கழுத்தில் ஸ்டெத் முதல் கையில் கலப்பை வரை: தமிழக தேர்தல் களத்தில் இறங்கும் ‘திருப்புமுனையாளர்கள்’ சிறப்புத் தொடர்!
இன்று முதல் ‘தேர்தல் களம்-2021’ என்ற பகுதியில், தினம் ஒரு வேட்பாளர் பற்றிய கட்டுரையை வெளியிட உள்ளோம். கட்சி பாகுபாடின்றி, எல்லா அரசியல் கட்சிகளில் இருந்தும் தேர்தலில் போட்டியிடும் மாற்றம் ஏற்படுத்த விழையும் வேட்பாளர்களை மட்டும் நாங்கள் தொகுத்து வழங்க உள்ளோம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021-ன் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் களம் சூழு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலும் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது என்றாலும், இந்த முறை தேர்தல் அந்த இரு பெரிய கட்சிகளின் பெருந்தலைவர்களான கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெ ஜெயலலிதா உயிருடன் இல்லாது நடைபெறும் தேர்தல் ஆகும். இது தமிழகத்துக்கு புதிது.
இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மய்யம் கட்சி, சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக என அவரவர்கள் தனியாக மற்றும் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மூன்றாம், நான்காம், ஐந்தாம் அணி என அமைத்து தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
எப்போதும் களம் காணும் மூத்த அரசியல்வாதிகள் தாண்டி இந்தத் தேர்தலில் இந்த புதிய கட்சிகள் பல புதிய முகங்கள், இளைஞர்கள், மருத்துவர்கள், முன்னாள் ஐஏஎஸ்-கள், தொழில்முனைவர்கள் என பலரை தேர்தல் வேட்பாளர்களாக அறிவித்து வருகின்றன. இவர்களின் வரிசையில் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகியோரும் பல புதிய முகங்களுக்கு, சமூக செயற்பாட்டாளர்களு இம்முறை தேர்தலில் வாய்ப்பளித்துள்ளது.
இது ஒரு நல்ல தொடக்கம் என்றே சொல்லவேண்டும்!
அரசியல்வாதி என்றாலே வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி என்ற காலம் மாறி, கழுத்தில் ஸ்டெத் உள்ளவர்கள் முதல், கையில் கலப்பைப் பிடித்தவர்கள் வரை இந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் புதுமுகங்களாக போட்டியிடத் தயாராகிவிட்டனர்.
கட்சி சார்பைத் தாண்டி இவர்களுக்கு என்று சமூகத்தில், மக்கள் மத்தியில் ஒரு நல்ல அடையாளம், நற்பெயர் இருப்பது மறுப்பதற்கு இல்லை. அப்படிப்பட்டவர்களைப் பற்றி, அவர்கள் அரசியலுக்கு நுழைந்த பின்னணி, சமூகத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம், அரசியலுக்கு அப்பால் மக்கள் மனதை கவர்ந்த அவர்களின் செயல்கள் என தினம் ஒரு வேட்பாளரை யுவர்ஸ்டோரி தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது.
இன்று முதல் ‘தேர்தல் களம் 2021’ என்ற பகுதியில், தினம் ஒரு வேட்பாளர் பற்றிய கட்டுரையை வெளியிட உள்ளோம். கட்சி பாகுபாடின்றி, எல்லா அரசியல் கட்சிகளில் இருந்தும் தேர்தலில் போட்டியிடும் மாற்றம் ஏற்படுத்த விழையும் வேட்பாளர்களை மட்டும் நாங்கள் தொகுத்து வழங்க உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தமிழக சட்டமன்ற தேர்தல் 2021’-ல் கனவுகளுடன் களம் இறங்கும் இந்த இளைஞர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...!