கோவையில் பிச்சை எடுக்கும் ஸ்வீடன் தொழிலதிபர்…

இடுப்பில் துண்டு, வேட்டியுடன் நடமாடும் இவருக்கு ஏன் இந்த நிலை? காரணத்தை கேட்டா அசந்துடுவீங்க...
70 CLAPS
0

நீண்ட முடி, பள பள தேகம், ஆஜானுபாகுவான உடலமைப்பு என தோற்றத்தில் செல்வந்தர் கலையோடு கோயம்புத்தூரின் ரயில் நிலையம் அருகே வலம் வருகிறார் வெளிநாட்டவர் ஒருவர்.

வெளிநாட்டினர் என்றாலே கையில் கேமரா, சீவிங் கம் என்று கெத்தாக ஊரைச் சுற்றி பார்ப்பார்கள். ஆனால் இவர் சற்று வித்தியாசமாக இடுப்பில் 4 முழம் வேஷ்டி, ஒரு துண்டு, மேலாடை எதுவுமின்றி பாதசாரிகளிடம் கையேந்தி காசு வாங்கிக் கொண்டிருக்கிறார்.

பட உதவி: தினமலர்

யார் இவர் என்று தெரிந்து கொள்ள எல்லோருக்குமே ஆர்வம். கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், போலீசார் என பலர் இவரைப்பற்றி விவரம் கேட்டுள்ளனர். அவர் கூறிய விஷயம் பலரையும் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

ஆம் அன்றாடத் தேவைகளுக்காக மக்களிடம் கையேந்தி நிற்கும் இவரின் பெயர் கிம். ஸ்வீடன் நாட்டு பிரஜையான கிம் மிகப்பெரிய தொழிலதிபரும் கூட. சில மாதங்களுக்கு முன் தன் மனைவியுடன் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்திருக்கிறார்.

இந்தியாவின் பல பகுதிகளில் சுற்றித் திரிந்தவர் கோவையில் உள்ள ஈஷா யோக மையம் குறித்துக் கேள்விப்பட்டு, கோவை வந்திருக்கிறார். ஈஷா மையத்தில் சில நாட்கள் தங்கி இருந்தவர், அங்கிருந்தும் வெளியேறி கோவை ரயில் நிலையம், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று பிச்சையெடுத்து வருகிறார்.

ஏன் இப்படி கையேந்தி வாழ்க்கை நடத்துகிறார் என்று கிம்மிடம் கேட்டவர்களுக்கு அவரின் பதில் இது தான்,

'என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. என் சொந்த நாட்டில் பல ஏழை மக்களுக்கு உதவிகளை செய்திருக்கிறேன். எனினும் எனக்கு அதிலெல்லாம் மன நிம்மதி கிடைக்கவில்லை. மேலும் என்னிடம் நான் தான் என்ற அகந்தை குணமும் இருந்தது. அதனால், எனது ஆன்மிக குருவின் அறிவுரைப்படி, பிச்சையெடுத்து வாழ்கிறேன். இதில் எனக்கு மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது, என்கிறார்.

இந்தியர்கள் மிகவும் நல்ல மனம் படைத்தவர்களாக இருக்கின்றனர், அவர்களுக்கு வணக்கம் சொன்னால் பதிலுக்கு வணக்கும் சொல்கின்றனர். சிலர் பணம் கொடுத்துவிட்டு செல்கின்றனர், என்னுடைய தேவைக்குப் போக எஞ்சிய பணத்தை ஈஷா மைய சேவைக்கு அளித்துவிடுவேன் என்று சிரித்த முகத்துடன் கூறுகிறார்.

3 மாத விசாவில் இந்தியா வந்திருக்கும் கிம், விசா முடிந்தவுடன் தாய்நாட்டுக்கு திரும்பவுள்ளார். எனினும் நிம்மதி தேடி மீண்டும் இந்தியா வர இருப்பதாகக் கூறி அனைவரையும் வியக்க வைக்கிறார்.

பிச்சை எடுத்தாலும் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்றே பலரும் நினைப்பதுண்டு. ஆடம்பர வாழ்க்கை வேண்டாம் பிச்சை எடுத்து அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதிலேயே நிம்மதி இருக்கிறது என்கிறார் கிம்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், பிச்சையெடுப்பதைக் கோவை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்வதுடன், அவருக்கு தங்களால் இயன்ற பணத்தை யாசகமாகவும் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். கடந்த 2 நாட்களாக இவர் இந்தப் பகுதியில் இருக்கிறார்.

யாரிடமும் வலிய சென்று யாசகம் கேட்க மாட்டார் ஒரு ஓரத்தில் அமைதியாக நின்று கொண்டிருப்பார், யாரிடமும் எதுவும் பேச மாட்டார், அவருக்கு யாரேனும் பணம் கொடுத்தால் அவர்களை கரம் கூப்பி வணங்கி புன்னகையை மட்டுமே பதிலாக கொடுப்பார் என்று கூறுகிறார் ரயில் நிலையம் அருகேயுள்ள ஆட்டோ ஓட்டுனர்.

படஉதவி : தினமலர்

கிம் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாலும் மேலைநாட்டவர் ஒருவர் இங்கு வந்து யாசகம் வாங்குவதா என்று கோவையின் டாக் ஆஃப் தி சிட்டி ஆகி இருக்கிறார். கிம் எதற்காக யாசகம் வாங்குகிறார் என்று ஈஷா யோகா மையத்தை அணுகிய போது அதன் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

“எளிமையான வாழ்க்கை வாழ்வது சிவாங்கா சாதனாவில் ஒரு பகுதி. பௌர்ணமியில் தொடங்கி சிவராத்திரியில் முடிவடையும் 42 நாள் பயிற்சியின் முடிவில் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை செல்ல வேண்டும்.

இந்த பயிற்சி காலத்தில் பக்தர்கள் 21 பேரிடம் கையேந்தி யாசகம் வாங்க வேண்டும், மதியம் மற்றும் இரவு மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

Latest

Updates from around the world