5ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களின் விமானப்பயண கனவை நிஜமாக்கிய தலைமை ஆசிரியர்!
தென்காசி அருகே கொண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் இருபது பேரை, சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்து, அவர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் தலைமை ஆசிரியர் ஒருவர்.
சிறுகுழந்தையாக இருந்தாலும் சரி, வயதானவர்களாக இருந்தாலும் சரி.. இப்போதும் வானத்தில் விமானம் பறந்தால் அதனை ஆச்சர்யத்தோடும், ஆசையோடும் நிமிர்ந்து பார்ப்பவர்கள் நம்மில் ஏராளம். அதில், பலமுறை பயணம் செய்தவர்களாக இருந்தாலும் கூட, விமானத்தை அப்படிப் பார்ப்பதில் அலாதிப் பிரியம் நமக்கு.
இப்படி விமானத்தை அடிக்கடி பார்ப்பதற்கே வாய்ப்பு இல்லாமல், தொலைக்காட்சியிலும், சினிமாவிலும் மட்டுமே விமானத்தைப் பார்த்து வியந்த, கிராமத்து சிறுகுழந்தைகளுக்கு, அதில் ஒருமுறை பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்.
அப்படி ஒரு கொண்டாட்ட மனநிலையில்தான் இருக்கின்றனர் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் அருகே உள்ள கொண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 20 பேர். நேரில் கண்ணிலாவது பார்க்க முடியுமா என ஏங்கிய விமானத்தில், மதுரையில் இருந்து சென்னை வரை பயணித்து பார்த்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர் அவர்கள்.
அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளின் விமானப் பயணக் கனவை மெய்ப்பட வைத்தவர் அவர்களது பள்ளித் தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ்தான். தனது பள்ளிக் குழந்தைகளின் ஆசையை பெருமுயற்சி செய்து நிஜமாக்கிக் கொடுத்திருக்கிறார் அவர்.
விமானத்தில் பறக்க ஆசை
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் மைக்கேல் ராஜ். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் உள்ளனர்.
சமீபத்தில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரைட் சகோதரர்கள் பற்றி பாடம் எடுத்துள்ளார் மைக்கேல் ராஜ். அப்போது, மாணவர்களிடம் உங்கள் அனைவருக்கும் பொதுவான ஆசை என்ன எனக் கேட்டிருக்கிறார். அப்போது தனிப்பட்ட முறையில் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஆசையாக, விமானத்தில் ஒருமுறையாவது பறந்துவிட வேண்டும் என்பதுதான் இருந்துள்ளது.
இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த மைக்கேல் ராஜ், தனது பிள்ளைகளின் கனவை மெய்யாக்கிவிட நினைத்து, இன்று அதனை செய்தும் காட்டி விட்டார்.
“விமானப்பயணம் என்ற ஆசை மாணவ மாணவிகளுக்கு நிறைவேறாத ஏக்கத்தை தந்து அது அவர்களது படிப்பில் பிரதிபலித்து விடக்கூடாது என்ற எண்ணம் என்னுள் ஆழமாக பதிந்தது. ஆகவே, மாணவ மாணவிகளை அவர்களின் விருப்பப்படியே விமானத்தில் அழைத்துச் செல்வதென முடிவு செய்தேன். அதன் தொடர்ச்சியாக, 3 மாதத்திற்கு முன்பாகவே, அனைவரையும் விமானத்தில் அழைத்துச்செல்ல, மாணவர்கள் 20 பேர், ஆசிரியர்கள் 8 பேர் என 28 பேர் சென்னை செல்வதற்கு இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்து விட்டேன்,” என்கிறார் தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ்.
வாய்ப்பாடு போட்டி
இந்த இடத்திலும் நல்ல ஒரு ஆசிரியராக தன் மாணவர்களுக்கு ஒரு வாழ்க்கைப் பாடத்தை தந்திருக்கிறார் மைக்கேல் ராஜ். அதாவது, எந்தவொரு பரிசுப் பொருளும் இலவசமாகவோ அல்லது ஏதுவும் செய்யாமல் இருந்தாலோ மகிழ்ச்சியைத் தராது என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்கும் விதமாக, ஒரு சிறிய போட்டி வைத்து, அதில் வெற்றி பெறுபவர்களுக்கே இந்த விமானப் பயணம் பரிசு என அறிவித்திருக்கிறார்.
“யாரெல்லாம் ஒன்று முதல் 20 வரையும் 16-ம் வாய்ப்பாடு வரையும் முழுவதுமாக மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிறார்களோ அவர்களை விமானத்தில் அழைத்து செல்வதாக கூறினோம். இதைக் கேட்டு குஷியான மாணவ, மாணவியர் ஆர்வமாக போட்டிப் போட்டு வாய்ப்பாடு படிக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பிட்ட நாளில், ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் 20 பேருமே ஒன்று முதல் 16ஆம் வாய்ப்பாடு வரை முழுவதுமாக படித்து ஒப்புவித்தனர். எனவே, அவர்களின் உழைப்பிற்கு கிடைத்த பரிசாக இந்த விமானப் பயணத்தை மகிழ்ச்சியோடும், திருப்தியோடும் அவர்கள் கொண்டாட முடிந்தது,” எனக் கூறுகிறார் மைக்கேல் ராஜ்.
கல்விச் சுற்றுலா
திட்டமிட்டப்படி மாணவர்கள் அனைவரையும் ரயில் மூலமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அழைத்து வந்து, பின் அங்கிருந்து விமான நிலையத்திற்கு வேனில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து இண்டிகோ விமானத்தின் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர்.
சென்னையில் விமானப் பயணம் முடிந்ததும், முதல்நாள் பிர்லா கோளரங்கம், செம்மொழிப் பூங்கா, மெரினா பீச் ஆகிய இடங்களையும், இரண்டாம் நாளில் வள்ளுவர் கோட்டம், தலைமை செயலகம், நீதிமன்றம், தலைவர்கள் சமாதி மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகியவற்றையும் சுற்றிக் காண்பித்து, இந்தப் பயணத்தை கல்விச் சுற்றுலாகவும் மாற்றி விட்டனர். பிறகு, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஊர் திரும்பியுள்ளனர்.
தன்னார்வலர்களின் உதவி
மாணவ மாணவிகளின் இந்த விமானப் பயணக் கனவை நிறைவேற்ற மைக்கேல் ராஜின் திட்டத்திற்குப் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளனர். துபாயில் உள்ள தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக மைக்கேல் ராஜ் இதற்கு நிதி திரட்டியுள்ளார். இது தவிர, மற்ற ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் அவர்களால் இயன்ற பண உதவியைச் செய்துள்ளனர்.
20 மாணவ-மாணவிகள் மற்றும் 8 ஆசிரியர்கள் உட்பட 28 பேருக்கு விமானக் கட்டணச் செலவு மட்டும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் செலவாகியுள்ளது. இது தவிர இரண்டு நாள்கள் பயணத்திட்டத்திற்கும் மூன்றுவேளை சாப்பாடு, வாடகை வேன், நுழைவுக் கட்டணம், இதர செலவுகள் என அனைத்துக்கும் நண்பர்கள், உறவினர்கள், சக பேராசிரியர்கள் பொறுப்பெடுத்துச் சிறப்பாகச் செய்து கொடுத்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களின் விமானக் கனவை நிஜமாக்கிய தலைமையாசிரியர் மைக்கேல் ராஜுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் முன்னதாக, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுடன், பாண்டியாபுரம் பள்ளி வளர்ச்சிக்கு ரூ.10 லட்சம் விருது தொகை பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சூரரைப் போற்று’ - 16 அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் விமானப் பயணம்; திறமைக்கு பரிசளித்த தன்னார்வ அமைப்பு!