எலக்ட்ரிக் பைக்கில் ஒரு நாளைக்கு 8 லட்சம் கி.மீ- ஸ்விக்கியின் க்ரீன் திட்டம்!
மின் வாகனங்களில் டெலிவரி செய்வதற்காக ஸ்விக்கி நிறுவனம் ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி மற்றும் ஹிரோ லெக்ட்ரோ நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி, 2025ல், உணவு டெலிவரி செய்ய, தினமும் எட்டு லட்சம் கிமீ பயணம் செய்யும் அளவுக்கு மின் வாகனங்களை பயன்படுத்த இருப்பதாக2த் தெரிவித்துள்ளது. டெலிவரி சேவையில் மின் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான சோதனை சேவையை நிறுவனம் துவங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள டெலிவரி பாட்னர்களுக்காக மின் வாகன அமைப்பு மற்றும் பாட்டரி மாற்று வசதியை அளிக்க ரிலைன்ஸ் பிபி மொபிலிட்டி (Reliance BP Mobility Limited) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ஸ்விக்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இரண்டு முன்னணி நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தம், புதுமையான வர்த்தக மாதிரி மூலம், தங்கள் தொழில்நுட்பம், வீச்சு மற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி டெலிவரி வாகனங்களுக்கான பசுமையான, செலவு குறைந்த தீர்வுகளை உருவாக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ லெக்ட்ரோம் (Hero Lectro) மற்றும் இங்கிலாந்தின் பாஸ்ட் டெஸ்பாட்ச் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடனும் ஸ்விக்கி ஒப்பந்தம் செய்துள்ளது. சரக்கு மின் பைக் சேவையை வழங்கி வரும் முன்னணி நிறுவனமாக இது விளங்குகிறது.
“வர்த்தக வளர்ச்சி என்பது, பங்குதாரர்கள் நலன், சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஸ்விக்கி மாதந்தோறும் லட்சக்கணக்கான ஆர்டர்களை டெலிவரி செய்கிறது. எங்கள் பார்ட்னர்கள் ஒரு நாளுக்கு சராசரியாக 80-100 கிமீ செல்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு மேலும் வசதி அளிக்கப் பாடுபடும் அதே நேரத்தில், எங்கள் செயல்பாடுகளின் சுற்றுச்சுழல் தாக்கத்தை அறிந்திருக்கிறோம்,” என ஸ்விக்கி சி.இ.ஓ ஸ்ரீஹர்ஷா மெஜெட்டி கூறியுள்ளார்.
“மின் வாகனங்களுக்கு மாறுவது சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதில் முக்கியமான நடவடிக்கையாகும். இது சுற்றுச்சூழலுக்கு நலனாக அமைவதோடு, டெலிவரி பார்ட்னர்கள் அதிகம் வருவாய் ஈட்டவும் வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பெங்களூரு, தில்லி மற்றும் ஐதராபாத் நகரங்களில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. மின் வாகனங்களை பயன்படுத்துவது டெலிவரி செலவை 40 சதவீதம் வரை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“சுற்றுச்சூழலுக்கு நட்பான போக்குவரத்து முறைக்கு மாறும் தேசத்தின் ஒட்டுமொத்த முயற்சிக்கு ஏற்ப தொழில்துறை மின் வாகனங்களுக்கு மாறுவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நோக்கில் ஸ்விக்கியின் நடவடிக்கை பாராட்டத்தக்கது,” என இது தொடர்பாக நிட்டி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் காந்த் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் வாகன டெலிவரிக்கு ஏற்ற மாதிரி தொடர்பாக ஸ்விக்கி நடத்தி வந்த முன்னோட்டத் திட்டத்தின் விளைவாக தற்போதைய நடவடிக்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டெலிவரி சேவையை சிக்கல் இல்லாமல் வழங்க, ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி நிறுவனம், சில கிமீ இடைவெளியில் பேட்டரி மாற்று மையங்கள அமைக்கும் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது. ஒரு முறை பேட்டரி மாற்றினால், 80 கிமீ வரை பயணிக்கலாம்.
மின் வாகனப் போக்குவரத்துத் தொடர்பான அரசு இலக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி நிறுவனம் , மின் வாகன போக்குவரத்துச் சேவை பிரிவில் நுழைந்திருப்பதாக நிறுவன சி.இ.ஓ ஹரிஷ் மேத்தா கூறியுள்ளார்.
ஸ்விக்கி நிறுவனத்துடனான கூட்டு, மின்வாகன பிரிவில் பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடியது என்றும், எங்கள் பரவலான பேட்டரி மாற்று மையங்கள் மூலம் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேட்டரி மாற்ற ஐந்து நிமிடங்களே ஆகும் என்பதால், டெலிவரி பார்ட்னர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது. மின் வாகன பயன்பாடு தொடர்பாக ஸ்விக்கி பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஸ்விக்கி லெக்ட்ரோ மற்றும் பாஸ்ட் டெஸ்பாட்ச் நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஐதராபாத்தில் மேற்கொள்ளப்படும் சோதனைத் திட்டம் மற்ற நகரங்களுக்கும் விரிவு படுத்தப்படும்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்