ரூ.300 கோடி விற்றுமுதல் கொண்ட நிறுவனமாக வளர்ச்சி அடைந்த இந்திய நூடுல்ஸ் ப்ராண்ட்!
நூடுல்ஸ் பிராண்டாக 1984-ல் தொடங்கப்பட்ட GD Foods சாஸ், ஊறுகாய், ஜாம் கார்ன் ஃப்ளேக்ஸ் என ஒவ்வொரு தயாரிப்பாக அறிமுகப்படுத்தி 300 கோடி ரூபாய் மதிப்புடையதாக வளர்ச்சியடைந்துள்ளது.
1980-களில் இந்தியாவில் சீன உணவுகளுக்கான தேவை அதிகம் எழுந்தது. வட இந்தியாவில் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் GD Foods நிறுவனத்தைத் தொடங்கினார் பிஎம் சேத். டெல்லியில் ஒரு சிறிய தயாரிப்புத் தொழிற்சாலை அமைத்து நூடுல்ஸ் தயாரிக்கத் தொடங்கினார்.
படிப்படியாக வாடிக்கையாளர்களிடையே பிரபலமான இந்த நிறுவனம், ஊறுகாய், ஜாம், கெட்ச் அப் என 200-க்கும் மேற்பட்ட SKU-க்களுடன் Tops என்கிற பிராண்டின்கீழ் விற்பனை செய்து வருகிறது.
இரண்டாம் தலைமுறை தொழில்முனைவர், ஜிடி ஃபுட்ஸ் துணைத் தலைவர் நிதின் சேத் மிகப்பெரிய விளம்பர உத்திகள் ஏதுமின்றி பரிந்துரைகள் மூலமாகவே இந்த பிராண்ட் வளர்ச்சியடைந்துள்ளது குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

பிஎம் சேத் மற்றும் நிதின் சேத்
இந்தியப் பிரிவினை - வணிக கனவு
1947-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிந்த சமயத்தில் இரு நாடுகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள்.
அந்த சமயத்தில் நிதினின் தாத்தா கோவர்தன் தாஸ் சேத்திற்கு 47 வயது. பாகிஸ்தானில் சைக்கிள் உதிரிபாகங்கள் மற்றும் பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 3 தொழிற்சாலைகளை மூடிவிட்டு அருகில் வசிப்பவரிடம் சாவியை ஒப்படைத்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார். என்றாவது ஒருநாள் அங்கு திரும்பவும் சென்று வணிகத்தை தொடரவேண்டும் என்கிற கனவு அவருக்கு இருந்தது.
இந்தியாவில் சிறு சிறு தொழில் முயற்சியில் ஈடுபட்டாலும் பாகிஸ்தானில் இயங்கி வந்த வணிகத்தின் அளவிற்கு வளர்ச்சியடைய முடியவில்லை.
இவரது இளைய மகன் பிஎம் சேத். தொழில்முனைவில் ஆர்வமிருந்த பிஎம் சேத் படிப்பை முடித்ததும் அப்பாவின் நீண்ட நாள் வணிக ஆசையை நிறைவேற்றத் தீர்மானித்தார்.
பிஎம் சேத் ஆரம்பத்தில் வேறு சில பிரிவுகளில் வணிக முயற்சிகளைத் தொடங்கினார். இருந்தபோதும் இந்தியாவில் அந்த காலகட்டத்தில் சீன உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவை மக்களிடையே பிரபலாக இருந்த காரணத்தால் எஃப்எம்சிஜி பிரிவில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதை உணர்ந்தார்.
சேமிப்புத் தொகையான 20 ஆயிரம் ரூபாய் கொண்டு நூடுல்ஸ் தயாரிப்பிற்கு சிறு தொழிற்சாலை ஒன்றை அமைத்தார். Tops என பிராண்டிற்குப் பெயரிட்டார்.
பிராண்ட் தொடக்கம்
டெல்லியில் சைனீஸ் நூடுல்ஸ் தயாரிப்புப் பணிகளுடன் 1984-ம் ஆண்டு Tops தொடங்கப்பட்டது.
“கிட்டத்தட்ட அதே சமயத்தில் Maggi நிறுவனம் இந்தியாவில் செயல்படத் தொடங்கியிருந்தது. Maggi இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் விற்பனை செய்தது. நாங்கள் சைனீஸ் நூடுல்ஸ் வழங்கினோம். வாடிக்கையாளர்களிடம் எங்கள் தயாரிப்பைக் கொண்டு சேர்ப்பது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. தயாரிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு மக்களிடம் விளம்பரப்படுத்தினோம்,” என்று நினைவுகூர்ந்தார் நிதின்.
விரைவில் Tops நூடுல்ஸ் தேவை அதிகரித்தது. இந்தியாவில் சீன உணவு வகைகள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் பிரிவு சார்ந்த தரமான தயாரிப்புகள் சந்தையில் இல்லை என்பதை உணர்ந்த பிஎம் சேத் Tops சாஸ் மற்றும் வினிகர் தயாரிப்புகளை 1990-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
90-களின் மத்தியில் இந்த பிராண்ட் தயாரிப்புத் தொகுப்பில் ஊறுகாய் சேர்க்கப்பட்டது.
1996-ல் அப்பாவுடன் வணிக செயல்பாடுகளில் இணைந்து கொண்டார் நிதின். உலகமயமாக்கல் கொள்கைகள் அமலுக்கு வந்த அந்த காலகட்டத்தில் இந்தியர்களிடையே மேற்கத்திய கலாச்சாரத்தின் ஈர்ப்பு அதிகமிருந்தது. காலை உணவு வகைகள் பிரிவில் அதிக வாய்ப்புகள் இருப்பதை கவனித்து ஜாம், கார்ன்ஃப்ளேக்ஸ், இன்ஸ்டண்ட் மிக்ஸ் போன்ற வகைகளை Tops சந்தையில் அறிமுகப்படுத்தியது.
36 ஆண்டுகளில் ஜெல்லி, கஸ்டர்ட் பவுடர், கேக் மிக்ஸ், சாக்கோ ஃப்ளேக்ஸ் என ஏராளமான வகைகளை இந்த பிராண்ட் வழங்கி வருகிறது.

இந்தியா முழுவதும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தக அவுட்லெட்களில் Tops தயாரிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் 300 கோடி ரூபாய்.
வாடிக்கையாளர்களின் பரிந்துரை மூலம் வளர்ச்சி
தரமான தயாரிப்புகளைக் குறைந்த விலையில் வழங்குவதே Tops பிராண்டின் தனித்துவமான அம்சம் என்கிறார் நிதின். இதனால் விளம்பரங்களில் பெரிதாக செலவிடாமல் திருப்தியடைந்த வாடிக்கையாளர்களின் பரிந்துரைகள் மூலமாகவே இந்த பிராண்ட் வளர்ச்சியடைந்துள்ளது.
”இன்று வரை வாடிக்கையாளர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரைப்பதன் பேரிலேயே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது,” என்கிறார்.
Tops தயாரிப்புகளின் அளவுகளைப் பொருத்தவரை வீடுகள், உணவகங்கள், விருந்தோம்பல் பிரிவு என அவரவர் தேவைக்கேற்ப பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ராஜஸ்தான் உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் என மொத்தம் ஐந்து தொழிற்சாலைகளில் GD Foods தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூலப்பொருட்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே வாங்கப்படுகின்றன.
விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகிறது
Tops பிராண்ட் விவசாயிகளை அங்கீகரித்து முக்கியத்துவம் அளிக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை வாங்குகிறது.
“700 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் கொண்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இணைந்துள்ளோம். அடுத்த இரண்டாண்டுகளில் இதர மூலப்பொருட்களை வாங்கும் வகையில் 5,000 ஏக்கர் விளைநிலங்களாக விரிவடைய திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் நிதின்.
போட்டி மற்றும் சவால்கள்
இந்நிறுவனம் மூலப்பொருட்களுக்கான சீசன் இருக்கும்போது மொத்தமாக வாங்கிவிடுகிறது. இதனால் ஒரே நேரத்தில் அதிகளவில் முதலீடு செய்யவேண்டியுள்ளது. இது முக்கிய சவாலாகக் கருதப்படுகிறது.
இன்றைய பரபரப்பான உலகில் வாடிக்கையாளர்கள் புதுமையான தயாரிப்புகளை எதிர்நோக்குகிறார்கள். போட்டி நிறைந்த இந்தச் சந்தையில் தேவையை உணர்ந்து அதற்கேற்ப புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது அடுத்த சவால் என்கிறார் நிதின்.
இந்திய உணவு சந்தையில் ஏராளமான தரநிலைகளுக்கு இணக்கமாக செயல்படவேண்டும். வளர்ந்து வரும் நாடு என்பதால் இந்தத் துறை சார்ந்த விதிமுறைகள் அவ்வப்போது மாறுபடும். எனவே அவ்வப்போதைய விதிகளுக்கு ஏற்ப செயல்பாடுகளை மாற்றியமைப்பதற்கு கணிசமான நேரமும் பணமும் செலவிடவேண்டி வரும் என்கிறார் நிதின்.
வருங்காலத் திட்டங்கள்
வரும் நாட்களில் கூடுதலாக 100 SKU அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக நிதின் தெரிவிக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று சூழலில் மக்களின் சமீப கால தேவைகளைக் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான தயாரிப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா