சாலையில் படுத்து உறங்கிய ஷகிலாவின் கலைப்படைப்பு, இன்று அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி வரை சென்ற கதை!
12 வயதில் திருமணம், சாலையோர வியாபாரியின் மனைவி உலகம் வியக்கும் ‘கலை ராணி’யாக ஷகிலா சேக் எப்படி மாறினார் தெரியுமா?
கொல்கத்தாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சாதாரண வீட்டில் வசிக்கிறார் ஷகிலா ஷேக். மற்ற கிராமத்துப் பெண்களைப் போலவே ஷகீலாவும் தனது அன்றாட அலுவல்களில் மூழ்கி விடுவார். குடும்பத்தினருக்கு சமைத்தல், வீட்டை சுத்தம் செய்தல் என்று சாந்த சொரூபினியாக பொழுதைக் கழிப்பவர். ஆனால் கலை மீது உத்வேகம் வரும் சமயத்தில் சக்தி சொரூபினியாக மாறி தனது வீட்டிற்கு வெளியே உள்ள ஒரு மண் கொட்டகைக்கு சென்று தனது கலைப்பணியைத் தொடங்கி விடுவார்.
கையில் கலைபொருட்கள் உருவாக்கத்தை எடுத்துவிட்டால் இல்லத்தரசி என்பதெல்லாம் காணாமல் போய்விடும், இவரின் இந்த ஆர்வமே ஷகிலாவை உலகப் புகழ்பெற்ற கலைஞராக மாற்றி இருக்கிறது.
கொல்கத்தாவின் சாலையோரத்தில் உறங்கிப் பொழுதைக் கழித்தவர் இன்று பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே மற்றும் அமெரிக்காவில் தனது கலைப் படைப்புகளை விற்றுள்ளார். இவை அனைத்தும் அவரது தனித்துவமான திறமை மற்றும் அவரது ‘பாபா’வின் முயற்சியால் நடந்த மாற்றம். ஷகிலா சுயமாக முயன்று கலைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தொடர்ந்து ஊக்கம் அளித்துள்ளார்.
ஷகிலாவிற்கு ஏறக்குறைய ஒரு வயது இருக்கும் போது அவருடைய தந்தை குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து ஷகிலாவின் தாயார் ஜகெரன் பிபி காய்கறி விற்கும் தொழிலில் ஈடுபட்டார். தினசரி கொல்கத்தாவில் இருந்து மொக்ராகட்டிற்கு 40 கி.மீ தூரம் பயணித்து காற்கறி விற்று வந்தார். காய்கறி கூடையோடு தனது இளைய மகளையும் சுமந்த கொண்டு செல்லத் தொடங்கியுள்ளார் ஜகெரன்.
தனது வாழ்க்கைப் பயணம் குறித்து வீக்கென்ட் லீடரிடம் பகிர்ந்து கொண்ட ஷகிலா,
“அம்மா என்னை வேலை செய்ய பணிக்க மாட்டார், இருந்த போதும் என்னை நகர்வலம் அழைத்துச் செல்வதாக நினைத்துக் கொள்வேன். சாலைகளில் ஓடும் டிராம்கள், பேருந்துகளைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அம்மா காய்கறி விற்பனையில் பிஸியாக இருக்கும் போது சாலையோரத்திலேயே நான் படுத்துத் தூங்கி விடுவேன்,” என்கிறார்.
இப்படியாக நாட்கள் கழிந்திருந்த போது ஷகிலாவின் வாழ்க்கையை மாற்றப்போகும் அந்த மனிதரை சந்தித்தார்.
பால்தேவ் ராஜ் பனேசர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஆர்வமிக்க ஓவியரும் கூட. ஷகிலா மற்றும் ஜகெரன் பிபி காய்கறி விற்கும் அந்தத் தெருவை அடிக்கடி கடந்து செல்பவர். தினசரி முட்டைகள், சாக்லேட், பென்சில், புத்தகங்களை வாங்கிச் செல்பவர் வசதி குறைந்த குழந்தைகளுக்கு அவற்றை கொடுத்து மகிழ்வார். இதனால் குழந்தைகள் அவரை செல்லமாக ‘டிம்பாபு’ என்றே அழைத்தனர். டிம் என்றால் பெங்காலியில் முட்டை என அர்த்தம்.
மற்ற குழந்தைகள் டிம்பாபுவைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவரிடம் இருந்து பொருட்களை வாங்கினாலும் ஷகிலா அப்படிச் செய்ய மாட்டார். தெரியாத நபர் கொடுக்கும் பொருளை நான் ஏன் வாங்க வேண்டும். அதனால் நான் அவரிடம் ஒரு பொருளைக் கூட வாங்க மாட்டேன் என்கிறார் ஷகிலா. லைவ் மின்ட்டிடம் பேசிய ஷகிலா,
“ஒரு நாள் டிம்பாபு என்னைப் பார்த்து நான் யாருடன் வந்திருக்கிறேன் எனக் கேட்டார். என் அம்மா அவரைப் பார்த்து பயந்தார் என்னை தவறாக பயன்படுத்திவிடுவாரோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது. இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக என் அம்மாவின் நம்பிக்கையை பெற்றார் ஷகிலாவின் பாபாவாக மாறிய டிம்பாபு.
ஷகிலாவை பள்ளிக்கு அனுப்புமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்த டிம்பாபு, தான் சொன்னது போலவே ஷகிலாவிற்கு கொல்கத்தா பள்ளியில் சேர்க்கைக்கான இடம் வாங்கித் தந்தார். அந்த குட்டி தேவதையின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்ற முயற்சி எடுத்தார். ஆனால் விதி வேறு மாதிரியான திட்டம் போட்டது, ஷகிலாவிற்கு அவரது தாயார் வேறொரு வாழ்க்கைப் பாதையை அமைத்தார்.
தனது மகளை சாலைகளில் வளர்க்க விரும்பாத ஜகெரன், ஷகிலாவிற்கு 12 வயது இருக்கும் போது அவளை விட 15 வயது பெரியவரான ஏற்கனவே திருமணமான அக்பர் ஷேக் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் ஷகிலா தனது புதிய குடும்ப வாழ்க்கைக்காக ஷரஜ்பூருக்கு இடம் பெயர்ந்தார்.
அக்பர் தினசரி கொல்கத்தாவிற்கு சென்று காய்கறிகளை விற்பனை செய்து வந்தார், எனினும் தனது 2 மனைவிகளையும் பார்த்துக் கொள்ள அவருக்கு அந்த வருமானம் போதவில்லை. இதனால் ஷகிலா தன்னுடைய ‘பாபா’ விடம் உதவி கேட்டுள்ளார். அவர் ஷகிலாவை காகிதப் பைகள் தயாரித்து விற்பனை செய்து அந்த வருமானத்தின் மூலம் கணவருக்கு உதவ முடியும் என்று ஆலோசனை தந்துள்ளார்.
ஒரு நாள் பாபா, ஷகிலாவையும் அவரது கணவரையும் தன்னுடைய கண்காட்சியை பார்வையிட அழைப்பு விடுத்துள்ளார்.
“கண்காட்சிக்கு செல்வதில் எங்களுக்கு பெரிய ஆர்வம் இருக்கவில்லை, ஏனெனில் எங்களுக்கு கலையைப் பற்றி எதுவும் தெரியாது ஆனால் பாபாவிற்காக போக வேண்டும் என்று அங்கே போனோம். ஓவியங்களை நான் பார்த்துவிட்டு கடந்து சென்று கொண்டே இருந்தேன். ஆனால் ஒவ்வொரு ஓவியத்தையும் உற்று கவனித்து வந்தார் ஷகிலா,” என்கிறார் அவரது கணவர் அக்பர்.
ஷகிலா, பாபாவிடம் தனக்கு 4 ஓவியங்கள் பிடித்திருப்பதாகக் கூறினார். அவர் சொன்ன அந்த 4 ஓவியங்களும் பின்னர் மிகப் பிரபலமானவையாக மாறியது. பாபாவிற்கு ஆச்சர்யமும், சந்தோஷமும் கட்டுக்கடங்காமல் இருந்தது. தன்னுடைய மகளுக்கு கலைஞானம் இருந்ததே அந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.
கண்காட்சிக்குப் பிறகு, ஷகிலா அக்பரிடம் கார்ட்போர்ட் ஷீட்டுகள், கலர் பேப்பர்கள், பெயின்ட்டுகளை வாங்கித் தரச் சொன்னார். அவை விலை உயர்ந்தவை. இவற்றை வைத்து தன்னுடைய முதல் ஓவியத்தை உருவாக்கினார் ஷகிலா. காய்கறிகள், பழங்கள் என அவர் உருவாக்கி இருந்தவை அக்பரை மட்டுமல்ல, பாபா மற்றும் அவரது சக ஓவியர்களையும் ஆச்சரியப்படுத்தியது.
அதன் பிறகு ஷகிலாவின் வாழ்வில் இறங்குமுகமே இல்லை. பாபாவும் அவருடைய நண்பர்களும் ஷகிலாவிற்கு காகிதங்கள், செய்தித்தாள்கள், அட்டைகளை வாங்கித் தரத் தொடங்கினர். இவற்றை வைத்து ஷகிலா இணையொட்டுப் படங்கள் (collage) உருவாக்கத் தொடங்கினார். ஷகிலா இந்த புதிய வகை ஓவியத்தில் காய்கறிகள், கடவுளின் உருவங்கள், குடும்ப வன்முறைகளை சித்தரிக்கும் கலைப் படைப்புகளை உருவாக்கினார்.
ஷகிலாவிற்கு பாபா மட்டுமின்றி இன்னும் பிற கலை ஆர்வலர்களும் ஊக்கம் தந்தனர். 1990ல் ஷகிலா தன்னுடைய முதல் கண்காட்சியை அமைத்தார், அதன் மூலம் ரூ.70,000 வருமானம் ஈட்டினார்.
ஷகிலாவின் கலைப்பொருட்களை விற்பனை செய்ய இன்று தொழில் சார்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இவருடைய கலைப் படைப்புகள் இன்று இந்தியாவின் பல பகுதிகளிலும், ஐரோப்பா, அமெரிக்காவில் பலரின் இல்லங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. புகழின் உச்சிக்கே சென்றாலும் ஷகிலா அடக்கத்துடனே இருக்கிறார்.
ஓவியங்களை உருவாக்குபவர்கள் அதற்கென சிறப்புப் பெயரை தேர்ந்தெடுப்பார்கள், ஆனால் ஷகிலா அப்படி எதுவும் செய்வதில்லை. சொல்லப்போனால் தன்னுடைய ஓவியங்களின் உள் அர்த்தம் இது தான் என்று யாருக்கும் விளக்கியது கூட கிடையாது. ஆனால் அவரது ஓவியத்தில் இருக்கும் உயிர்ப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடும்.
2010ல் ஸ்டார் ஆனந்தாவின் ஷெரா பங்காலி புரோஷ்கர் (சிறந்த பெங்காலி விருது) விருது கொடுத்த போது நாங்கள் புதிதாக ஒரு டிவி வாங்கினோம். அதில் எப்போதாவது நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். அரிதாக செய்தித்தாள் படிப்பேன், என்னுடைய கலைப் படைப்புகளுக்கு நான் எப்போதுமே தலைப்பு வேண்டும் என்று சிந்தித்ததில்லை என்கிறார் இந்த கலை ராணி ஷகிலா.
தகவல் மற்றும் படங்கள் உதவி : தி பெட்டர் இந்தியா