{மாற்றத்திற்கான வேட்பாளர்}: ‘சமூகமே வீடு, பட்டினி இல்லா நாடு’ - பொதுச் சேவை டு அரசியலில் சினேகா மோகன்தாஸ்!
சென்னையை சேர்ந்த சினேகா, விஸ்காம் பட்டதாரி. ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவன ஊழியர். ஃபுட் பேங்க் இந்தியா என்ற அறக்கட்டளையின் நிறுவனர். டப்பிங் ஆர்டிஸ்ட் என பல அவதாரம் எடுத்துள்ள சினேகா இன்று ம.நீ.ம கட்சியின் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர்... சமூக ஆர்வலர் டூ அரசியல்வாதியாகிய சினேகாவின் பயணமிது...
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து, ஒவ்வொரு கட்சியும் அவர்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் காணும் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யமும் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து கவனம் ஈர்த்துள்ளது. ஏனெனில், பட்டியலில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் முகங்கள் அதிகம் தென்பட்டுள்ளன. அவர்களுள் ஒரு முகமே சினேகா மோகன்தாஸ்.
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒரு நாள் நிர்வகித்த பெண்மணி என அனைவராலும் அறியப்பட்ட சினேகாவின் அறியப்படாத முகம் சமூக ஆர்வலர். கடந்த 5 ஆண்டுகளாய் பட்டினி இல்லா தேசத்தை உருவாக்க முனைப்போடு செயல்பட்டுவரும் சினேகா தான், சைதாப்பேட்டை தொகுதியின் ம.நீ.ம வேட்பாளர்!
சென்னையைச் சேர்ந்த சினேகா மோகந்தாஸ், ஒரு விஸ்காம் பட்டதாரி. ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவன ஊழியர். ஃபுட் பேங்க் இந்தியா என்ற அறக்கட்டளையின் நிறுவனர். டப்பிங் ஆர்டிஸ்ட் என பல அவதாரம் எடுத்துள்ள சினேகா, இன்று ம.நீ.ம கட்சியின் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர். சமூக ஆர்வலர் டூ அரசியல்வாதியாகிய சினேகாவின் பயணமிது!
25,000 தன்னார்வலர்கள்; 5,000 உணவு பொட்டலங்கள்
சென்னை சைதாப்பேட்டையிலே பிறந்து வளர்ந்தவர் சினேகா மோகன்தாஸ். ஒரு சமூக சேவகர் என்பதோடு மட்டுமல்லாமல் அவர், திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். சினேகாவின் வீட்டில் எந்தவொரு விசேஷங்கள் நடந்தாலும், ஆதரவற்றக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதினை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
சிறுவயதிலிருந்தே இதைப் பார்த்து வளர்ந்த சினேகாவுக்கு இயல்பிலே தோன்றியது உதவும் மனப்பான்மை. இருப்பினும், பாட்டி, தாத்தா செய்துவந்த இல்லாதோர்க்கு உணவு வழங்கும் செயலை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் எனும் எண்ணம் ஆழ்மனதில் குடி கொண்டிருந்தது. அதன் முதல் படியாய் களத்தில் இறங்கி செயல்படத் துவங்கியுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ள வீடற்றவர்களுக்கு உணவினை வழங்கியுள்ளார். நண்பர்கள் பலர் கைகோர்த்தத்தில் 'Food Bank India' உருவாகி உள்ளது.
2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் வீடற்றவர்கள், ஏழைகள், ஆதரவற்றவர்கள், சாலையோரங்களில் இருப்பவர்கள் என நாள்தோறும் எண்ணற்றவர்களின் பசியைப் போக்கி வருகிறார். பட்டினி இல்லாத நாடு என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டுவருகிறார்.
நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக சமைக்கும்போது, ஒரு பிடி அரிசி கூடுதலாக சமைத்து அதை ஃபுட் பேங்க் இந்தியாவின் ஃபேஸ்புக் பக்கம் மூலமோ, வாட்ஸ் அப் மூலமோ தகவலை சினேகாவிடம் கடத்தினால் போதும், அப்பகுதியில் செயல்படும் அமைப்பின் தன்னார்வலர்கள் வீடு வாசல் தேடிவந்து உணவினை சேகரித்து, வீடற்றவர்களின் பசியினை ஆற்றிவிடுவர் - ஃபுட் பேங்க் இந்தியாவின் கான்செப்ட் இது தான்.
எளிமையான பணியாக தெரிந்தாலும், தொடக்கத்தில் தனி ஒருத்தியாய் களத்தில் இறங்கினார். இன்று அவர்பின் 25,000 தன்னார்வாலர்கள் இருக்கின்றனர். மாதம் ஒருமுறை அனைத்து தன்னார்வலர்களும் இணைந்து 4,000 முதல் 5,000 உணவு பொட்டலங்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து சென்னை முழுவதும் வழங்கி வருகின்றனர்.
அவருடன் கைகோர்த்து ஒரு கூட்டம் புறப்படவே, அவர்களை மக்களுக்காகவும், மாற்றத்திற்காகவும் நலப்பணிகளில் ஈடுபடச்செய்தார் சினேகா.
சென்னை வெள்ளமும்; ஜல்லிக்கட்டு போராட்டமும்!
லாக்டவுன் மக்களை எவ்வகையில் எல்லாம் பாதித்ததோ, அதற்கு சற்றும் குறையாத பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றது 2015ம் ஆண்டில் ஏற்பட்ட சென்னை வெள்ளம். கனமழை பாதிப்பின்போது பெரிதும் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்று சைதாப்பேட்டை. வீடுகளுக்குள் நீர் புகுந்ததில், என்ன செய்வது என அறியாது தவித்த மக்களுக்காக கைகோர்த்தது இளைஞர் கூட்டம்.
ஒவ்வொரு குழுவும் அவர்களாகவே அவர்களுக்கான பணியை தேர்ந்தெடுத்து கொண்டு களப்பணி செய்து சென்னையை மீட்டு கொண்டுவந்தனர். அச்சமயத்தில் 8000 இளைஞர்களை தன் வசம் திரட்டி வைத்திருந்த சினேகா, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உணவு வழங்கும் பணியை அவர்களுக்கானதாக்கிக் கொண்டார்.
சென்னையின் பெரு வௌ்ளத்தின் போது மட்டுமின்றி, வர்தா புயல், கஜா புயல் ஆகிய இயற்கை பேரிடர்கள் சமூத்தின் அமைதியை சீர்குலைத்த போதெல்லாம் முழுமையான அர்பணிப்புடன் மக்களுக்காக பணியாற்றியுள்ளார்.
எந்த தலைவனுமின்றி இளைஞர்கள் எழுச்சிபெற்று எழுந்து அறவழியில் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய மாபெரும் மெரினா போராட்டத்தில் ஒவ்வொரு இளைஞனின் பங்கும் அலாதியானது. போராட்டக்காரர்களின் பசியை போக்கவும், பசியால் போராட்டம் தடை பெற்றிடக் கூடாது என்பதற்காக எண்ணற்ற தன்னார்வலர்கள் உணவு பொட்டலங்களுடன் மெரினாவை சுற்றி வலம் வந்தனர். அதில் சினேகாவின் கூட்டமும் அடங்கும்.
இல்லாதோருக்கு உணவு வழங்குதல், சைதாப்பேட்டை பகுதியை சுத்தம் செய்தல் போன்ற சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திவந்த அவர், கொரோனா சூழலிலும் மக்களுக்கு கைகொடுக்க மறக்கவில்லை.
லாக்டவுன் அறிவித்த ஒரு மாதத்திலே 2,00,000 பேருக்கு உணவு பொட்டலங்களையும், 2000 பேருக்கு ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்களையும் வழங்கினார். கோவிட் காலத்தில் மட்டும் 10லட்சம் உணவு பொட்டலங்களை விநியோகித்து உள்ளார். அப்படியாக தொடங்கிய தன் பயணத்தினை அடுத்தகட்டமாக நகர்த்திடும் வகையிலே இந்த அரசியல் பிரவேசம் அமையும் என்கிறார் சினேகா மோகன்தாஸ்.
மோடி ட்விட்டரின் ஒரு நாள் அட்மின் டூ அரசியல்...
கடந்தாண்டு மகளிர் தினத்தில் பிரதமர் மோடி பெண்களுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதாவது மகளிர் தினத்தன்று ஒரு நாள் மட்டும் பிரதமரின் டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பு 7 பெண்களிடம் வழங்கப்பட்டது.
பிரதமரின் டுவிட்டர் கணக்கை முதல் பெண்ணாக கையாண்டார் சினேகா மோகன்தாஸ். அதுவரை ஃபுட் பேங்க் பற்றி அறியாதோரும் அறிந்தனர். அன்று மக்களால் அறியப்பட்ட முகமாக மாறிய சினேகா, இன்று மக்கள் நீதி மய்யத்தின் சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் துணைச் செயலாளராகப் பொறுப்பேற்று அக்கட்சியின் சைதாப்பேட்டை வேட்பாளராக களம் காண்கிறார்.
"பா.ஜ.கவில் இருந்தும் அழைப்பு விடுத்தனர், ஆனால், மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் பிடித்ததாலும், என் கருத்துக்களோடு ஒத்து போவதாலும், கட்சியிலிருந்து அழைப்பு விடுத்தவுடன் அதனை ஏற்று கொண்டேன். சைதாப்பேட்டையிலே பிறந்து வளர்ந்ததோடு, 7 ஆண்டுகளாக மக்களை சென்றடைந்து களப்பணி புரிந்ததால், மக்களின் தேவை அறிவேன். அரசியல் என்பது சமூகப் பணிகளே தவிர வேறொன்றுமில்லை, என்கிறார்.
அதனால், கட்சியில் இணைந்ததற்கான வித்தியாசம் தெரியவில்லை. இப்போது நான் செய்ததையே பெரிய அளவில் செய்ய நினைக்கிறேன். பிறந்து வளர்ந்தது சைதாப்பேட்டையில் என்பதால் கடந்த ஆண்டுகளில் என்ன மாற்றத்தை அடைந்துள்ளது என்பதை கண்கூடாக பார்த்துள்ளேன். சாலையில் வசிக்கும் மக்களின் நிலை இன்றும் மாறவில்லை.
”பொதுவாக வாக்கு சேகரிக்க வருபவர்கள் நல்லது செய்கிறோம் என்று கூறி வாக்கு கேட்பர், நான் நல்லது செய்துவிட்டு வந்து வாக்கு கேட்கிறேன். சைதாப்பேட்டை ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடற்றவர்களுக்கு இருப்பிடத்தை உறுதி செய்வது, பெண்களின் பாதுகாப்பு, வேலை வாய்ப்பை ஏற்படுத்துதல் ஆகிய மூன்றினையும் நிறைவேற்றுவதை முதல் கட்ட வேலையாகச் செய்வோம்.”
”என்னை பார்த்தால் எம்எல்ஏ வேட்பாளர் மாதிரி தெரியலைல. இந்த மாற்றத்தை தானே எல்லாரும் விரும்புறீங்க. இந்த மாற்றம் வரணும்னா மக்கள் நீதி மய்யம் நினைத்தால் மட்டும் முடியாது, மக்களாகிய நீங்கள் நினைக்கணும். என்னை போன்ற இளைஞர்களும், பெண்களும் அரசியலுக்கு வரணும்னா அந்த மாற்றம் நடந்தே ஆகணும்,” என்று கூறி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சைதாப்பேட்டையில் மொத்தம் 2,70,000 வாக்காளர்கள் உள்ளார்கள். கடந்த எம்.பி எலெக்ஷனில் 1,14,000 பேர் ஓட்டு போடவேயில்லை. நமது கடமையைச் செய்யாமலே மாற்றம் எப்படி நிகழும், என்று கேள்விய்ம் எழுப்பியுள்ளார் சினேகா.
தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகளுள் ஒன்று சைதாப்பேட்டை. அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். இருவரும் இதற்கு முந்தைய தேர்தல்களில் வெற்றி கண்டுள்ளனர் என்பதால், டஃப் ஃபைட் நிகழும் தொகுதியாக சைதாப்பேட்டை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதனால், இங்கு யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மே 2ம் தேதி எல்லாம் தெரிந்துவிடும். ஆல் தி பெஸ்ட் சினேகா!
முழு பெயர்: சினேகா மோகன்தாஸ்
வயது: 28
குடும்பம் - சபரீஷ் ராமமூர்த்தி
தொகுதி- சைதாப்பேட்டை
கட்சி- மக்கள் நீதி மய்யம்
தொழில்- டப்பிங் ஆர்டிஸ்ட், ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஊழியர்
சிறப்பம்சம்- சமூக நலனில் ஆர்வம் உள்ள செயற்பாட்டாளர், பட்டினி இல்லாத நாடு உருவாக்க ‘Food bank India' நிறுவியவர்
சாதகம்- சைதையில் சமூகப்பணியில் ஈடுப்பட்டவர். மக்களுக்கு தெரிந்த, நெருங்கிய முகம்.
சாதனை - பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை நிர்வகித்தவர், பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.
போட்டியாளர்கள்- சைதை துரைசாமி (அ.தி.மு.க) மா.சுப்பிரமணியன் (தி.மு.க.)
(பொறுப்புத்துறப்பு: இத்தொடரில் நாங்கள் வெளிப்படுத்தும் வேட்பாளர்கள், கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் சமூக செயற்பாட்டாளர்களாக திகழ்பவர்கள். இக்கட்டுரை எந்த கட்சிக்கும் சார்பின்றி எழுதப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். யுவர்ஸ்டோரி எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சார்பானது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.)