ஓட்டுக்கு காசு கொடுத்தா ‘அல்வா’, ‘எனக்கு ஓட்டு போடாதீங்க’ - சுவாரஸ்யமான தேர்தல் பிரச்சாரங்கள்!
தமிழகத் தேர்தல் தேதி நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் சுட்டெரிக்கும் வெயில் போல அனல் பறக்கிறது. விதவிதமான வழிகளில் வாக்காளர்களை ஈர்க்கும் வேட்பாளர்களில் சில சுவாரஸ்யமானவற்றை காணலாம்.
மாபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய போட்டியில் பிரதான கட்சிகள் இருக்கின்றன. நட்சத்திர வேட்பாளர்களும் கூட தங்களை வாக்காளர்களில் ஒருவர், அவர்களின் நண்பன் என்பதை நிரூபிப்பதற்காக துணி துவைப்பது, தோசை சுடுவது, வடை சுடுவது, கண்ணீர் விட்டு கதறுவது என்று ஆளுக்கொரு அஸ்திரத்தை கையில் எடுத்து மக்களைக் கவரும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் அரசியல் கட்சிகள் ஆட்சியை யார் பிடிக்கப் போகிறோம் என்பதற்காக ஒருவரை ஒருவர் சாடியும், விமர்சித்தும், மக்கள் மனதில் இடம்பிடிக்கப் பார்க்கின்றனர். அரசியல் கட்சிகளைக் காட்டிலும் ஒவ்வொரு தேர்தலிலும் சுவாரஸ்யங்களை அரங்கேற்றுவது சுயேச்சை வேட்பாளர்களே. வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் என்று அனைவரையும் திரும்பி பார்க்கவைப்பதில் அவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.
2021 சட்டசபை தேர்தலிலும் அவர்களின் நூதனங்கள் குறையவில்லை. சுமார் 22 தொகுதிகளில் 120க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் சின்னம் பெற்று களத்தில் இருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் கொரோனா அச்சம் மற்றும் நிதியின்மை காரணமாக பெரிய அளவில் பிரச்சாரம் செய்யாமல் தெரிந்தவர்களிடம் மட்டுமே ஆதரவு திரட்டி வருகின்றனர்.
எனினும் சில சமூக ஆர்வலர்கள் வித்தியாசமான முறையில் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர், அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
1. ஓட்டுக்கு காசு கொடுத்தா ‘அல்வா’ கொடுங்க
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் வசம் இழுக்கப்பார்க்கும் வேட்பாளர்களைப் பார்த்திருக்கிறோம், மதுரை வடக்குத் தொகுதியில் டிவி சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடும் சமூக ஆர்வலர் சங்கரபாண்டி சற்று வித்தியாசமாக வாக்காளர்களுக்கு அல்வா பொட்டலங்களைக் கொடுத்து பிரச்சாரம் செய்கிறார்.
ஜெயிப்பதற்கு முன்னரே அல்வாவா என்று நினைக்கலாம். ஆனால்,
அவர் அல்வா கொடுப்பது வாக்காளர்களுக்காக அல்ல ஓட்டுக்காக எந்த வேட்பாளராவது பணம் கொடுத்தால் அந்த வேட்பாளருக்கு அல்வாவை கொடுங்கள் என்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதனை செய்து வருகிறார். இந்த உலகத்தில் இலவசமாக எதுவுமே கிடைக்காது என்றும் அவர் கூறுகிறார்.
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால் மக்கள் கேள்வி கேட்கும் உரிமையை இழந்துவிடுவார்கள் என்று குறிப்பிடும் சங்கரபாண்டி, தேர்தலுக்கு முன்னர் கிடைக்கும் சொற்ப பணத்தை விட வளர்ச்சியைத் தரும் வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
மக்களுக்கு மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட பொருட்களையும் விநியோகித்து கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் சங்கரபாண்டி, தன்னுடைய தேர்தல் சின்னமோ அல்லது எனக்கு வாக்களியுங்கள் என்றோ வலியுறுத்தாத துண்டுபிரசுரங்களை மக்களிடம் விநியோகித்து வருகிறார்.
மக்கள் தனக்கு ஓட்டு போடாவிட்டாலும் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் இருக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும் சரியான வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
2. ‘எனக்கு ஓட்டு போட வேண்டாம்’
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று மக்களை வாக்குறுதிகளால் குஷிபடுத்தி வரும் நிலையில் திருச்சி மண்ணச்சநல்லூரில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சுதா வித்தியாசமாக ‘எனக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள்’ என்ற வசனம் மூலம் வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறார்.
34 வயது பிபிஏ பட்டதாரியான சுதாவிற்கு தேர்தலில் லேப்டாப் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக தனது தனி பாணியில் வாக்கு சேகரித்து வரும் சுதா,
தயவு செய்து எனக்கு ஓட்டு போட்டுவிடாதீர்கள், அப்படி ஓட்டு போட்டால் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என்று விநோத துண்டுசீட்டுகளை பிரசுரம் செய்து வருகிறார். ஓட்டு போடாத அனைவருக்கும் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் என்பது தான் அதில் ஹைலைட்.
தான் வெற்றி பெற்றால் தொகுதிக்கு பயனுள்ள திட்டங்களைக்கொண்டு வருவேன் என்று உறுதியளித்து வருகிறார். எதிர்மறை பிரச்சாரம் வாக்காளர்களை ஈர்த்து தனக்கு வாக்களிக்க வைக்கும் என்று கூறும் சுதா, என்னுடைய வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவே என்றாலும் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார், அனைத்து மூத்த குடிமக்களுக்கு பென்ஷன் உள்ளிட்ட தனது வாக்குறுதிகள் வாக்காளர்களை ஈர்க்கும் என்கிறார்.
3.‘நிதி திரட்டும் வேட்பாளர்’
வாக்குப்பதிவிற்கு சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக டிஜிட்டல் பரிவர்த்தணையில் பணம் அனுப்பியும், கரண்ட் கட், கையில் லட்டு என்றும் பிரதான கட்சிகள் வாக்காளர்களைக் கவர அரும்பாடு பட்டு வருகின்றன. ஆனால் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மணிராஜ் வித்தியாசகமாக வாக்காளர்களிடம் தேர்தல் நிதி திரட்டி வருகிறார்.
பம்ப்செட் தொழில் அமைப்பைச் சேர்ந்த மணிராஜிற்கு ஸ்பேனர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் மத்தியில் வாட்ஸ் அப் மூலம் நிதி திரட்டி வருகிறார் வேட்பாளர் மணிராஜ்.
“நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் தொழில்முனைவோராக வளர்ந்துள்ளேன். தற்போது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த போர்களத்தில் வெற்றி பெற நல்ல மனம் படைத்தோர் பொருளாதார ரீதியாக தேர்தல் நிதி அளித்து உதவ வேண்டும்,” என்று கூறி தனது வங்கிக் கணக்கு எண்ணையும் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியாக வெளியிட்டிருக்கிறார் இவர்.
4. டம்மி 2000 ரூபாய் நோட்டு பிரச்சாரம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மயில்வாகனன் மக்களின் தேவைகளை நூதனமான முறையில் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை விளம்பரப்பதாகைகள் மூலம் வெளியிட்டு, தனக்கு வாய்ப்பு அளித்தால் இவை அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்து வாக்கு சேகரித்தார்.
மேலும், ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2000 ரூபாய் டம்மி நோட்டுகளை மக்களிடம் அளித்தார். அந்த நோட்டுகளில் எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்றும் அச்சடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
5. 10 கி.மீ நடை பிரச்சாரம்
எப்போ தான் இந்த தேர்தல் பிரசாரங்கள் எல்லாம் முடியுமோ என்று நாம் புலம்பும் அளவிற்கு ஆட்டோக்களின் பேரொலி, தொண்டர்களின் இருசக்கர வாகன பேரணி, தலைவர்கள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்களின் வருகையென்றால் வரிசை கட்டும் வாகனங்கள் மற்றும் பட்டாசு ஒலி என்று ரகளை பறக்கும்.
ஆனால் சப்தமில்லாமல் தினசரி நடைபிரச்சாரத்தின் மூலம் வாக்கு சேகரித்து வருகிறார் கோவையில் வேட்பாளர் ஒருவர். கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் சமூக செயற்பாட்டாளரான வழக்கறிஞர் லோகநாதன் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
ஆர்.டி.ஐ மூலம் பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ள இவர், மக்களிடம் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறுகிறார். தினசரி 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று பிரசாரம் செய்து வரும் இவருக்கு தானாகவே பிரசாரத்துக்கு கூட்டம் கூடிவருகிறது.
“ஊழல் தலைவிரித்தாடும் அரசியலில் பலரும் வாக்களிப்பதில்லை. சிலர் நோட்டாவுக்கு வாக்களித்துவிடுகின்றனர், ஓட்டை வீணாக்காமல் நல்ல வேட்பாளரை தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும். எந்த வேட்பாளருமே இன்றைய தினத்தில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பதில்லை, ஆதலால் அவர்களால் மக்களின் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ள முடியாது,” என்றும் கூறுகிறார் லோகநாதன்.