டிங், விளம்பரம் மற்றும் அதன் தினசரி செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி தந்தை மேற்பார்வையில் நிறுவனத்தை வளர்த்திருக்கிறார்.
பிஸ்லரியின் புதிய பிராண்ட் தோற்றத்தை உருவாக்கியவர் என்றாலும், 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள வர்த்தகத்தை நடத்துவதில் அவருக்கு விருப்பம் இல்லை என மகள் பற்றி சவ்கான் கூறியிருக்கிறார்.
அதனால், கூடிய விரைவில் பிஸ்லரி நிறுவனத்தை டாடா கன்ஸ்யூமர் பிரிவு கையகப்படுத்தி அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
350 கோடி மாத்திரைகள் விற்று சாதனைப் படைத்த டோலோ-650 : வெற்றி ரகசியம் என்ன?
Edited by Induja Raghunathan