Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

{மாற்றத்திற்கான வேட்பாளர்} தேர்தல் களத்தில் ‘ஜல்லிக்கட்டு மனிதர்’ - கார்த்திகேய சிவசேனாபதி!

காங்கேயம் காளைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியவரும், ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் முன்னின்றவர்களில் ஒருவரமான கார்திகேய சிவசேனாபதி, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளராக களமிறங்குகிறார்.

{மாற்றத்திற்கான வேட்பாளர்} தேர்தல் களத்தில் ‘ஜல்லிக்கட்டு மனிதர்’ - கார்த்திகேய சிவசேனாபதி!

Thursday March 18, 2021 , 3 min Read

தமிழகத் தேர்தல் களத்தில், ’சபாஷ் சரியான போட்டி’ என சொல்ல வைக்கும் தொகுதிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் தொகுதி. அதிமுக வலுவாக இருக்கும் பகுதியாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் அமைந்திருக்கும் இந்த தொகுதியில், திமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி.


காங்கேயம் காளை தொடர்பான ஆய்வுப் பணிகளுக்காக உள்ளூர் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கார்த்திகேய சிவசேனாபதி, சில ஆண்டுகளுக்கு முன் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கியப் பங்காற்றி தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராகி இருக்கிறார்.


கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவரான சிவசேனாபதி, கடந்த ஆண்டு திமுக கட்சியில் இணைந்த நிலையில், தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக போட்டியிருகிறார்.

karthikeya

கடந்த இரண்டு முறை நடைபெற்ற தேர்தலிகளிலும், இந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக வேட்பாளாராக களம் காண்கிறார். அமைச்சர் வேலுமணிக்கு தொகுதியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கருதப்படுவதால், தொகுதியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை விவசாயம்

இந்த தேர்தலின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கார்த்திகேய சிவசேனாபதி, அரசியலுக்கு வருவதற்கு முன் ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில் அறியப்பட்டார். அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காங்கேயம் காளைகள் தொடர்பான விழிப்புணர்வு மனிதராக அறியப்பட்டிருந்தார்.


இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் கொண்டவரான சிவசேனாபதி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக காங்கேயம் காளை உள்ளிட்ட நாட்டு மாட்டு இனங்களை பாதுகாக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார். 2010 ம் ஆண்டு முதல் காங்கேயம் காளை மாடுகளுக்கான கண்காட்சிகளையும் நடத்தியிருக்கிறார்.

சிவ

விழிப்புணர்வு

காங்கேயம் காளைகள் தொடர்பான ஆய்விலும் ஈடுபட்டவர், பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் நம்முடைய பாரம்பரிய கால்நடை செல்வம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். காங்கேயம் காளைகள் தொடர்பான ஆய்வு அமைப்பையும், சேனாபதி காங்கேயம் காளை ஆய்வு அறக்கட்டளை எனும் பெயரில் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் இணையதளம் மூலம் காங்கேயம் காளைகள் தொடர்பான அரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.


சுற்றுச்சூழல் தொடர்பான புரிதலும் கொண்ட, சிவசேனாபதி மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் சூழலை பாதுகாக்க விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தினார்.

ஜல்லிக்கட்டு

2017ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கறையில் நடைபெற்ற எழுச்சி மிகு ஜல்லிக்கட்டு போராட்டை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவராக சேனாபதி கருதப்படுகிறார். காங்கேயம் காளை தொடர்பான தகவல்களை விஞ்ஞானப்பூர்மாக விளக்கும் வகையில் இவர் கூறிய கருத்துகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று போராட்டத்திற்கான உந்துசக்தியாக அமைந்தது.


2013ம் ஆண்டில் இருந்தே சேனாபதி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்திருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அப்போது, தான் வகித்து வந்த வேளாண் பல்கலை நிர்வாக உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். தொடர்ந்து நாட்டு மாடு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு காட்டியவர் கடந்த ஆண்டு திமுக கட்சியில் இணைந்தார்.

அரசியல் பிரவேசம்

தமிழ் ஆர்வம் மிக்கவரான சேனாபதி பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். திராவிட இயக்க அரசியலிலும் ஈடுபாடு கொண்டவரான சேனாபதிக்கு, திமுகவில் சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்கவரான இவரை இந்த முறை தொண்டாமுத்தூர் வேட்பாளராக திமுக அறிவித்திருக்கிறது. அவரும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியிருக்கிறார்.

காங்கேயம்

ஜல்லிகட்டு போராட்டத்தின் போது, சமூக ஊடக செயல்பாட்டிலும் ஈடுபாடு காட்டிய சேனாபதி, தேர்தல் பிரச்சாரத்திலும் சமூக ஊடகத்தை திறம்பட பயன்படுத்தி வருகிறார். டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களிலும் பதிவுகளை வெளியிட்டு வாக்காளர்கள் ஆதரவைத் திரட்டி வருகிறார்.


வாக்கு சேகரிப்பு தொடர்பான தகவல்களை டிவிட்டர் பக்கத்தில் உடனுக்குடன் பகிர்ந்து கொள்கிறார். யூடியூப் வீடியோக்கள் மூலமும் வாக்கு சேகரிக்கிறார்.

’காலம் கடந்தும் நம் பாரம்பரியத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்குவதே நமது கடமை. அந்த வகையில் என்னால் இயன்ற பாரம்பரியம் காக்கும் பணியை செய்து வருகிறேன்’ என அவர் தனது டிவிட்டர் பதிவு ஒன்றில் கூறியிருக்கிறார்.

இந்தத் தொகுதியில் அமைச்சர் வேலுமணி தவிர, மக்கள் நிதி மய்யம் கட்சி சார்பில் ஷாஜஹான், நாம் தமிழர் கட்சி சார்பில் கலையரசி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.


பெயர்: கார்த்திகேய சிவசேனாபதி.


வயது: 49


தகுதி: காங்கேயம் காளைகள் அறக்கட்டளை நிறுவனர்.


சிறப்பம்சம்: மக்களிடையே அறிமுகமானவர், சமூகப் பிரச்சனைகள், இயற்கை பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய விவசாயம் மற்றும் நாட்டு மாடுகள் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியாளர்.


சாதனை: 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கியப் பங்கு ஆற்றியது.


போட்டியிடும் தொகுதி- தொண்டாமுத்தூர்


எதிரணி வேட்பாளர்கள்: எஸ்.பி. வேலுமணி (அதிமுக), ஷாஜஹாந் மக்கள் நீதி மய்யம், கலையரசி- நாம் தமிழர் கட்சி


(பொறுப்புத்துறப்பு: இத்தொடரில் நாங்கள் வெளிப்படுத்தும் வேட்பாளர்கள், கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் சமூக செயற்பாட்டாளர்களாக திகழ்பவர்கள். இக்கட்டுரை எந்த கட்சிக்கும் சார்பின்றி எழுதப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். யுவர்ஸ்டோரி எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சார்பானது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.)