ஆய்வு மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையமாக Davos'25 மாநாட்டில் கவனத்தை ஈர்த்த தமிழ்நாடு!
Davos-ல் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் (WEF) ஆண்டு கூட்டத்தில், ஆய்வு, வளர்ச்சி மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கு ஏற்ற இடமாக தமிழ் நாடு திகழ்வதாக மாநிலம் சார்பில் கலந்து கொண்ட குழு தமிழ்நாட்டை முன் வைத்தது.
டாவோசில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார மன்றத்தின் (WEF) ஆண்டு கூட்டத்தில், ஆய்வு, வளர்ச்சி மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கு ஏற்ற இடமாக தமிழ்நாடு திகழ்வதாக மாநிலம் சார்பில் கலந்து கொண்ட குழு தமிழ்நாட்டை முன் வைத்தது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்கள், உரையாடல்கள் வாயிலாக தமிழ்நாடு குழு இந்த கருத்தை வலியுறுத்தியது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையை அடிப்படையாகக் கொண்டு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான குழு, பாரம்பரிய சேவைகள், உற்பத்தி சார்ந்த செயல்பாடுகளில் இருந்து விலகி புதுமையாக்கம் மற்றும் உற்பத்தியில் சர்வதேச அளவில் மேம்பட்ட தலைமை நிலையை அடைவதற்கான தொலைநோக்கு பார்வையை முன்வைத்தது.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டிற்கு உள்ள சாதகமான அம்சங்களை முதலீட்டாளர்களிடம் தமிழ்நாடு குழு முன்வைத்தது. தகுதிவாய்ந்த திறமையாளர்கள், அதிநவீன உள்கட்டமைப்பு வசதி, திறன் வளர்ச்சிக்கு விரிவான அணுகுமுறை ஆகிய அம்சங்கள் சாதகமாக முன்வைக்கப்பட்டன.
ஏற்கனவே உள்ள மற்றும் புதிய நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டின. ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் ஆய்வு செயல்பாட்டிலும், புதிய நிறுவனங்கள் தொழில் துவங்குவதிலும் ஆர்வம் காட்டின.
பொருளாதார வல்லுனர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்ற விநியோகச் சங்கிலி தொடர்பான விவாத குழுவில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சேவைகள் அளிப்பதில் இருந்து பொருட்களை உருவாக்குவதை நோக்கி தமிழ்நாடு மேற்கொண்டு வரும் மாற்றத்தை சுட்டிக்காட்டினார்.
“எங்கள் மாநிலத்தில் உலகத்தரம் வாய்ந்த புதுமையாக்கம் உருவாகி, சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. உற்பத்தி செய்வதோடு மட்டும் அல்லாமல் பொருட்களை உருவாக்கி வடிவமைக்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக நடைபெற்ற மூடிய அறை கூட்டங்களில், அரசு திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுடனான கூட்டு முயற்சி மூலம் தமிழ்நாடு எப்படி ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவுக்கு தயாராக இருக்கும் ஊழியர் படையை உருவாக்குகிறது என தமிழ்நாடு குழு எடுத்துரைத்தது. குழுவால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களில் நான் முதல்வர் திட்டம் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை தூண்டியது.
தமிழ்நாட்டிற்கு சர்வதேச தர கால்பந்து பயிற்சியை, குறிப்பாக பெண்களுக்கான பயிற்சியை கொண்டுவருவது தொடர்பாக மான்செஸ்டர் யுனைடெட் உடன் நடைபெற்ற சந்திப்பில், சமூக கலாச்சார முன்னேற்றமும் வலியுறுத்தப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு சர்வதேச விளையாட்டு மையமாக உருவாவதற்கான முயற்சிகளை தமிழக குழு சுட்டிக்காட்டியது.
“மாநில மனிதவளத்தின் திறமை, நம்முடைய முற்போக்கான கொள்கைகள், அடுத்த தலைமுறை தொழில் நிறுவனங்களை ஆதரிக்கத் தயாராக உள்ள அணுகுமுறை ஆகியவற்றின் பலனை கண்டு வருவதாக தொழில்கள் துறை அதிகாரி அருண் ராய் தெரிவித்தார். உணவு பதப்படுத்தல் துவங்கி வேளாண் காடுகள் வரை பல துறைகள் தமிழ்நாடு அளிக்கும் வாய்ப்புகள் அங்கீகரிக்கப்படுவதாக,“ கூறினார்.
ஆட்டோபொபைல் மற்றும் மின்னணு நிறுவனங்களுடன் நடைபெற்ற கூட்டங்கள் விரிவாக்கத்திற்கான புதிய திட்டங்களை உணர்த்தின. நிறுவனங்கள் பெயர் குறிப்பிடாவிட்டாலும், பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக தமிழ்நாடு குழு தெரிவித்தது.
முன்னணி மின்னணு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் சூழலுடன் அதன் உற்பத்தி பரப்பை ஒருங்கிணைப்பு தொடர்பான யோசனைக்கு ஆதரவு தெரிவித்தது. இரண்டு புதிய டேட்டா செண்டர்களுக்கான முதலீடு வாய்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச உணவு பதப்படுத்தல் நிறுவனம் நுகர்வோர் துறையில் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளது. நன்கறியப்பட்ட சூப்பர் உணவு நிறுவனம் தமிழகத்தில் நுழைய உள்ளது. இரண்டு முன்னணி நிதி நிறுவனங்கள் குளோபல் கேபலிபிட்டி மையங்களை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. இரண்டு மருந்தக நிறுவனங்கள் தங்கள் மையங்களை மேம்படுத்துவதோடு உற்பத்தி ஆலை அமைக்கும் எண்ணமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்கோ மூலம் தமிழ்நாடு அறிவு நகரை உருவாக்கும் திட்டம் சர்வதேச பல்கலைக்கழகங்களின் ஆர்வத்தை ஈர்த்தது. மாநிலத்தின் சர்வதேச பொருளாதார தொடர்புகளை வலுவாக்கும் வகையில் பல்வேறு அரசுகளுடன் இருதரப்பு கூட்டங்கள் நடைபெற்றன. சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யாங் உடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சந்திப்பில் செமிகண்டக்டர் உற்பத்தி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தினார்.
ஐக்கிய அரபு குடியரசு பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா பின் டவுக் அல் மாரி உடன் நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் தமிழ்நாட்டின் உணவு ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதை வலியுறுத்தினார். சவுதி அரேபியா தொழில்துறை அமைச்சர் பண்டர் அல்கோரயெப் உடனும் சந்திப்பு நடைபெற்றது. பின்லாந்தின் வளர்ச்சி கூட்டுறவு அமைச்சர் விலே டோவியோவையும் அமைச்சர் ராஜா சந்தித்துப்பேசினார்.
தமிழ்நாட்டின் துடிப்பான முன்னேற்ற நோக்கம், வளர்ச்சி பாதையில் உள்ள நம்பிக்கை #BullishOnTN எனும் முன்னெடுப்பு வாயிலாக வலியுறுத்தப்பட்டது. உறுதி, துடிப்பு, வளத்தின் அடையாளமான காளையை முன்வைத்து தமிழ்நாடு குழு பல்வேறு துறைகளில் சர்வதேச அளவில் தன்னை முன்னிறுத்திக்கொண்டது. திராவிட மாடல் அரசின் நிர்வாகத்தில் சமூக நீதி மற்றும் தொழில் வளர்ச்சி இணைந்த பாதையில் தமிழ்நாட்டின் வியக்கத்தகு முன்னேற்றத்தில் பங்கேற்க வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Edited by Induja Raghunathan