நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவு; வாக்கு சதவீதம், விறுவிறுப்பான சம்பவங்களின் தொகுப்பு!
தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. சுமார் 1.13 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கியது.பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
கள்ள ஓட்டு, ஹிஜாப், வாக்குப்பதிவு இயந்திர கோளாறு, பூத் ஏஜெண்டுகள் தகராறு என பல்வேறு சலசலப்புகள் இருந்தாலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு:
சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று வாக்களித்தார். செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தேனிமாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு வாக்குச்சாவடி அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை பதிவு செய்தார்.
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞர் அணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தனது மனைவி கிருத்திகாவுடன் சென்று வாக்களித்தார். சென்னை மந்தைவெளியில் உள்ள பள்ளியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனைவி மற்றும் மகனுடன் குடும்பமாக சென்று ஜனநாயக கடமையாற்றினார்.
சென்னை மாநகராட்சி 113வது வட்டம் தியாகராய நகரில் உள்ள வித்யோதயா பள்ளியில் விகே சசிகலாவும், சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், தத்ததமது வாக்குகளை பதிவு செய்தனர்.
ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி சீமானும், விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிய மகளிர் அணித்தலைவி பிரேமலதா விஜயகாந்தும் வாக்களித்தனர். சென்னை அண்ணாநகரில் அமைக்கப்பட்டிருந்த 101வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார். பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியான வானதி ஸ்ரீனிவாசன், கோவை சி.எம்.எஸ். பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மகனுடன் சென்று வாக்களித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி ஜான்சிராணியுடன் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்த ஜனநாயக கடமையாற்றினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
வாக்களித்த அமைச்சர்கள்:
திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிராப்பட்டி சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் தனது தாயாருடன் சென்று வாக்களித்தார்.
தூத்துக்குடியில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார். பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவடி மாநகராட்சியில் 39வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடியில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்தார். சென்னை கிண்டி லேபர் காலனியில் லையன்ஸ் கிளப் பள்ளியில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வாக்களித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 6வது வார்டுக்குட்பட்ட ஊராட்சி தொடக்கப் பள்ளியில் இருந்த வாக்குச்சாவடியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்பத்துடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாராபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையாற்றினார்.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 27வது வார்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இருந்த வாக்குச்சாவடியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு செலுத்தினார். நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு வாக்குச்சாவடியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். விழுப்புரம் சண்முகநகர் 36வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குடும்பத்தாருடன் சென்று வாக்களித்தார். ஊரகதொழில்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரிலும், மதுரை ஐயர்பங்களாவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியும் வாக்களித்தனர்.
திரைப்பிரபலங்கள்:
நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து ரசிகர்கள் புடைசூழ வாக்குச்சாவடிக்குச் சென்று முதல் ஆளாக தனது ஜனநாயக கடமையாற்றினார். அப்போது அவரை காண வேண்டும் என்ற ஆவலுடன் ரசிகர்கள் பட்டாளம் முண்டியடித்ததால் வாக்குச்சாவடிக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீடியா மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கோரினார். மேலும், விஜய் சிவப்பு கலர் காரில், கருப்பு கலர் மாஸ்க் அணிந்து வந்து வாக்குசேகரித்தது சோசியல் மீடியாவில் வைரலானது.
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். தியாகராய நகர் 117வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் வாக்களித்தார். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிம்பு தற்போது மும்பையில் இருப்பதால் வாக்களிக்க வரமுடியவில்லை என விளக்கமளித்தார்.
கோடம்பாக்கத்தில் சென்னை நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் கவிஞர் வைரமுத்து வாக்களித்தார். அரும்பாக்கம் நடிகர் மன்சூர் அலிகான் வாக்களித்தார். சென்னை மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில் நடிகை குஷ்பு தனது வாக்கினை செலுத்துனார்.
இருப்பினும் ரஜினிகாந்த், அஜித், விஜயகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், திரிஷா, வடிவேலு, ஆர்யா உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகைகள் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவில்லை.
கடமை தவறாது கவனம் ஈர்த்த வாக்காளர்கள்:
இன்று நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆகியோரை மிஞ்சும் வகையில் சுவாரஸ்யமாக சிலர் தங்களது ஜனநாயக கடமையாற்றியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அப்பாராவ் பகுதியை சேர்ந்த லியாகத் ஷெரிப் என்பவரது மகன் இம்தியாஸ் ஷெரிப் ஜனநாயக கடமையை நிறைவேற்றுதற்காக இன்று அமெரிக்காவில் இருந்து பறந்து வந்து வாக்களித்தார். சர்க்கார் பட பாணியில் தேர்தலுக்காக வெளிநாட்டில் இருந்து பறந்து வந்து இளைஞர் ஒருவர் வாக்களித்த சம்பவம் சோசியல் மீடியா, ஊடகங்களில் கவனம் ஈர்த்தது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருப்பத்தூரின் இடையப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவர், ஜோலார்பேட்டை நகராட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 8ஆவது வார்டு வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களித்தார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32 வயதான நபர் கவச உடையுடன் வந்து வாக்களித்தார். பாலக்கோட்டில் இருந்து சேலம் செல்லும் பேருந்து ஓட்டுநரான ஸ்ரீதர் என்பவர் பொம்மிடி அருகே பாதிவழியிலேயே பேருந்தை நிறுத்திவிட்டு, வாக்குச்சாவடிக்குச் சென்று தனது ஜனநாயக கடமையாற்றினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மகேந்திரன் என்பவர் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வந்தால் மட்டுமே வாக்களிப்பேன் என 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்களிக்காமல் இருந்து வந்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், 45வது வயதில் முதன் முறையாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.
திண்டுக்கல்லில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற செவிலியரான அம்சா என்பவர் ஆம்புலன்ஸ் வாக்குச்சாவடிக்குச் சென்று, வாக்குச்சாவடிக்குள் ஸ்டிரெட்செரில் சென்று வாக்களித்து விட்டு திரும்பினார். திருப்பூர் பத்மாவதிபுரத்தைச் சேர்ந்த ஜானகி ராமன் என்ற இளைஞர், கால்முறிவுடன் ஆம்புலன்ஸ் மூலம் சென்று வாக்களித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகராட்சிக்குட்பட்ட 13வது வார்டில் 102 வயதான ரங்கநாயகி பாட்டியும், ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் 18வது வார்டில் டானா என்ற 100 வயதான பாட்டியும், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜனஹள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டில் மங்கையம்மாள் என்ற 105 வயது பாட்டியுல் வாக்களித்தனர். சென்னை கோடம்பாக்கத்தில் 117வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் ரகுநாத் என்ற முதியவர் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் சென்று வாக்களித்தார்.
மதுரை ஹிஜாப் சர்ச்சை:
மேலூரில் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்து, வாக்களித்து வருகை புரிந்தனர். இந்நிலையில், அங்கிருந்த பாஜக முகவரான ஹரி ராஜன் என்பவர், அனைத்து இஸ்லாமிய பெண்களும் ஹிஜாப்பை கழட்டிவிட்டு, வாக்களிக்க செல்ல வேண்டும் என்றும், அப்போது தான் வாக்காளர் பட்டியலில் இருக்கும் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்க முடியும் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பட்டியலை நாங்கள் பரிசோதித்தால் மட்டும் போதும், ஹிஜாபை கழட்ட வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தனர். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத கிரிராஜன் அதிகாரிகள் மற்றும் பிற கட்சி முகவர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றினர்.
வாக்குப்பதிவு நிறைவு:
காலை 7 மணிக்கு தொடங்கிய பொது வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நேரம் 5 மணியுடன் நிறைவு பெற்றது. அதன் பின்னர், 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 5 மணிக்கு முன்பாகவே வந்து காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 35.34 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டது. 3 மணி நிலவரப்படி 47.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநகராட்சிகளில் - 39.13%, நகராட்சிகளில் - 53.49%, பேரூராட்சிகளில் - 61.38% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னையைப் பொறுத்தவரை காலை 9 மணி நிலவரப்படி 3.96 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 17.88 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 23.42 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. 3 மணி நிலவரப்படி 31.89 சதவீத வாக்குகளும், 5 மணி நிலவரப்படி 41.68 சதவீத வாக்குகளும் பதிவாகின.
சென்னையைப் பொறுத்தவரை 5 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 61 லட்சத்து 31 ஆயிரத்து 112 வாக்காளர்களில் 25 லட்சத்து 73 ஆயிரத்து 241 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் குறைந்தபட்சமாக 43.59 சதவீத வாக்குகளும், தருமபுரியில் அதிக பட்சமாக 80.49 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 76.86 சதவீத வாக்குகளும், கரூரில் 76.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.