தமிழக இறால் வளர்ப்பு விவசாயிகள் ஏற்றுமதி சந்தையை அணுக உதவும் சென்னை நிறுவனம்!
'அக்வா கனெக்ட்' 'Aqua Connect' யதேச்சையாகவே உருவானதாக தெரிவிக்கிறார் அதன் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ராஜமனோகர் சோமசுந்தரம்.
ராஜ் என அழைக்கப்படும் இவர் ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவர். இவர் நுகர்வோர் மொபைல் மற்றும் இணையம் பகுதியில் ஹெக்ஸோலேப்ஸ், சோஷியோலேப்ஸ் ஆகிய இரு நிறுவனங்களை நடத்தி வரும் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவர். 2017-ம் ஆண்டு சென்னையிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவரது சொந்த ஊரான சிதம்பரத்திற்கு சென்றுகொண்டிருந்தார். சக பயணி ஒருவர் தொலைபேசியில் விலை குறித்து பேரம் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தார்.
“விலை என்கிற வார்த்தையை மட்டும் ஆறு, ஏழு முறை பயன்படுத்தினார். ஆனால் எதைப் பற்றி பேசுகிறார் என்பது தெரியவில்லை. பின்னர் அவரிடம் நான் கேட்டபோது அவரது குடும்பத்திற்கு சொந்தமான இறால் தொழிற்சாலை 20 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும் விவசாயிகளுக்கு நல்ல விலையில் கிடைப்பது சிக்கல் நிறைந்ததாக இருப்பதாக குறிப்பிட்டார்,” என ராஜ் யுவர் ஸ்டோரியிடம் தெரிவித்தார்.
அந்த சக பயணியின் பெயர் சஞ்சய் குமார். இன்று இவர் அக்வா கனெக்ட் இணை நிறுவனர்கள் மூவரில் ஒருவர். ராஜ் மற்றும் சஞ்சயுடன் வங்கியாளராக இருந்து தொழில்முனைவராக மாறிய சண்முக சுந்தர ராஜ் இணைந்துகொண்டார். இவர்கள் மூவரும் இணைந்து 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் நிறுவனத்தை துவங்கினர்.
ஓராண்டு கழிந்த நிலையில் ’அக்வா கனெக்ட்’ தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச பகுதிகளில் உள்ள 1,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சுமார் 3,000 கடல்சார் உயிரினங்களின் பண்ணைகளைக் கட்டுப்படுத்துகிறது. 600-க்கும் மேற்பட்ட விவசாயிகளைச் சென்றடைந்து தெற்காசியாவில் மிகப்பெரிய கடல்சார் உயிரின வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நெட்வொர்காக உருவாகியிருப்பதாக கடல்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் (Coastal Aquaculture Research Institute-CARI) குறிப்பிடுகிறது.
விரைவில் குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளிலும் ஆந்திரவில் கூடுதலாக பகுதிகளில் (இந்தியாவில் இறால் உற்பத்தியில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கும் பகுதி) விரிவடையவும் அக்வா கனெக்ட் திட்டமிட்டுள்ளது.
மீன் சந்தையை ஒழுங்குபடுத்துதல்
அக்வா கனெக்ட் எவ்வாறு செயல்படுகிறது?
இந்தியாவில் விவசாயம் தொடர்பான பல்வேறு பகுதிகளைப் போலவே கடல்சார் உயிரின வளர்ப்புப் பண்ணை, அதாவது இறால்கள், நண்டுகள், சிப்பியினம், மற்ற உண்ணத்தக்க நீர்வாழ் உயிரினங்களை வளர்க்கும் நடவடிக்கைகளும் ஒழுங்குப்படுத்தப்படாமலேயே உள்ளது. இடைத்தரகர்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலான நேரங்களில் விவசாயிகள் தங்களது விளைச்சலுக்கு தகுந்த பலனை அடையத் தடையாக உள்ளனர்.
விவசாயிகள் பெரியளவிலான, லாபகரமான சந்தைப்பகுதிகளை அணுகுவது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் சிறந்த விவசாய நடைமுறைகள், நவீன கடல்சார் உயிரின வளர்ப்பு உத்திகள், ஏற்றுமதி சந்தையில் காணப்படும் தேவைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாததுமே ஒரு விதத்தில் இதற்குக் காரணமாக அமைகிறது.
ராஜ் கூறுகையில்,
”எல்லோரும் எல்லோருடனும் பேசுகின்றனர். இது உண்மையிலேயே மீன் சந்தைதான். இந்த வர்த்தகத்தின் இயல்பே இதுதான். விவசாய நடைமுறைகளை ஒழுங்குப்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு சிறப்பான மதிப்பை வழங்க விரும்புகிறோம்,” என்றார்.
சென்னையைச் சேர்ந்த அக்வா கனெக்ட், தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்நேர பண்ணை கண்காணிப்பு தீர்வுகள், ஆலோசனைகள், கடல்சார் உயிரின வளர்ப்பு சார்ந்த நிபுணத்துவம், கடலோர விவசாயிகள் ஏற்றுமதி சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இறால் இனப்பெருக்கம், குளம், சந்தைப்பகுதி என முழுமையான மதிப்பு சங்கிலியை ஒழுங்குபடுத்துகிறது. விற்பனையாளர்கள், சப்ளையர்கள், விவசாய இடுபொருள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் போன்றோருடன் விவசாயிகளை இணைக்கிறது.
13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஸ்டார்ட் அப் தண்ணீர் கண்காணிப்பு தீர்வு வாயிலாக கிடைக்கும் தரவுகள் மற்றும் நுண்ணறிவுகளை வழங்கி அடைக்காப்பகங்கள் இனப்பெருக்க சுழற்சியை திறம்பட திட்டமிடவும் உதவுகிறது. இதன் காரணமாக விளைச்சல் சிறப்பாக இருப்பதுடன் கழிவுகளின் அளவும் குறைந்து மதிப்பு சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள செயல்பாட்டு செலவினை குறைக்கிறது.
இடைத்தரகர்களை இணைத்துக்கொள்ளுதல்
தமிழ்நாட்டின் 99 சதவீத கடல்சார் உயிரின வர்த்தகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள, பிரச்சனை தரும் இடைத்தரகர்களை இணைத்துக்கொண்டுள்ளதே அக்வா கனெக்டின் மிகப்பெரிய சாதனையாகும்.
”இடைத்தரகர்களே அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றனர். இவர்களுடன் அனைவரும் பேசுகின்றனர். விவசாயிகள் சுரண்டப்படுகின்றனர். ஆகவே அவர்களையும் இணைத்துக்கொள்ளும் வழியை ஆராயவேண்டியிருந்தது,” என்றார் ராஜ்.
அக்வா கனெக்டின் பண்ணை தரவுகளை படம்பிடிக்கும் இடம் சார்ந்த செயலியை விவசாயிகள் ஏற்றுக்கொள்வது குறைவாகவே உள்ளது. ஏனெனில் அவர்களுக்கு உள்ளூர் டிஜிட்டல் உதவியாளர் தேவைப்படுவதாக அக்வா கனெக்ட் தெரிவிக்கிறது. டூல்களை பயன்படுத்துவதிலும், பண்ணை கண்காணிப்பிலும், தரவுகளை பதிவுசெய்வதிலும் விவசாயிகளுக்கு உதவ இந்த ஸ்டார்ட் அப் இடைத்தரகர்களை இணைத்துக்கொண்டுள்ளது.
ராஜ் விவரிக்கையில்,
“ஆரம்பத்தில் இடைத்தரகர்கள் மறுப்பு தெரிவித்தனர். எனவே எங்களது தொழில்நுட்பத் தீர்வுகளை ஏற்றுக்கொண்டு பண்ணைகளில் பயன்படுத்துமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டோம். மெல்ல நம்பிக்கை உருவானது. இடைத்தரகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் அவர்களையும் இணைத்துக்கொள்ள முயன்று வருகிறோம். அவர்களும் தீர்வில் பங்களிக்கலாம்,” என்றார்.
”மேலும் விவசாயிகள் செயலியைக் காட்டிலும் நேருக்கு நேர் தொடர்புகொள்ளவே விரும்புகின்றனர் என்பதை உணர்ந்தோம்,” என்றார். இருப்பினும் சில சவால்கள் நீடித்தன.
சந்தை நிலவரம்
கடல்சார் உயிரின வளர்ப்பு சார்ந்த வர்த்தகம் கடன் அடிப்படையில் இயங்கி வருகிறது. விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த போராடுகின்றனர். நிதி வழங்கும் நிறுவனங்களும் முறைசாரா பிரிவிலேயே செயல்படுவதால் கண்டறிதல் பிரச்சனையாக மாறுகிறது. அக்வா கனெக்ட் விவசாயிகளுக்கு ஆவணங்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட உள்ளது. விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கப்படுவதை உறுதிசெய்ய இந்த ஸ்டார்ட் அப் பல்வேறு ஏற்றுமதியாளர்களுடன் பணிபுரிந்து வருகிறது.
”ஏற்றுமதி சந்தையிலும் கடும் போட்டி நிலவுகிறது. விவசாயிகளுக்கு தங்களது விளைச்சலுக்கு யார் சிறப்பான விலையை வழங்குவார்கள் என்பதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் நிலவுகிறது. அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது,” என்றார் ராஜ்.
தற்சமயம் அமெரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் உள்நாட்டு கடல்சார் உயிரின வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக விளங்குகிறது. அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் இதில் இணைகிறது. ஆசிய சந்தைகள் இன்னும் சிறப்பிக்கத் துவங்கவில்லை. இந்தியாவில் இருந்து செய்யப்படும் இறால் ஏற்றுமதியின் மதிப்பு ஆண்டிற்கு 5.6 பில்லியன் டாலராக துறை சார்ந்த மதிப்பீடுகள் தெரிவிக்கிறது. ”இத்துடன் உள்நாட்டு பயன்பாட்டிற்கு ஒரு பில்லியன் டாலரையும் சேர்த்தோமானால் இந்த மிகப்பெரிய சந்தையில் வாய்ப்புள்ளது,” என்றார் ராஜ்.
AquaBrahma, IntensAquatica போன்ற நிறுவனங்களுடன் அக்வா கனெக்ட் போட்டியிடுகிறது. ஆனால் தாங்கள் மட்டுமே முழுமையான கடல்சார் உயிரின வளர்ப்பு பண்ணை தீர்வுகளை வழங்குவதாக அக்வா கனெக்ட் தெரிவிக்கிறது. ராஜ் கூறுகையில்,
“நாங்கள் வழங்கும் ஒரு சில தீர்வுகளை மற்ற நிறுவனங்கள் வழங்குகின்றனர். சந்தையில் எங்களைப் போன்றே மேலும் 4-5 நிறுவனங்கள் செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்திருந்தாலும் தற்சமயம் எங்களுக்கு போட்டியாளர்கள் யாரும் இல்லை,” என்றார்.
நிதி மற்றும் சந்தை வாய்ப்பு
மிகச்சிறிய அளவில் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளோம். இந்தியாவில் 1,36,000 ஹெக்டர் நிலத்தில் இறால் வளர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 1.1 சதவீதம் அக்வா கனெக்ட் நெட்வொர்க் பங்களிக்கிறது.
“நாங்கள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க விரும்புகிறோம்,” என்றார் ராஜ்.
நிதி சுற்றுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவை அக்வா கனெக்ட் மற்ற மாநிலங்களில் விரிவடையப் பயன்படுத்தப்படும். பெயர் அறிவிக்கபடாத முதலீட்டாளர் சீட் நிதியாக 130000$ முதலீடு செய்ய உள்ளார். இது நார்வேஜியன் சீஃபுட் இன்னோவேஷன் க்ளஸ்டரின் ஹாட்ச் ஆக்சலரேட்டர் ப்ரோக்ராமின் ஒரு பகுதியாக பெறப்பட்ட ப்ரீ-சீட் நிதித்தொகையுடன் கூடுதலாக உயர்த்த உள்ள நிதியாகும்.
”நெதர்லாந்தைச் சேர்ந்த விசி எங்களுக்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது,” என்றார் ராஜ்.
அக்வா கனெக்ட் கடல்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தால் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடல்சார் உயிரின வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவரையும் சென்றடையும் விதத்தில் ப்ரோக்ராம்களை உருவாக்கி நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது. இது ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ஒத்ததாகும்.
”அடுத்த இரண்டாண்டுகளில் தற்போதைய செயல்பாடுகளை எளிதாக ஐந்து மடங்குகளாக்க முடியும். மெட்ரோக்களில் உள்ள விற்பனையாளர்களைக் கண்டறிந்து உள்ளூர் சந்தை வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறோம். அங்குதான் சிறந்த விலை கிடைக்கும்,” என்றார் ராஜ்.
ஆங்கில கட்டுரையாளர் : சோஹினி மிட்டர் | தமிழில் : ஸ்ரீவித்யா