வெற்றி முக்கியமல்ல: தோல்வி புதிதல்ல: தேடித் தேடி தேர்தல்களில் போட்டியிடும் ‘தேர்தல் மன்னர்கள்’
தேர்தலில் வாக்களிப்பது மட்டுமல்ல, ஜெயித்தாலும், தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் நடைபெறும் எல்லா தேர்தல்களிலும் கட்டாயம் போட்டியிடுவோம் எனச் சிலர் களமிறங்கி தேர்தல் களத்தை கலக்கி வருகின்றனர்.
ஓர் நாட்டின் ஜனநாயகத் திருவிழா தேர்தல்தான். இதன் மூலம்தான் மக்கள் தங்களுக்குத் தேவையான கட்சியை ஆட்சியில் அமர்த்தி, தங்களை யார் ஆள வேண்டும் என முடிவு செய்கினறனர். தேர்தல்களில் மக்கள் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தேர்தலில் வாக்களிப்பது ஓவ்வொரு குடிமகனின் உரிமை மட்டுமல்ல, கடமையும்கூடத்தான் எனத் தெரிவித்து வருகிறது.
ஆனால் தேர்தலில் வாக்களிப்பது மட்டுமல்ல, ஜெயித்தாலும், தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் நடைபெறும் எல்லா தேர்தல்களிலும் கட்டாயம் போட்டியிடுவோம் எனச் சிலர் களமிறங்கி தேர்தல் களத்தை கலக்கி வருகின்றனர். அப்படிப்பட்ட சில தேர்தல் மன்னர்களைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
தேர்தலில் அசரா நாயகன் ‘பத்மராஜன்’
தமிழக மக்களால் தேர்தல் மன்னன் என்று செல்லமாக அழைக்கப்படும் கே. பத்மராஜன், சேலம் அருகே மேட்டூரைச் சேர்ந்தவர். ஓமியோபதி மருத்துவரான இவர், தமிழக முன்னாள் முதல்வர்கள் மட்டுமன்றி, இந்திய அளவில் பெரும்பாலான முக்கியத் தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு இருக்கிறார். இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் தொடங்கி, உள்ளாட்சித் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டவர்.
இவர், கே.ஆர்.நாரயணன் முதல் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரை 5 குடியரசுத் தலைவர்களையும், ஷெகாவத் முதல் வெங்கய்யா நாயுடு வரை 5 குடியரசுத் துணைத் தலைவர்களையும், நரசிம்மராவ் முதல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரை 4 பிரதமர்களை எதிர்த்து இந்திய அளவில் பல்வேறு தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
இதேபோல, தமிழக முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, ஆந்திராவில் ராஜசேகரரெட்டி, கேரளத்தில் ஏ.கே.அந்தோணி, வயலார் ரவி, கருணாகரன், கர்நாடகாவில் பங்காரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, புதுச்சேரியில் நாராயணசாமி ஆகியோரை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார்.
1988ஆம் ஆண்டுமுதல் இதுவரை போட்டியிட்ட எந்த தேர்தலிலும் இவர் வெற்றி பெறாவிட்டாலும், இவர் தன் முயற்சியைக் கைவிடவில்லை. தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் களத்திலும் இவர் குதித்துள்ளார்.
இதுவரை, 200க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டுள்ள இவர், 215வது முறையாக இவரது சொந்த தொகுதியான மேட்டூரிலும், 216வது முறையாக தமிழக முதல்வரை எதிர்த்து எடப்பாடி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
மேலும், கேரள முதல்வரை எதிர்த்து வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் ஏராளமான தேர்தல்களில் போட்டியிட்டிருந்தாலும், இதுவரை எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை.
”வெற்றி பெற விரும்புவதும் இல்லை. வெற்றியின் சுவை அதிகம், அதனால் எல்லோரும் வெற்றி பெறவே விரும்புகின்றனர். ஆனால் தோல்வியைத் தாங்க கடும் மனஉறுதி வேண்டும். அதை இறைவன் எனக்கு அளித்திருப்பதால், நான் தோல்வி அடையவே விரும்புகிறேன்,” என்கிறார் பத்மராஜன்.
மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவிக்கவே, அன்றே சென்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து விட்டு வந்து விட்டார் பத்மராஜன். இவ்வாறு ஏராளமான தேர்தல்களில் போட்டியிட்டதால், இவர் லிம்கா மற்றும் கின்னஸ் சாதனைப் புத்தகங்களிலும் இடம் பிடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் மன்னன் ’மன்மதன்’
இவரைப் போலவே ராஜபாளையம் பகுதி மக்களால் தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் மன்மதன், தனது 50வது வேட்பு மனுவை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே நக்கனேரியைச் சேர்ந்தவர் மன்மதன் (57). காவலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு தெய்வானை என்ற மனைவியும், மோகன் ஸ்டாலின் ராஜ், மதன வனராஜ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இவர், 1989 முதல் 2020 வரை பல்வேறு தேர்தல்களில் போட்டியிட 49 முறை மனுத் தாக்கல் செய்துள்ளார். தற்போது நடைபெற உள்ள 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட இவர் 50வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
இவரும் பத்மராஜனைப் போலவே பிரபலமானவர்கள் பலரை எதிர்த்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டவர்.
மன்மதன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, டிடிவி தினகரன், உஷா ராஜேந்தா், முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலம், சட்டப் பேரவை முன்னாள் தலைவர் காளிமுத்து உள்ளிட்ட தலைவர்களை எதிர்த்து மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர். கடந்த 2014 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவும் வேட்புமனு தாக்கல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்களிப்பது என்ற தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றவே நிறைய பேர் யோசித்துக் கொண்டு, ஓட்டுப் போட போகாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், ஓவ்வொரு தேர்தலிலும் சளைக்காமல் வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரபலங்களை எதிர்த்து போட்டியிட்டு, அதில் வெற்றியோ, தோல்வியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த தேர்தலை ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த தேர்தல் மன்னர்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, போட்டியிடுவதும் எங்களின் உரிமை மற்றும் கடமைதான் என மார்தட்டிக்கொள்கின்றனர்.