Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சுஷ்மா ஸ்வராஜ் (1952-2019)- சிறந்த பெண் தலைவரின் அரசியல் பயணம்...!

சுஷ்மா ஸ்வராஜ் (1952-2019)- சிறந்த பெண் தலைவரின் அரசியல் பயணம்...!

Wednesday August 07, 2019 , 3 min Read

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு (06/08/19) காலமானார்.

Sushma

வெளியுறவுத்துறை அமைச்சராகவும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல்நலக்குறைவுக் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற 2019 மக்களவை தேர்தலில் கூட போட்டியிடவில்லை.


முக்கிய பெண் தலைவர்களுள் ஒருவர் சுஷ்மா ஸ்வராஜ், எப்பொழுதும் ட்விட்டரில் இணைப்பில் இருக்கும் இவர் இறுதியாக காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பதிவிட்டிருந்தார்.

"நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்..." இதுவே இவரது இறுதி ட்வீட்டாக மாறியது.

சுஷ்மா ஸ்வராஜ் – ஆரம்பக் காலம்

1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஹரியானாவில் பிறந்தார் சுஷ்மா ஸ்வராஜ். பொலிடிக்கல் சைன்ஸ் மற்றும் சட்டம் படித்த இவர், தன் பட்டப்படிப்புக்கு பின் 1973ல் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.


1975 இல் இந்திரா காந்தி ஆட்சியில் எமெர்ஜென்ஸியை எதிர்த்து போராடிய சுஷ்மா அதன் பின் ஜனதாக்கட்சியில் சேர்ந்து முக்கிய பதவியை வகித்தார். அதன் பின் முழு மூச்சாக தன் அரசியல் வாழ்க்கையை துவங்கிய சுஷ்மா 25 வயதிலேயே தனது முதல் தேர்தலில் வெற்றிப்பெற்று ஹரியானா மாநில அமைச்சராக பதவி ஏற்றார்.

1977–82 மற்றும் 1987–90 என தொடர்ந்து இரண்டு முறையும் ஹரியானா மாநில அமைச்சராக பதவியேற்றார்.

1984ல் ஜனதாக்கட்சியின் உறுப்பினர்களால் துவங்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கட்சியின் செயலாளர் பொறுப்பை ஏற்று முன்னேறி பொதுச் செயலாளர் ஆனார். அதன்பின் சுஷ்மாவின் அரசியல் வாழ்க்கையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு 1980, 1984 மற்றும் 1989 என மூன்று முறையும் காங்கிரஸுக்கு எதிராக மக்களவை தேர்தலில் தோல்வியுற்றார்.


அரசியலில் வெற்றிப்பயணம்


அதன்பின் 1990ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார். அதனை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு இந்தியவின் 11வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 1998 மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி டெல்லியின் முதல் பெண் முதல் அமைச்சராக பதவியேற்றார். ஆனால் அதே ஆண்டே தனது பதவியை விட்டு விலகி 12வது மக்களவையில் ஒளிப்பரப்புத் துறை அமைச்சராக பதவியேற்றார். ஒளிப்பரப்புத் துறை, குடும்ப நலம், வெளியுறவுத் துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.


2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.


வெளியுறவுத் துறை அமைச்சர்:


பல அமைச்சரவையில் பல பொறுப்புகளை அவர் ஏற்றிருந்தாலும் மக்களிடையில் அவரை இன்றும் நினைவில் வைத்திருப்பது அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றியப்போது தான். 27 மே 2014 முதல் 16 பிப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார மந்திரி பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா ஸ்வராஜ் ஆவார்.


வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்குத் தேவையான உதவியை மிக விரைவில் செய்து கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் இவர். சமூக வலைதளங்களில், இந்தியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதோடு ட்விட்டர் மூலம் பதிவிடப்படும் புகார்களுக்கும் உடனடியாக தீர்வுக்கண்டு உதவினார். இதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றார் சுஷ்மா.


23 வயதில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி 67 வயதில் தனது இறுதி மூச்சு வரை சிறந்த அரசியல் தலைவராக வாழ்ந்துள்ளார் சுஷ்மா ஸ்வராஜ். இவரது இழப்பு பாஜக கட்சிக்கு பெரிய இழப்பு, இவரது இழப்புக்கு பல அரசியல் தலைவர்கள் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,

"இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது," என பதிவிட்டிருந்தார்.

அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஸ்வராஜ் கெளஷல் என்ற கணவரும் பான்சுரி என்ற மகளும் உள்ளனர். இந்திய அரசியல் தலைவர்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.